இரவு
இரவினது மெளனத்தைக் கலைத்தது
பெருமூச்சினோசை.
கருமிருளில் புதைந்துளன
கணக்கற்ற ஏக்கங்கள்.
கவியும் குளிரில் களைத்து அடங்கிடுது
அவிந்த இதயத்தின் அனல்.
மெதுவாய்
அசைகின்ற காற்றில்
அடியுண்டு போம் அமைதி.
திசைகள் மறைந்தன,
தெருக்கள் அமிழ்ந்தன,
விசைகள் ஒடுங்கின,
விதிகள் தகர்ந்தன,
அசைவற்ற இரவுள் அனைத்தும்
உறைந்துபோக…
நனவு இளைத்துறங்க…
நம்பிக்கை சோர்ந்திருக்க…
கனவுகளைக் கரைசேர்க்கும் கலங்கரையாய்
விண்மீன்கள்!
துறைமுகமாய் நிலவு!
துளித்துளியாய் இரா வடிந்து
மறைந்து விடிவு வரும் வரையிலும்
மர்மமாய்…
மரணத்தின் ஒத்திகையாய்…
வளைக்கிறது துயில்; இந்த
இரவின் மறைவினையும்
பார்த்திருக்கும் காலக்கண்!