காற்றினது காலம்

காற்றெழுந்து நன்றாக க் கைகொட்டி
எங்களது
வீடுகட்கு மேலாய்
விரைந்து நடக்கையிலே
நேற்றுவரைக் காய்ந்து வெடித்த நிலம் இந்தக்
காற்றிடம் மருந்துகட்டும்!
காற்றோர் ‘பரிகாரி’
போல் எங்கெங்கிருந்தோ
பொறுக்கி வந்த மூலிகையின்
வாசமும் சுவையும் வைத்து
மருந்துகட்டிப்
போகும்;
மரங்களுக்குக் கிளைகிளையாய்த்
தூசுதட்டும்!
நீண்ட பெருங்கோடை நெருப்பணைக்க
இன்று வந்து
வீசிக் குளிர்ச்சுகந்தம் விசிறும் புதுக்காற்று!
எத்தனை தகிப்பு
இத்தனை நாளும் தான்
பற்றிக்கொண் டிருந்தது?
இன்று ‘காற்றின் பூம்பாதம்’
பட்டுப் படிப்படியாய்த்
தகிப்படங்கிப் போகிறது!
மின்விசிறிக் காற்றில்
வெந்தும் வேகாததுமாய்
நின்றவன் யான்;
அறைவிட்டு வெளிவந்து நீந்துகிறேன்
காற்று அருவியில்!
கரைந்து சுருதி சேர்வேன்
காற்றினது பாடலில்!
இதம்பூசும் காற்றின்
ஊற்றுக்கு எந்த மின்விசிறியும் இணையாய்
நிற்க முடியாதென்றேன்;
“நிச்சயம்” எனச்சொல்லி
“உன்னோடு மட்டும் உட்கார்ந்து கதைக்கேன்…
ஆம்
இன்னும் எனக்குவேலை இருக்கு” என்று
கிளம்ப அதன்
மென்மைமிகு ஒத்தடங்கள்
மெய்க்கொதிப்பைத் தணித்திடுது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply