என்ன செய்யப் போகிறோம்?

காலகாலமாக நம்மைக் காத்திருந்த தெய்வமும்
கையை விட்டகன்றதெங்கு? மாய்கிறோமே நித்தமும்.
ஆலகாலம் உண்டு அன்று அன்பர்உயிர் மீட்டதும்
அற்புதம் புரிந்ததும் மறந்ததேன்…அதன் மனம்?

மேய்ப்பர் நூறு…நாமோ பத்து என்ன செய்து கொள்ளுவோம்?
மீட்பர் என்று யாரும் இல்லை எங்கு சென்று சொல்லுவோம்?
நாய்கள் போல நாமலைந்து நடுத்தெரு உழல்கிறோம்!
நம்..பின் நின்ற இறையும் ஏய்க்க…செல்திசை அறிகிலோம்!

நாங்கள் செய்த குற்றமென்ன தெய்வமேன் கைவிட்டது?
நாம் புரிந்த பாவமென்ன திக்கும் வஞ்சித்திட்டது.
தேங்கி விட்ட வாழ்க்கைக் குட்டை…வெட்டியார் திறப்பது?
தெரியவில்லை கீற்று ஏதும்…இருளில் வாழ்வா மாழ்வது?

யாவரும் சபிக்க இன்று யாம் குனிந்திருக்கிறோம்.
யாவர் எங்கள் சாபம் தீர்ப்பர்…என்று தேடி ஏங்குவோம்.
இலாபம் என்ன எம்மில் காணலாகும் என்றலைபவர்
ஆடும் நாடகத்தில் நாம் அனாதையாய்த் தொலைகிறோம்!

இப்படியே இன்னும் நாட்கள் எத்தனைதான் ஓடுமோ?
எம்மையும் நெறிப்படுத்த எம்மில் யாரும் பூப்பரோ?
செப்படி செய்தேதும் சித்தர் மாரும் தீமை கொல்வரோ?
தெய்வம் கண்திறந்து பார்க்க என்ன பண்ண வேணுமோ?

எம்மை மீள் மதித்து நாங்கள் எம்குறைகள் போக்கணும்.
எங்கள் காலில் நின்று எங்கள் ஏக்கம் தீர்க்கப் பார்க்கணும்.
நம்மை மீட்டெடுக்க வல்லோர் அன்பை யாம் பெற்றாகணும்.
நம்மைத் தெய்வம் நோக்க வைக்க நாங்கள் தான் உழைக்கணும்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply