கனவுகளின் எல்லை விமர்சனம் – ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)

இடம்பெயர்வுக்குப் பின்பு யாழ்ப்பாணக் கவிதைப் புலத்தில் தனக்கென ஒரு தனித்துவத்தை நிலைநிறுத்திக் கொண்டவர் கவிஞர் த.ஜெயசீலன் ஆவார். இவர் கவிதைகள் இலங்கை வானொலியிலும் பத்திரிகைகளிலும் அடிக்கடி ஒலிபரப்பாகியும் பிரசுரமாகியும் வந்துள்ளன.

அண்மையில் இவர் ‘கனவுகளின் எல்லை’ என்ற கவிதைத் தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார். இயற்கையை வியத்தல், சுதேச உணர்வு, உலகியலுக்கும் இறையியலுக்கும் இடையில் ஊஞ்சலாடும் மனத்தின் சிந்தனைப் போராட்டங்கள், பக்தியுணர்வு, காதல், மண்ணின் அவலம், தன்னுணர்வு வெளிப்பாடு, போன்ற கருத்துத் தளங்களில் இருந்து மேற்கிளம்பிய 71 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஆச்சரியக் குறிகளையும், வினாக்குறிகளையும், புள்ளிக் கோடுகளையும் நம்பிக் கவிதையெழுதுகிற இளைய தலைமுறையினரிடையே யாப்பமைதியென்ற கடிவாளத்தை எளிதாகக் கையாண்டு கவிதைத் தேர் செலுத்துபவராகத் தன்னை அடையாளங் காட்டியுள்ளார். குறிப்பாக ‘கலிப்பா’வினங்களை லாவண்யத்தோடு இந்த நூலின் பெரும்பாலான கவிதைகளில் கையாண்டுள்ளார்.

“துயரங்கள் உனைமேலும் உறுதியாய் நம்பிடத்
துணைசெய்யும் வழிகாட்டிகள்
சோகங்கள் நீஎங்கும் சுடர்கிறாய் என்பதைப்
பறைசாற்றுந் தொலைக்காட்சிகள்”

என நல்லை முருகனைத் துதித்தபடி இந்நூல் ஆரம்பமாகின்றது. ‘சிறுகூடற் பட்டி உமையவளைத்’ தரிசித்து கவியரசர் கண்ணதாசன் பாடிய பன்னிருசீர் விருத்தங்களின் இசையின்பத்தால் ஈர்க்கப்பட்ட காரணத்தால் கவிஞரும் இதே யாப்பைக் கையாண்டிருக்கலாம். ஆயினும் பொருளமைதியில் பக்தியை மட்டுமன்றி இன விடுதலையுணர்வு, சுய பரிசோதனை, போன்ற பொருள் வீச்சுக்களை ஊடுபாவாகக் கொண்டு இந்தக் ‘கவிமூலம்’ எனத் தலைப்பிடப்பட்ட கவிதை அமையப் பெற்றுள்ளது.
“உடைக்கின்ற நேரத்தில் உதிராமல் உனையெண்ண
உதவிசெய் நல்லை முருகா” என்ற ஈற்றடி இதனை உறுதி செய்கிறது.

தினசரி வாழ்க்கையெனும் சிலந்திக் கூடுகளால் மூடப்பட்டுள்ள ஒவ்வொரு மனித உள்ளத்திலும் எங்கோ ஒரு மூலையில் கவியுணர்வு எனற தெய்வீகப் புதையல் ஒளிந்துள்ளது. சிந்தனை பட்டைதீட்டச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அந்த உணர்வை நன்கு அனுபவித்து அதனைப் பிறர்க்கு எடுத்துரைக்க முயல்வதாக ‘கவிதைப் பூமரத்தைக் கண்டுணர்க’ என்ற தலைப்பிலான கவிதை அமைந்துள்ளது.

“உனக்குள் கவிதைமரம் உள்ளதை நீ அறிந்துளாயா?
தெய்வ நினைவினிலே
திடீரென்றென் கவிதைமரம்
ஐயையோ! நிறநிறமாய் வகைவகையாய் குளிர் நெருப்பாய்
ஆனந்த அழுகை தரும் கண்ணீர்ப் பனிநிகர்த்த
தேனக்க கவிதைமலர் பூத்தெனக்குப் பரிசளிக்கும்
அந்த மலர்கள்என்னை
அர்ச்சிக்க அர்ச்சிக்க
மென்மை மனஞ்சிலிர்த்து மேன்மை உடையுடுத்து
எனக்குள் குடியிருக்கும் இராட்சத விலங்குகளைக்
கணமழித்து மனிதத்தைக்
கண்டெடுத்துப் பூக்கின்றேன்.”

என்று தொடரும் கவிதை வரிகள் ஊடாக இப்படியன், இந்நிறத்தன், என்றெழுதிக் காட்டவொண்ணாத கவிதா மனோ பாவத்தைக் காட்சிப்படத்த முயன்று தவிக்கின்றார்.

இராமனது மெய்யழகை வர்ணிக்க “மையோ மரகதமோ” எனத் தொடங்கி “ஐயோ” என அயர்ந்து விடுகின்ற கம்பனின் ஆதங்கத்தை இந்தக் கவிஞனும் உணரத் தலைப்படுகிறான்.

இந்தக் கவிதைநூல் கொண்டுள்ள இன்னொரு சிறப்பம்சம் யாதெனில் மரபுக் கவிதைகளில் வழக்கில் இல்லாத சில புதுமையான வார்த்தைப் பிரயோகங்கள், உவமைகள், தற்குறிப்பேற்றங்கள் கவிதைகளிடையே பயன்படுத்தப் பட்டுள்ளமை ஆகும்.
“வண்டுகளின் வாயில் வாத்தியங்கள் வைத்ததுயார்?”
“வெய்யிற் சாறொழுக
பூமி கரமுரஞ்சிப் புத்துயிர்க்க”
“அப்பாவிகள் ஏக்கச் சிலுவையிற் துடிப்பார்கள்”
“தூவானம் சுகங்கேட்டு நுள்ளியது”
இவை போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இந்தக் கவிதைநூலில் பல இடங்களில் கையாளப் பட்டுள்ளன. இவை புதுக்கவிதை வல்லுனர்களால் கையாளப் படுகின்ற பிரயோகங்கள் ஆகும்.
“என் ஊரின் நான்கு மூலைகளையும்
நான்கு குயில்கள்
கொத்திக் காவிச் செல்கின்றன”
என்று ஒரு புதுக்கவிதையாளன் தனது கிராமத்தின் எளிமையான இனிமையான வாழ்வைக் காட்சிப் படுத்த முயன்றான். தனது ஊர் சிதைந்துபோன அவல இராத்திரியைப் பாட முயன்ற மற்றோர் கவிஞன்
“வான ஓடையில் நிலவு சுடுபட்டுச்
செத்து மிதக்கிறது”
என வர்ணித்தான். தனது காதலி தன்னை “எண்ணச் சிலுவையில் அறைந்தாளே” என்று தன் காதலின் ஏக்கத்தைப் பாடினான் இன்னொரு கவிஞன்.

இவ்வாறான சொற்பிரயோகங்கள் நவீனத்துவச் சிந்தனைப் போக்கில் ஈடுபாடு கொண்ட புதுக்கவிதை விற்பன்னர்களின் கவிதைகளில் அதிகம் இடம்பெற்று வருகின்றன. இன்னொரு வகையிற் சொல்வதானால் யாப்பமைதியை நிராகரிக்கின்ற ஒரு கவிதைப் புலத்தின் துருப்புச் சீட்டுக்களை யாப்பமைதிக்குட்பட்டு நின்றுகொண்டு லாவகமாகப் பிரயோகித்துக் காட்டி வெற்றி பெற்றுள்ளார் கவிஞர் த.ஜெயசீலன். கவிஞர் இ. முருகையன், கவிஞர். சோ. பத்மநாதன், கவிஞர் கல்வயல் குமாரசாமி போன்ற முது கவிஞர்களும் இந்த வகையில் ஜெயசீலனுக்கு வழிகாட்டியவர்கள் எனலாம்.

