புத்தெழுச்சி யோடு போற்று!

உள்ளத்தினுள்ளே விசக்கடல் -உதட்
டோரமோ தேனென வார்த்தைகள்-பல
கள்ளத் தனங்கள் மனதிலே-பொய்யாய்க்
கடமை புரிவதாய்க் காட்டுதல் -என
கொள்ளை இலாபம் அடித்திட -தங்கள்
குள்ளத் தனங்களைச் செய்திட -நின்ற
‘முள்ளு’ களையும் முருகனார் -காட்டி
மோதி விரட்டிக் கலைக்கிறார்.

“என்னென்ன பாவம் பழிகளைச் -செய்தார்
எங்களின் முன்னோர்” எனும்படி -இன்று
துன்பம் சுமந்திடும் எங்களின் -துயர்,
தோல்வி, உடல் மனச் சோர்வுகள்- தமைத்
தின்று எமைமீட்க வேண்டும் காண்- என
தேடி தினம் வந்து வேண்டுவோர்- பாவம்
கொன்று பழிகள் துடைக்கிறார் -வேலின்
கூர்மையால் நல்லை முருகனார்!

போட்டி, பொறாமை, “யார் மேலென” -பொங்கும்
புன்னெறி, ஆணவம், தீச்செயல் – கையில்
ஆட்சி, அதிகாரம், ஆளணி – என்று
யாரெவர் வந்திடும் போதிலும்- அருட்
சாட்சிமுன் யாவரும் ஓர் சமன்- எனும்
சத்தியம் சொல்லி அடக்குவார் – தினம்
காட்சி கொடுத்துள் அழுக்குகள்- போக்கி
கர்ம வினையும் பொசுக்குவார்!

ஆடம்பரம் இடாம்பீகங்கள்- “என்ன
அள்ளலாம்” என்னும் சுயநலம் -போலி
வேடங்கள், பொய்கள், புரட்டுகள் -கொண்டு
வேறு வியாபாரம் பார்த்திடல் -எனக்
கூடும்… சிலரின் குழப்படி, – வம்பு,
கொட்டம், இவற்றுக்கு நற்பதில் -தந்து
நாடி வரும் உண்மை நண்பரின் -மன
நலிவில் மருந்துகள் பூசுவார்!

காலாதி காலம் திருவிழா -தனில்
கருதும் பழக்க வழக்கங்கள், -அந்தச்
சூழலின் மாற்றம், நடைமுறை -செய்யும்
தொண்டு, புனிதங்கள் பேணுதல் -தமை
யாவரும் ஏற்க…ஒருசிலர் – மீறி
ஆடி… “உரிமை, சுதந்திரம்”- எனப்
பேசுவர்…அன்னார் பிழைகளை – வேலர்
பெற்றோரைப் போலத் திருத்துவார்.

எத்தனை யுத்தம், கொடுஞ் சமர் – அட
எத்தனை பஞ்சம், பசி, தடை -நேற்று
எத்தனை நோய்கள், பிணி, இடர்- வந்தும்
என்றும் நொடியாத் திருவிழா -அதன்
தத்துவம், நன்மை, மகிமைகள் – தரும்
சந்தோஷம், நிம்மதி, நல்வரம் – எண்ணி
புத்தெழுச்சி கொண்டு போற்றுவோம்-நல்லைப்
பூரணனால் ஜெயம் நாட்டுவோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.