பேராயர்.எஸ். ஜேபநேசன்

.வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம் சிந்திக்கத் தூண்டியுள்ளது
அன்புள்ள ஆசிரியருக்கு,
கடந்த திங்கட்கிழமை (15.03.2010) “யாழ்ப்பாண மக்களை அறிய ஏழு பிறப்பு எடுக்கவேண்டும் என” மகுடமிட்டு ஒரு சிறந்த தலையங்கம் எழுதியிருந்தீர்கள். தேர்தல் களத்தில் குதித்திருக்கும் திடீர் தலைவர்களைப் பற்றி நீங்கள் எழுதியவை சுவாரஸ்யமாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தன. “கிரீடம் நிலத்தில் விழுந்து கிடந்தால் அதனை எடுத்து அணிந்து கொள்ள யார்தான் விரும்பமாட்டார்கள்.” இது சுந்தரனாரின் மனோன்மணியத்திற் காணப்படும் வசனமாகும். “யாழ்ப்பாண மக்களை அறிந்துகொள்வதெனில் அதற்கு ஓர் ஆயுட்காலம் போதாது” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். யாழ்ப்பாண மக்கள் “வேடிக்கை மனிதர்கள்” இல்லை என்பது மட்டும் நிச்சயம். “மனத்துக்கண் மாசிலனாதல் அறம். ஆகுல நீரபிற” என்பது அவர்கள் தாரக மந்திரம். அரசியல் இலாபம் தேடி சமயம் மாறிய ஒருவரை கட்டுப்பணம் இழக்கச் செய்தவர்கள் உண்மையான கிறிஸ்தவ அடியானாகிய எஸ்.ஜே வியைத் தமது முடிசூடா மன்னனாக்கி வைத்தவர்;கள்.
யாழ்ப்பாண மக்களுக்கென்று ஓர் அடையாளம் இருக்கின்றது. அது தான் பனை மரம் நேராக, வளைந்து கொடுக்காமல், வருடம் முழுவதும் வறட்சியைக் காட்டாது. வைரமாக நிற்பது பனை. அதற்கு தண்ணீர் ஊற்றுவார் யாருமில்லை. ஐம்பது அங்குல மழைவீழ்ச்சிக்குக் குறைந்த பிரதேசத்தில் தனது சௌகரியங்களைப்பற்றி கவலைப்படாது பயன்கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
இதற்குக் காரணம் அதன் நீண்ட, பரந்த பக்கவேர்கள் தாம். ஏனைய விருட்சங்களுக்குத் தெரியாத நீர் நிலைகளைக் கண்டு பிடித்துத் தனது ஊட்டத்தைப் பெற்றுக்கொள்வது பனை. யாழ் மக்கள் இத்தனை இழப்புக்களுக்கும் மத்தியில் வைரமாக உறுதியுடன் நிற்பதற்குக் காரணம்; அவர்களுடைய அறநூல்களும் பக்திப் பனுவல்களும் சமய நம்பிக்கைகளுமேயாகும். இந்த சுனைகளில் இருந்து தான் தமிழ் மக்கள் தமது ஊட்டச்சத்தைப் பெறவேண்டும்.
கடந்த 30 ஆண்டுப்போரில் 10 மில்லியன் பனை மரங்களில் மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கவிஞர் த. ஜெயசீலன் அழகாகப் பாடினார். “கருக்குக் கணை கொண்ட கரும்பனைகள் உருக்குலைய எங்கள் ஊரழகு பாலாச்சு என்று புதுவடலி எழும், எமதூர்க்குத் தென்றலினை மீண்டும் வரவழைப்பதற்கு என்று புதுவடலி எழும்.”
பனை மரங்களின் அழிவைக் கண்டு கண்ணீர் வடித்த மில்க்வைற் கனகராசாவும் மறைந்து விட்டார். அப்படிப்பட்ட உணர்வுள்ளவர்கள் சமுதாயத்தின் தலைமையை ஏற்க வேண்டும். இன்று அரசியலில் ஆரவாரமும் முண்டியடிப்பும் மேலோங்கி நிற்கின்றன. தமிழ் மக்களின் வருங்காலம் குறித்து கவலைப்படாமல் இருக்கமுடியாது. தமிழ் மக்கள் தொடர்ந்து தமது பண்பிலும் கடின உழைப்பிலும் நீதி நியாயத்திலும் உறுதியாக நிற்பார்களானால் இந்தப் பனைமரங்களுக்குத் தென்னிலங்கை மட்டுமன்றி இந்தியாவும் உலகமும் செவி மடுக்கும் காலம் விரைவில் வரும்.
பேராயர்.எஸ். ஜேபநேசன்.