‘புயல் மழைக்குப் பின்னானபொழுது – ஒருமதிப்பீடு – கே.ஆர்.டேவிட்

இலக்கியக் கூறுகளில் கவிதை இலக்கியம் மிகவும் கடினமானதொரு கூறாகும். தனிமனிதனின் அல்லது, ஒருமனிதக் குழுமத்தின் சூழலில் நடக்கின்ற ஒருசம்பவத்தைப் படம்பிடித்து, படம் பிடித்ததை அவதானித்து அந்தச் சம்பவத்தினுள் உள்ளுறைந்திருக்கும் உண்மைகளும், உணர்வுகளும், புரிதல்களும், மயிரளவும் பிசகிப் போகாவண்ணம் கவிதை வடிவத்தின் எல்லைகளுக்குள் நின்று இரண்டோ, மூன்று வரிகளில் கூறிவிடுவதுதான் கவிதை. இதற்கு தொடர்ச்சியான சமூக தரிசனமும், சிந்தனைச் செழுமையும், மொழிச் செழுமையும் அவசியமாகுகின்றது.

கவிஞர் ஜெயசீலன் அவர்களின் ‘புயல் மழைக்குப் பின்னான பொழுது’ என்ற இக் கவிதைத் தொகுதி அவரின் நான்காவது வெளியீடாக வெளிவந்துள்ளது. 2001 இல் ‘கனவுகளின் எல்லை’ என்ற கவிதைத் தொகுதியையும், 2004 இல் ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ என்ற கவிதைத் தொகுதியையும், 2013இல் ‘எழுதாத ஒரு கவிதை’ என்ற கவிதைத் தொகுதியையும் வெளியீடு செய்துள்ளார் இவர். தனது முதற் தொகுதியை வெளியீடு செய்த காலத்தோடு பொருந்திப் பார்க்கின்ற போது, பதினைந்து வருட கவிதை இலக்கிய அனுபவத்தில் நான்காவது கவிதைத் தொகுதியாக இத்தொகுதி வெளிவருகின்றது. தவிர

ஏறத்தாள இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக நான் கவிஞர் ஜெயசீலன் அவர்களை முதல்முறையாகச் சந்தித்தேன். அப்போது அவர் பல்கலைக்கழக மாணவனாக இருந்தார். நான் அவரைச் சந்திப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவர் ஒரு படைப்பாளன் என்ற இலக்கியத் தகுதிப்பாடே நமது சந்திப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதனடிப்படையில் பார்க்கின்றபோது ஜெயசீலன் அவர்கள் இருபத்தைந்து வருடகால கவிதை அனுபவமுள்ளவர். என்ற முடிவுக்கு வரலாம்.

கவிஞர் ஜெயசீலன் அவர்கள் இப்போது ஒரு நிர்வாக சேவை அதிகாரியாகப் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றுகின்றார். முகாகவி உருத்திரமூர்த்தி, துருவன் பரராசசிங்கம், து.வைத்திலிங்கம், செ.யோகநாதன், செங்கைஆழியான் குணராசா, தாட்சாயினி பிரேமினி போன்று நிர்வாக சேவை அதிகாரிகளாகவும் அதேவேளை, படைப்பாளிகளாகவும் இருந்தவர்களின் இருப்பவர்களின் வரிசையில் கவிஞர் ஜெயசீலன் அவர்களும் உள்ளடங்குகின்றார். மேற்கூறப்பட்ட அனைவருமே சமகாலத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவருமே படைப்பாளிகளாக இருந்து நிர்வாக சேவை அதிகாரியானவர்கள் என்பதும் கவனத்துக்குரியதாகும்.

கவிதை இலக்கியத்தைப் பற்றிப் பேசவந்தவன் இப்போது நிர்வாக சேவையைப் பற்றிப் பேசுகிறானே என்ற கசப்புணர்வு வாசகர்களுக்கு ஏற்படும் என்பதையும் நான் புரியாமலில்லை. நிர்வாக சேவை அதிகாரிகளாகவும், படைப்பாளிகளாகவும் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்று என்னால் சுட்டிக் காட்டப்பட்ட இவர்கள் அனைவரோடும் எனக்கு நெருங்கிய இலக்கிய உறவிருந்தது. தங்களின் இலக்கியச் செழுமைக்குத் தாங்கள் வகிக்கின்ற பதவியும் ஆதார சுருதியாவுள்ளது எனஅவர்களே கூறியுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் பரப்பைத் தனதாக்கிக் கொண்ட செங்கைஆழியான் அவர்கள் இப்போதும் எங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவரின் புகழ்பெற்ற படைப்புக்கள் எல்லாம் இவர் கடமையாற்றிய பிரதேசங்களை வைத்தே எழுதப்பட்டனவென அவரே கூறியுள்ளார்.

ஒருபடைப்பாளன் எந்தத் துறையைச் சார்ந்தவனாக இருந்தாலும் ‘சிருஷ்டிகர்த்தா’ என்ற பொதுநிலையில், அவனது இலக்கிய விளைநிலமாகப் பொதுமக்களே காணப்படுகின்றனர். கவிஞர் ஜெயசீலனைப் பொறுத்தவரையில் இலக்கிய விளைநிலம் என்று கூறக் கூடிய பொதுமக்கள் சங்கமிக்கின்ற ஒரு கேந்திர நிலையமாகவே அவரது அலுவலகம் அமைந்துள்ளது. பொதுமக்கள் பிரச்சினைகளோடு வருகின்றனர், இவரே தீர்ப்பிடும் அதிகாரியாகவும் இருக்கின்றார். இது கவிஞர் ஜெயசீலனுக்குக் கிடைத்ததொரு வரப்பிரசாதம்.

அதேவேளை பிரதேச செயலர்கள் அனைவராலும் படைப்பாளிகளாகி விட முடியும் என்றும் நான் வாதிடவில்லை. படைப்பாற்றலோடு பிரதேச செயலாளரானவர்களுக்கு மட்டுந்தான் பொதுமக்களின் தொடர்பு வரப்பிரசாதமே தவிர, ஏனைய பிரதேச செயலர்களுக்குப் பொதுமக்களின் வருகை தலையிடியாக அமைவதையும் நான் அவதானித்திருக்கிறேன்.

கவிஞர் ஜெயசீலனின் கவிதைகளைப் படித்து முடித்த போது, ஒட்டுமொத்தமாக அவரிடம் நான்கு விதவாண்மைப் படிமங்களை என்னால் அவதானிக்க முடிந்தது. ஒன்று அவர் ஒரு விஞ்ஞானப் பட்டதாரியாக இருப்பதனாலோ என்னவோ சமூக இயங்கியல் விஞ்ஞான மாற்றங்களை இலகுவாக உள்வாங்கிக் கொள்ளும் தன்மை. இரண்டாவது, சமூகப் பிரச்சினைகளை உள்வாங்குதலிலும், அவற்றிற்கான தீர்ப்பிடலிலுள்ள யதார்த்த நிலையும் சூசகக்கையாட்சியும். மூன்றாவது, சொற்சிலம்ப மற்ற மொழியாட்சி. நான்காவது, இது மிக முக்கியமானது சிருஷ்டி கர்த்தா என்ற கருத்துப் போராளியால் எந்த எல்லைவரை போக முடியும் என்ற இலக்கிய எல்லையைப் புரிந்து வைத்திருப்பது.

ஒருவன் சிந்தனைத் தெளிவுள்ளவனாக இருந்தால் ‘கலங்கியவன்’ என்பது மறைபொருளாக இருக்கும். ஒருவன் ‘சிந்தனைக் கலக்கமுள்ளவனாக’ இருந்தால் அவன் சிந்தனைத் தெளிவுள்ளவனாகப் போகின்றான் என்பது மறைபொருளாக இருக்கும். கவிஞர் ஜெயசீலன் அவர்கள் கலங்கித் தெளிந்தவராகவே காணப்படுகின்றார்.

‘புயல் மழைக்குப் பின்னான பொழுது’ என்ற பெயரை இக்கவிதைத் தொகுதிக்கு வைத்திருத்தலில் கூட பெரும் சூட்சுமம் உண்டு. ‘புயல் மழைப் பொழுது’ என்பதற்கும், ‘புயல் மழைக்குப் பின்னான பொழுது’ என்பதற்குமிடையில் அர்த்த வேறுபாடுகள் நிiறுயவுண்டு. ‘புயல் மழைப் பொழுதின்’ பாதிப்புக்கள் பொதுவானதும் காலத்தால் குறுகியதுமாகும். ஆனால் புயல் மழைக்குப் பின்னான பொழுது அவரவர் இருப்புக்கேற்ப அதன் தாக்கம் வேறுபடுவதோடு கால நீட்சியும் கொண்டதாகும். அதைத்தான் கவிஞர் சுட்டிக் காட்டுகின்றார்.

‘இன்மை’ என்ற கவிதைத் தொடரில், கடைசி நான்கு அடிகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

‘எல்லாம் இருந்திருந்தும்
ஏதோ வெறுமையின்னும்
இங்கே விரியுதென்று சொல்கிறாய் நீ
என்ன இல்லை?…..’

கவிதை இப்படி முடிகின்றது.

இலங்கையில் வாழுகின்ற சகல தமிழ் உயிர்களுக்குமான பொதுவான கேள்வியிது. இன்றுள்ள தமிழ் மக்கள் அனைவரும் வாலறுந்த பட்டங்களாகக் குத்தி மீழ்கின்றனர் என்பதைத்தான் கவிஞர் சூட்சுமமாகக் கூறுகின்றார். அறுந்து போன அந்த ‘வாலுக்குள்தான்’ இந்தக் கேள்விக்கான விடையுண்டு.

இதே போன்று ‘கடலடி’ என்ற கவிதைத் தொடரில் கடற்றொழிலாளர்களின் துயரங்கள் பற்றிக் கூறிய கவிஞர் கவிதையை இப்படி முடிக்கின்றார்.

‘கடல் பொங்கிக் கோபமாய் கறுவித் துடித்திருக்கு
படகெலாம் கரையில் படுத்துளன
பசியோடு
கரையெங்கும் அடைமழைக்குள் கருவாடாய் மீனவர்கள்’

இலக்கியப் பரப்பில் உருவகக் கையாட்சி முக்கிய இடத்தை வகிக்கின்றது. உருவகங்களைக் கையாழ்வதன் மூலம் வாசகர்களின் புரிதல் நிலையை இலகுவாக்குவதோடு, உணர்வு நிலைகளையும் இலகுவாகப் பதிவாக்கி விடமுடியும். இதில் ‘கருவாடாய்’ என்ற உருவகத்தைப் பாவித்ததன் மூலம் கவிஞர் ஜெயசீலன் அவர்கள் தனது வாண்மைச் செழுமையைப் புலப்படுத்தியுள்ளார் என்று கூறலாம். கடல் பரப்பையும் அதை நம்பிச் சீவனம் செய்கின்ற கடற்றொழிளார்களையும் மையப்படுத்திய இக்கவிதையில் அதே கடற்பரப்பிலிருந்து ஒரு உருவகத்தைத் தெரிவு செய்திருப்பதானது உச்சமாகவுள்ளது. ‘கருவாடாய்’ என்ற உருவகப் பிரயோகமானது, கவிதையின் மையப் பொருள் சார்ந்த புவியியற் சூழலோடு வாககனின் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் எனலாம்.

இதே போன்று, ‘பிறைபார்த்தல்’ என்ற கவிதையில் நிலவுக் காட்சியைக் கவிஞர் பின்வருமாறு உருவகப்படுத்திக் கூறுகின்றார்.

‘வெட்டிவைக்கப் பட்ட சர்க்கரைப் பூசனியின்
துண்டொன்றாய் மஞ்சள் நிலவு
கீழ் திசையின்
தொடுவானத் தருகே ஒளிர்கிறது இப்போது’

சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்ற சர்க்கரைப் பூசனியின் வெட்டுமுகத் தோற்றத்தை இங்கு உருவகப்படுத்தியிருப்பது மிகவும் ஆச்சரியத்தைத் தருவதோடு, கவிஞரால் சுட்டிக்காட்டப்படுகின்ற காட்சியும் இயல்பாகவே நமது மனதில் விரிகின்றது. சர்க்கரைப் பூசனி போன்றவற்றை யாருமே கவனத்தில் எடுப்பதில்லை. ஆனால் அதைக்கூட கவிஞர் ஜெயசீலன் அவர்கள் தனது கவனத்துக்குட் படுத்தியிருப்பதானது அவருடைய ஆளுமைச் சிறப்பையும், அவதானக் கூர்மையையும் புலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சமூக நிகழ்வுகளில் தனது கவனத்தைச் செலுத்திய கவிஞர் தனது பார்வையை இலக்கியம் மீது செலுத்துவதைப் பாருங்கள். கவிஞருடைய அவதானங்களும், உருவத்தை மட்டும் பார்க்காமல் உள்ளீடுகளை நோக்குகின்ற பார்வைக் கூர்மைகளுக்குத்தான் அவரது கவிதைகளுக்கு உயிர்மையங்களாக அமைகின்றன என்று கூடச் சொல்லலாம்.
இலக்கிய விமர்சனச் செயற்பாடுகள் பற்றி அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

‘கல்தான் எனத் தெரிந்தும்
அதுஉமக்கு உகந்ததெனில்
‘இல்லையது மலையென் றியம்புகிறீர்…
மலைதான் எனமலைத்தும்
அதைப்பிடிக்க வில்லையென்றால்
இல்லையது கல்லென்றே இயம்புகிறீர்’

இலக்கியப் பரப்பில் இன்று இப்படியும் விமர்சனங்கள் நடக்கின்றன என்று கவிஞர் சுட்டிக் காட்டுகின்றார். இந்தக் கவிதைத் தொகுதி வெளிவந்து, நான் இந்தக் கவிதையைப் பார்த்தபோது, கவிஞர் ஜெயசீலன் ஒருபிரச்சினையை விலைக்கு வாங்கியுள்ளார்…. எழுத்தாளர்கள் ஜெயசீலனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கப் போகிறார்கள் என்று எனக்குள் எண்ணிக் கொண்டேன். இக்கவிதைத் தொகுதி வெளியீட்டின் பின்னர் நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் ஜெயசீலனின் கருத்துக்கு உடன் பாடான கருத்துக்களையே வெளியிட்டனர்.

