மாமழையான்!

போயகன்றது வான்மழை -இருட்
பூச்சழிந்தது விண்ணிலே -வெயில்
காய வைத்தது திக்கினை -சுடர்
கைதொடக் குளிர் போனது -நிலம்
வாயை வைத்து உறுஞ்சிடும் -விதம்
மண்ணின் வெள்ளம் வடிந்தது -அட
ஓய்ந்ததோ மழை…ஈரமும் -அதன்
ஓசையும் எனைத் தோய்த்தது!

எங்கிருந்து தான் வந்ததோ -இருள்
எங்கிருந்து கவிந்ததோ? -புதுத்
தங்கம் பூசியதாம் முகில் -வெறும்
தாரைப் பூசிய தானது -திடீர்ச்
சங்க நாதம் முழங்கலாய் -இடி
சாய்த்தது துணிவென்பதை -ஒளி
பொங்க மின்னல் கிழித்தது -மழை
பொத்துக் கொண்டு பொழிந்தது!

எப்பத்தான் எங்கு எப்படி -வரும்
இந்த மாமழை என்பதை -மனம்
செப்புமோ உய்த்து? இல்லையாம் -அதை
செய்யும் வருணனும் எங்குளான்? -எவர்
தப்பு, நன்மையிற் காய் இவன் -மழை
தந்தும் மறைத்தும் கடன் செயும் -பணி
எப்பவும் புரிகின்றனன் -அவன்
எண்ணம் அறிதல்… அவசியம்!

தேடி….வெடித்த திசைகளில் -மழை
சிந்தா தவற்றை ஒதுக்குவான் -வெள்ளம்
மூடிக் கிடக்கும் குடிக்கு மேல் -தினம்
மூன்று முறையும் பொழிகுவான்! -பயிர்
வாடி அழைக்க மறுத்துமே -கடல்
மட்டத்துக்கு உப்பு நீர் கூட்டுவான் -இன்று
நாடாத என்னை நனைக்கிறான் -தீமை,
நன்மைக்கா நானும் அறிகிலேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply