அருள் பொழிந்திடு!

ஊர்வெறித்தது! உள்ளங்கள் எலாம்
உள்ளிடிந்துமே அஞ்சுகின்றது!
வேர் விழுதிலும் தொற்றிடும் பிணி
வீழ்த்த…நாள் தொறும் சா மலிந்தது!
சீரளியுமோ நாளை என்று நம்
சிந்தை வேகுது! நல்லைச் சண்முகன்
தேரிலே வெளி வீதி சுற்றலை…
சேர்ந்த சாபங்கள் என்று தீர்வது?

லட்சம் லட்சமாய் பக்தர் கூடியே
ஆர்ப்பரிக்க… நாம் அழுது பாடியே
“அட்ட திக்கிடர் தீர்த்து வையடா
அண்டிடும் பிணி யாவும் ஓட்டடா
கெட்டபேய்களைப் போடு சண்முகா
கிளம்படா” என நேர…தேரிலே
எட்டி ஏறி ஆக்ரோஷனாக வேல்
ஏவுவாய்… ‘அழித்தல்’ புரிகுவாய்!

வந்து வீதியில் ஏங்கும் எங்களின்
மனதில்..’வாலினை ஆட்டும் மும்மல’
ஜந்துகள், எமைச் சூழும் பொய்மைகள்,
தரித்திரங்களை, வேட்டையாடி நீ
பன்னிரண்டு கண்ணால் ஒளி மழை
பாய்ச்சி ‘பச்சையும் சாத்தி’ வாழ்த்துவாய்!
என்ன அற்புதம் என்றுடல் உயிர்
மின்னை ஏற்றிய தாய் ஒளிருவோம்!

இம்முறை பிணி எம்மைச் சுற்றி ஊர்
எங்கும் நின்றிடும்! எண்ணிலா இடர்
தெம்புடன் எழும்! நித்த வாழ்க்கையை
செலவு தின்றிடும்! வீதி நின்றுனை
கும்பிட வழி அற்ற பாவிகள்
குமுற…தேரில் உள் வீதி சுற்றும் நீ
நம்பும் நம்குறை போக்கு….மூடிய
நாற் சுவர் தாண்டி அருள் பொழிந்திடு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply