எழுத்தில் வாழ்தல்!

இலைகளாம் எழுத்தாணி பிடித்துக்
கவிதைகளை
வெளிவானில் எழுதி
விரையும் நிதம் காற்று!
இந்தக் கவிதைகள் முகில்களா?
இல்லை ஏதோ
சந்தப் பரிவில் எழும் ஓங்காரமதா?
பறவைகள் அதனோடு பாடத் தொடங்க…
அயற்
கரை உயிர்கள் இரசிக்க…
கைகொட்டிப் பெருங்குரலில்
‘கோரஸ்’ கொடுக்கும்
குதித்து வரும் அலைகள்!
யாருக்காய் இக்கவிதை?
எவர்கட்காய் இப்பாடல்?
ஊர் கேட்க வேண்டும்…
உற்சாக க் கைதட்டல்
வேர்களை அசைக்கவே வேண்டும்…
என ஏதும்
நோக்கங்கள் சிந்தனைகள் இல்லாது;
நுட்பமாய்த் தாம்
ஆக்கும் கவிதைகளை அலைகளும்
பிற உயிரும்
இரசித்தாலே போதுமென்று;
எதைப்பற்றியும் கவலை
எதுவும் படாது;
எண்ணம்போல் வெவ்வேறு
இலைகள் கிளைகளை
எழுது கோல்களாக்கி
வெளிவானில் நிதம் கவிதை
எழுதிடுது மென்காற்று!
சிலவேளை சடசடென்று சந்தமொடும்,
ஆற்றோட்ட
நடையில் பலபொழுதும்,
நாடி நரம்பெல்லாம்
முறுக்கேறும் விதமாய்
முழு ஓசை வீச்சோடும்,
எழுதிடுது கவிதைகளைக் காற்று!
இதைப்போற்தான்…
என்கவியை ஓரிருவர் இரசித்து…
அதைத்தொட்டு
தம்கவியைப் பாடுவதைக் கண்டும்;
வேறு யாரெவர்கள்
கேட்கா திருந்ததற்காய்
கிஞ்சித்தும் கவலையற்றும்;
பாடுகிறேன் என்பாட்டை!
பலன்,நன்மை, குள்ளநோக்கம்,
ஏதும் இதால் கொண்டு
பணம் புகழ் பார்க்கின்ற
ஆசை எதுவுமில்லை!
ஆத்ம திருப்திக்காய்ப்
பாடும் எனைவாழ்த்திக் காலம்
பரிசெதையும்
ஈய்ந்தாலும் ஈயாது விட்டாலும்…
என்கவிதை
கீதையோ குப்பையோ
எதை உலகம் சொன்னாலும்…
நான் எழுதிக் கொண்டிருப்பேன்;
என்எழுத்தில் யான் வாழ்வேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply