அன்பிற்குரிய பா.அகிலன் அவர்கட்கு…………..

த.ஜெயசீலன்,
20ஃ3 பாரதிவீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.
13.12.2011.

அன்பிற்குரிய பா.அகிலன் அவர்கட்கு,
தங்கள் ‘சரமகவிண்’ நூல் கண்டு மகிழ்ந்தேன்,
தங்கள் முதற்தொகுப்பை விட இறுக்கமும் ஆழமும் இத்தொகுதியில் அதிகரித்திருந்ததை அறிந்தேன்.
மிதுனம், தலைப்பிடப்படாத காதற்கவிதை 02, 03, 04 செம்மணியிலுள்ள கவிதைகள், தாயுரை 02, 03, 04 இரண்டு தலைநகரங்கள், நீர்க்குமுழி போன்ற கவிதைகள் அபாரமானவை.

“கண்ணீரில் சதா ஈரமாகும் இரவுகள்
எதையும் வைத்துச் செல்ல
காலம் இழைத்ததில்லை எந்தப் பெட்டியையும்”

“ பாதமற்ற கால்களால்
வாழ்வைக் கடந்து செல்கிறார்கள் நாதியற்ற
மனிதர்கள்” என்பன சத்திய வரிகள்!

எனினும் “ தேகத்திலிருந்து பிரியுமொரு பூச்சி
துப்பும் சினத்தில்
ரத்தவுருக்களைக் கிழித்து
இன்பமூறத் தின்கிறோம் கொடுமைகளை”

மற்றும் சுவிசேசம் 01, 02, 03 என்பன முன்னைய பண்டிதர்கள் செய்ததைப்போன்ற சொல்விளையாட்டுக்களோ? புரிந்துகொள்ள சிரமமான தத்துவார்த்;தம் போன்ற இருண்ட வார்த்தைகளா? என்று புரியவில்லை.

மேலும் தங்கள் பதிலுரையில் மயிலங்கூடலார் யாப்புமரபு கற்பித்தது பற்றி கூறினீர்கள். தாங்கள் யாப்பு மரபில் ஈடுபாடு காட்டாது. யாப்பு மரபில் குறை சொல்ல முடியாது என நினைக்கின்றேன்.
இக் கடிதத்தில் ஒரு உதவியையும் உங்களிடம் கேட்கிறேன் அன்றைய தினம் தங்கள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடைய விபரப்பட்டியல் ஒன்று சேகரிக்கப்பட்டது. அப்பட்டியலின் பிரதியை அனுப்பி உதவ முடியும் எனின் (தங்களுக்கு ஆட்சேபனை இல்லை எனின்) தயவு செய்து அனுப்பி உதவவும்.

அன்புரிமையுடன்,
த.ஜெயசீலன்