இயற்கையின் கண்ணீர்

கப்பல்களின் சுக்கான்கள்
ஏர்களென உழ…கடலில்
உப்பும் பலகோடி உயிர்களும் நிதம் விளையும்!
கடலின் படைகள் அலைகள் காண்;
அவை நிரையாய்
அடுத்தடுத்துத் தாவி
அண்டிக் கரை…கடலுள்
புகாது தடுக்கும்!
அலைப் படைகளின் வியர்வை
நுரைகளின் உவர்ப்பில் காற்றும் சப்புக் கொட்டும்!
சிறிதும் பெரிதுமான
அலைநாக்குக்களைக் கொண்ட
ஒரு பெரு வாய் -கடலென்றும்…
அவற்றின் ஒலிச்சேர்க்கை
ஓலமே கடலின் ஓயாக் கதறலென்றும்…
ஆகப் பெரிய நாவே ‘சுனாமி’ யென்றும்…
அது நக்க
ஆயிரம் ஆயிரம் ஆருயிர் அழிந்ததென்றும்…
உரைத்தொருவன்,
காற்றை கலக்கும் அலைகள் ஆண்
குறிகள்…அதன்விந்து… நுரைகள்
எனச்சொன்னான்!
கோடி கோடி அலைச்சிறகு அடிக்கும்
கடற்பறவை
ஏன் எழுந்து பறக்குதில்லை இன்னும்?
என்றான் வேறொருவன்!
இரசித்தேன் இவற்றை…
எல்லையற்ற எண்திக்கும்
விரிந்து பரவி விஸ்வரூபம் கொண்டிலங்கும்
கடலின் அழகு அதன்கீர்த்தி மிகப்பெரிதே!
கடல்களிலெம் கண்கள் காணும்
அதிசயங்கள்
சிலதே…
அவற்றுள்ளே திரண்டு வாழும் ஆச்சரியம்
பலதே…
என்னுடைய பாவாலும் அவற்றையெல்லாம்
பாடிவிட முடியாதே…
பாவம் எம் கடல்களிலும்
கூடி…அவற்றைக் குதறி…தினந்தினமும்
சாகடித்துக் கொண்டிருக்கும் சாத்தான்கள்
எவையென்றால்
ஊர் உலகின் குப்பைகளே…
உற்பத்திக் கழிவு, நஞ்சே…

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply