‘யாழ் முழக்கம்’ சஞ்சிகைக்கான நேர்காணல் : த.ஜெயசீலன்

1.நீங்கள் கலைத்துறையில் ஈடுபடத் தூண்டியகாரணி என்ன?
திடீரென்று கிடைத்த ஒரு வாய்ப்பு.எனக்குள் புதைந்திருந்த திறமையை நானே அறிந்து கொண்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சி,அதன் பின் கலைத்துறையில் ஏற்பட்ட இயல்பான விருப்பம்,நல்ல படைப்புகளைப் பயின்றதால் ஏற்பட்ட இரசனை, இரசிப்பினால் தோன்றிய மனநிறைவு, ஆத்மதிருப்தி, என்பன தூண்டிய காரணிகள் என்பேன்.

2.நீங்கள் கலைத்துறையில் சந்தித்த சோதனைகள்,தடைகள் என்பவற்றைக் குறிப்பிடமுடியுமா?
சோதனைகள், தடைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக கலைத்துறையில் குறிப்பாகக் கவிதைத் துறையில் ஈடுபட்டுவருகின்ற போது அன்றாட வாழ்க்கையில் தோன்றுகிற பலசோதனைகள், தடைகள் என்னைத் தடுக்க முற்பட்டிருக்கின்றன. என்றாலும் அணையாத சுடராக என்னுள் தொடர்ந்து எரியும் கலை தொடர்பான உந்துதலும், கலைஞனாக நிலைக்கவேண்டும் என்று இடையறாது என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரலும்.வரும் தடைகளைச் சோதனைகளைத் தாண்டி என்னைக் கலைஞனாக இன்றும் வைத்திருக்கிறது. இதனால் இடைக்கிடை தோன்றும் சலிப்பும், மனத்தடையும் கூட இயல்பாகவே அகன்றுவிடுகிறது.

3.உங்களது முதலாவது படைப்பு எத்தகைய உணர்வலையை உங்களிடம் தோற்றுவித்தது?
எந்தக் கலைஞனுக்கும் தன் முதலாவது படைப்புக்குக் கிடைக்கும் வரவேற்பும் பாராட்டும் வாழ்த்துக்களும் மிகப் பெரும் உற்சாகத்தைத் தரும் என்பதை மறுக்க முடியாது. என் முதற் படைப்பு வரவேற்கப்பட்ட போது எனக்கு முடி சூடியது போன்ற உணர்வு ஏற்பட்டது உண்மை. ஆனால் அந்த உணர்வு தொடர்ந்து தலைக்கனமாக மாறாமற் பார்த்துக் கொண்டேன். அதனால் இன்றும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. எனது படைப்பை நிராகரிப்பவர்களைப் பற்றியும் துளியும் கவலை கொள்ளாமல் நகரமுடிகிறது.

4.உங்களை இத்துறையில் ஊக்குவித்தது யார்? அவ்வாறானால் அவரை உங்களது குருவாகக் கொள்ளலாமா?
என்னை ஊக்குவித்தது ஒருவரல்ல,பலர். அவர்கள் எல்லோரும் எனது வழிகாட்டிகள் தான்.அவர்கள் காட்டிய வழியிலேயே பயணிக்கிறேன். குரு என்பது வேறு.எனது குருநாதரை இன்னும் நான் சந்திக்கவில்லை.

5.உங்கள் இறுதியாக வந்த படைப்பு எது? இப்படைப்பு வெளிவருவதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் எவை?
என் கவிதை – தன்னை வெளிப்படுத்துகின்ற வேளையெல்லாம் நான் என் கவிதைகளைப் பிரசவிக்கிறேன். என் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு பிரசவம் தான். அவை ஒவ்வொன்றும் எனக்குச் சவால்கள் தான். தாய்மார்களுக்குப் புரியும் ஒருபிரசவத்தின் வேதனை,வலி,சவால் என்பன.அப்படிப் பார்த்தால் எனக்கு ஏற்பட்ட பிரசவ வேதனைகள் எண்ணற்றவை. இவற்றை அனுபவித்தபடிதான் என் படைப்புகளைப் பிரசவிக்கிறேன். என்னால் இறுதியாகப் படைக்கப் பட்டபடைப்பும் இவ்வாறானதே. இவற்றில் இறுதியாக பிரசுரமானவை, அரங்கில் ஏறியவை, தொகுப்புநூலாக வெளிவந்தவை சொற்பமானவையே.

6.உங்களது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு உங்கள் கலைப்பயணத்திற்கு வலுச்சேர்க்கிறதா?
‘என்வழிதனிவழி’என்பதுபோல் என் கலைப்பயணமும் தனிவழி தான். இதில் வழித்துணைகள் என்று குடும்பத்தாரைக் கூறமுடியாதெனிலும் அவர்கள் என் வழித்தடைகளாக என்றும் இருந்ததில்லை. அவர்களது ஒத்துழைப்பும் வாழ்த்துகளும்,என் வெற்றிகளில் அவர்களின் பரவசமும் என் பயணத்தை உற்சாகப்படுத்துகின்றன என்பேன்.

7.உங்கள் பதவிநிலை உங்களது கலைப்பயணத்திற்குத் தடையாக இல்லையா?
முற்றுமுழுதான தடை என்று இல்லை. ஆனால் எனது சுதந்திரமான இயங்குகைக்கு அது ஒரு மட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு கலைஞனின் படைப்புலகம் சுயமானதாக, தந்திரமானதாக, எவரது தலையீடுமற்றதாக இருக்கவேண்டும். என் தனிப்பட்ட கருத்துக்கள் எல்லாவற்றையும் என் படைப்புக்களில் பகிர என் பதவிநிலை இடந்தராது என்பது யதார்த்தம். எனது ஒர் படைப்பின் கருத்தை எனது பதவியுடன் எனது வாசகர்கள் பொருத்திப் பார்ப்பதும் தவிர்க்க முடியாதது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.எனவே, என் பதவி சிறுசிறு தடைகளை எனக்கு ஏற்படுத்துகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். என்றாலும் என் முழுமையான கலைப்பயணத்திற்கு தடையாகிறது அது என்றும் கொள்ளமாட்டேன்.அது பல நன்மைகளையும், வாய்ப்புக்களையும், மக்களுடன் நெருங்கி அவர்களின் எண்ணங்களுடன் பழகும் வரத்தையும் வழங்கியிருக்கிறது. மேலும், சொல்லியே ஆகவேண்டும் என்பவற்றை குறியீடுகளாக சொல்லிவிடுவது பெரிய விடயமில்லை.படைப்புகள் காலங்கடந்ததாக, காலத்தை வென்றதாக,மாறும் சந்தர்ப்பத்தில் பதவித் தடைகள் தகர்ந்துபோகும் என நம்புகிறேன்.

8.ஒர் பிரதெசசெயலராக இருந்து கொண்டு மக்களிற்குச் சேவையாற்றும் நீங்கள்,கலைத்துறையின் மூலம் மக்களை எவ்வாறு வழிப்படுத்தலாம் என்று எண்ணுகிறீர்கள்?
இன்று மட்டுமல்ல என்றென்றும், எந்தளவு விஞ்ஞானம் நாகரீகம் வளர்ந்துயர்ந்தாலும்,கலைகளின் அவசியம் இருக்கத்தான் போகிறது. ஏனென்றால் கலைகள் மனிதனின் உணர்ச்சிகளை ஆற்றுப் படுத்துபவை.மனிதகுலம் வாழுமட்டும் மனிதன் உணர்ச்சிமயமானவனாகவே இருக்கப் போகிறான்.எனவே அவனை, அவனின் உணர்ச்சிகளை,ஆற்றுப்படுத்தும் கலைகள் வாழத்தான் போகின்றன. எனினும் அவற்றின் வடிவம், பிரயோகம், பரிமாணம், பயன்பாட்டளவு மாற்றத்திற்கு உள்ளாகலாம்.

நல்ல கலைகளைப் பயில்தல், அவற்றை இரசித்தல்,அவற்றோடு ஊடாடுதல், அவற்றின் உண்மைகளை நீதிகளை அவை காட்டும் வழிகளை உணரந்துதம் வாழ்வைச் செம்மைப்படுத்தல், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியம் என்பேன்.கலைகளோடு புழங்குபவனின் மனம் மென்மையடைகிறது, இதயம் ஈரம் மிகுந்ததாகின்றது, கண்கள் கருணை வயப் பட்டனவாகின்றன. அவன் பிழைகளை பாவங்களைச் செய்ய அஞ்சுவான். நீதி அறங்கள், வாழ்வின் விழுமியங்களை பின்பற்ற முயலுவான், அன்பின் அடிமையாவான். இன்று உண்மையான, நல்ல, வாழ்வை மேம்படுத்துகிற, கலைகளை எல்லோரும் அறிகிறார்களில்லை. இன்றைய தொடர்பு ஊடகங்களில் இலகுவாக கிடைப்பவை, மலினமான இரசனையை வளர்ப்பவை தான் உச்சமான கலைகள் என்ற அபிப்பிராயம் இன்றைய இளைய தலைமுறையிடம் வேரூன்றி விட்டது. அவர்கள் அறிந்தது அவ்வளவே. வரலாற்றில் நல்ல கலைகள் மக்களை ஆற்றுப்படுத்தியதற்கான ஆதாரங்கள் ஆயிரம் உள்ளன. இந்த அடிப்படையில் நல்ல கலைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், அவர்கள் நல்ல கலைகளை பயில வைப்பதன் மூலம் அவர்களுக்கு நல்ல வழிகாட்டலாம் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது.

Leave a Reply