‘ஜெயசீலன் விமர்சனப் பிறழ்வு பற்றிக் கூறியதில் நிறைய உண்மைகள் உண்டு. அதேபோல இக்கவிதைத் தொகுதியில் இறுதிக் கவிதையாக அமைந்துள்ள ‘எம்மொழி போற்றுதும்’ என்ற கவிதையில் ‘நவீன இலக்கியங்கள்’ பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அக்கவிதையும் கவனத்துக் குரியகவிதையாகும்’ என்ற கருத்தையும் பலர் வெளியிட்டனர்.

இக்கவிதைத் தொகுதியில் இறுதிக் கவிதையாக அமைந்துள்ள எம்மொழி போற்றுதும் என்ற கவிதை இன்றுள்ள நவீன இலக்கியங்களின் போக்குகள் பற்றிப் பேசுகின்றதொரு கவிதை. கவனத்துக்குரிய கவிதைகளில் இதையும் குறிப்பிடலாம்.
அக்கவிதை,

‘அற்ப ரானோம் நாம், ஆம் ‘நவீனங்களே’
அசலெனப் பிறர் நகலை வியக்கின்றோம்.
இப்பிறப்பில் எம் சொத்தைக் கைவிட்டுளோம்.
எவர்களோ போட்ட பிச்சைதின் றுய்கிறோம்.’

இக்கவிதை நுணுகி ஆராயப்பட வேண்டிய ஒருகவிதையாகவே எனக்குத் தென்படுகின்றது. இக்கவிதை எட்டு அடிகளைக் கொண்ட மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இக்கவிதை இருபத்திநான்கு வரிகளில் அமைந்துள்ளது. விமர்சனப் புரிதலுக்கு கவிதையை முழுமையாகப் படிக்க வேண்டிய தேவையுண்டு.
இக்கவிதை பேசுகின்ற விடயங்களை பின்வருமாறு வரிசைப் படுத்தலாம். இலக்கிய மாற்றங்கள் தவிர்க்க முடியாத இயங்கியல் நியதி என்பதைக் கவிஞர் ஏற்றுக் கொள்கிறார். இரண்டாவது நவீன இலக்கியங்களின் வருகையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். மூன்றாவது, பழைய இலக்கியங்களையே நாம் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வாதிடவில்லை.

கவிஞர் இரண்டு விடயங்களை வலியுறுத்துவதாகவே நான் உணர்கிறேன். முதலாவது நவீன இலக்கியம் என்று கூறிக்கொண்டு கடந்த கால இலக்கியங்களைப் புறந்தள்ளுவது.
இரண்டாவது, ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளினால் இறக்குமதி செய்யப்பட்டதும், நமது மக்களுக்குப் புரியாததும், பொருந்தாததுமான நவீன இலக்கியத்தையே சரியான இலக்கியமென புதிய தலைமுறை எழுத்தாளர்கள் நம்பிக் கொண்டிருப்பதுமாகும்.
கவிஞர் ஜெயசீலன் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள இக்கருத்துக்களில் எனக்கு மட்டுமல்ல, நான் சந்தித்த பல எழுத்தாளர்களுக்கு உடன்பாடிருப்பதை நான் அவதானித்திருக்கிறேன்.
கவிஞர் ஜெயசீலனின் ‘புயல் மழைக்குப் பின்னான பொழுது’என்ற இக்கவிதைத் தொகுதி பற்றிப் பேசுவதற்கு நிறையவுண்டு.
கவிஞர் ஜெயசீலனின் கவிதையாற்றலை மதிப்பீடு செய்யும் போது, பின்வருமாறு கூறலாம். மனிதவாழ்க்கைக் கூறுகளில் வெந்து அவிந்துபோன, அவிந்து கொண்டிருக்கின்ற பக்கங்களை சமகால கவிதை மொழியில் கூறுவதோடு, சத்திய தரிசனப் புரிதல்களுக்கான கதவுகளையும் திறந்து விட முயற்சிக்கிறார் என்பதும் புலனாகுகின்றது. இவரது கவிதை இலக்கியப் புரிதல், சமூகப் புரிதல், மொழிப் புதில் என்பன இவரது முயற்சிக்குத் துணைநிற்கின்றன என்று நிதானமாகக் கூறலாம்.

(ஞானம் ஆவணி 2015 இதழில் வெளிவந்த கட்டுரை)

Leave a Reply