மார்கழிச் சுகம்.

வீதி நீரில் குளித்து விறைத்தது
வீசும் காற்றில் குளுமை மலிந்தது
பாதை அசுத்தங்கள் யாவும் அகன்றது
பக்தி வாசமே எங்கும் கமழ்ந்தது
நாத சுரங்கள் தவில்கள் முழங்கிட
நாலு திக்கும்இன் னிசை மழை பெய்தது
‘சோதி வானவன்’ சுற்றி வலம் வர
சொக்கி உள்ளம் சரண்புகுந் துய்தது!

மார்கழிப் பனி மூசிப் பொழிந்திட
வானும் அடிக்கடி பன்னீர் தெளித்திட
ஊர் எழுந்து முழுகிப் புனிதமாய்
உள்ளும் புறமும் சிலிர்க்க…பரவச
ஊர்வலத்தில் கலக்க…இறையருள்
ஊறி எங்கும் பரவ…பஜனையும்
வேத மந்திர ஓசையும் சூழ்ந்திடும்.
மேனி பிறந்த பலனை உணர்ந்திடும்.

மனதை வசியங்கள் பண்ணும் நெறி, இந்த
மண்ணின் வாசம் குழைத்த வழிபாடு,
நனவில்… கனவில் மிதந்திட வைத்திடும்
நடைமுறை, ஐம் புலன்களை ஆண்டுமே
உணர்வினை ஒழுங்காக்கி… அறிவினை
ஒருமுகமேற்றி…வாழ்வின் திரி தூண்டி…
மனித மோங்கி ஒளிர்ந்திட வைக்கும் நல்
வரம், இதனையேன் மறக்குது நம் சனம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.