மாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்

1.அச்சுவேலி
19.04.04

வணக்கம்;

நான் உயர்தரம் கற்கும் ஒரு மாணவி. கவிதையிலே மிகவும் விருப்பும் ஆர்வமும் உள்ளவள்; எங்கு எப்படி கவிதைகளைக் கண்டாலும் உடனே எடுத்து படித்து விடுவேன்; இப்படி கவிதையோடு பின்னிப் பிணைந்து கவிதையிலே ஊறிய எனக்கு உங்களது ~கைக்குள் சிக்காத காற்று| என்னும் கவிதைத் தொகுதியைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது பெரும் பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். உங்களது ~கைக்குள் சிக்காத காற்று| என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பட்டை வந்ததும் ஒரு விதத்தில் அதிர்ச்சியும் மறுபுறத்தில் மகிழ்ச்சியும் அடைந்தேன். ஏனெனில் இதை யார் அனுப்பினார்கள் எப்படி எனது விலாசம் இவர்களுக்குத் தெரியும் என மனம் குழம்பினேன். இருந்தும் எப்படியாவது இந் நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று நூலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் துடித்தேன். அப்படியே நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலையும் பெற்றுக்கொண்டேன். இருந்தும் இன்று வரையும் எப்படி எனக்கு இந்த அழைப்பு கிடைத்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

மேலும் உங்களது ~கைக்குள் சிக்காத காற்று| என்னும் கவிதைத் தொகுதியை விடாமல் முற்றாகப் படித்து முடித்தேன். நான் இதுவரை படித்த கவிதைகளிலிருந்து வேறுபட்டதாக மனம் நெகிழ வைக்கும் கவிகளாக உங்களது கவிதைகள் அமைந்தன. படிக்கும் போதே உணர்வைத் தட்டியெழுப்புகின்ற சிறந்த கவிகளாக உள்ளன. இப்படிப்பட்ட சிறந்த கவிகளைத் தொடர்ந்தும் படிக்கும் பேறு கிடைக்க ஆசிக்கின்றேன். உங்கள் கவி ஆற்றல் மேலும் வளர்ந்து பல கவி நூல்களை வெளியிட்டு என்றும் எழுத்தாற்றல் மிக்க சிறந்த கவிஞனாக மிளிர மனமாற வாழ்த்துகின்றேன்.

நன்றி

வாழ்க! பல்லாண்டு
வளர்க உம் கவியாற்றல்
சிறக்க உம் எழுத்தாற்றல்
ஓங்குக உம் புகழ்

பார் போற்றும் கவிஞனாய்
பாங்குடனே வலம் வருக
கவிதை என்னும் நங்கையினால்
கவி வேந்தனாய் சீர்மிகு சிறப்புடன் … என்றும் வாழ்க!

இறையருள் வழிநடத்த …
இன்பமுடன் எந்நாளும் ….. கவிமழையால்
உள்ளம் நிறைத்திட
உவகையுடன் வாழ்த்துகின்றேன்.

இங்ஙனம்,
தங்கை வி.மேரிஜெனிற்றா