ஒரு உண்மையான கவிஞனை அடையாளங் காட்டுவது அவனது தற்துணிவு அல்லது கவிதா நிமிர்வு எனலாம். தான் வாழும் சமுதாயத்தின் அரசியல்,பொருளாதார, சமூக வட்டங்களுக்குள், நின்று கவிதை பாடுபவர்களை காலம் செரித்துவிடும். காலத்தை வெல்லும் கவிஞன் இத்தகைய எல்லைகளுக்குள் அடங்காது இருப்பான்.

“யானோர் வணிகப் பரிசிலேன் அல்லன்”
“மன்னவனும் நீயோ”
“வேடிக்கை மனிதரினைப் போலே வீழ்வேனென நினைத்தாயோ”
“கூற்றுவனா?
அவனைக் கொண்டுவந்து தூக்கிலிடு”
இவை இத்தகைய நிமிர்வுள்ள வரிகள். காலத்தை வென்ற கவிஞரால் மட்டும் உரைக்கப் படக்கூடியவை இவ் வரிகள். அத்தகைய கவிதா நிமிர்வை ‘கனவுகளின் எல்லை’ கவிதை நூலிலுள்ள சில கவிதைகள் ஊடாகவும் தரிசிக்க முடிகிறது.

‘நாங்கள்’ என்ற தலைப்பில் அமைந்த வெண்பாவில்
“நெஞ்சில் கனல்கின்ற ஞான நெருப்பிருந்து
குஞ்செடுத்து மண்ணின் கொடுமைகளாம் -பஞ்சைக்
கொளுத்தக் கவிவளர்ப்போம்..கூற்றெதிர்த்தால் நெற்றி
விழிதிறந்துஞ் சொல்வோம் விடை.”
என்றும் ‘அந்நியமான நண்பனுக்கு’ என்ற கவிதையில்
“உயிர்துடிக்கும் நம்நிலையை உணராதுன்போல்
உலுத்தர்களின் வால்பிடிக்கப் பிரளாதென் நா
சுயம்இழந்து பகட்டின்பின் அலையாதென்பா”
என்றும் தனது கவிதா நிமிர்வை ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார் கவிஞர்.
‘நேரம்’ என்ற கவிதை தற்போதைய தேர்தல் ஆரவாரங்களை பின்வருமாறு எள்ளி நகையாடுகிறது.
“நீயுந்தன் நீண்ட வேட்டைப்பல், குருதிசிந்தும்
கூர்க்கொம்பு
சதையைக் கிழித்த நகம்…மறைத்து
மற்றவனைத் தூற்றுகிறாய்!
மற்றவன் தன் வாய்நாற்றம்
மலங்கழுவாக் குதம், பீழை
வடியும்கண் மறைத்து உன்னைப் பழிக்கின்றான்.
ஒருவர் மேல் ஒருவர் மாறிமாறி வாரிவீசும்
சேறில்…இருவரது
நாற்றமும் முச் சந்திகளில்
மணக்கிறது
சமூகம் மூக்கைச் சுழிக்கிறது.”
மேலும் வடலி, விசர்நாய், மழைஇ இடி போன்றவை குறியீடுகளாக இத்தொகுதியிலுள்ள பல கவிதைகளில் பயன்படுத்தப்பட்டள்ளன.
வாழ்க்கை பற்றி ஒரு வரையறையைச் செய்ய முயல்வதாக அமைந்துள்ள கவிதையில் மட்பாண்டம், அந்நியனின் பாஷை, நெடுவானம், தூண்டில், தேன்கூடு, புல்நுனியிற் பூ, போர்க்களம், விளையாட்டு மைதானம், பூமி, ஓடம், காட்டுவழி, ஆகியவற்றுடன் வாழ்க்கையை ஒப்பிட முயல்வது இரசிக்கத் தக்கதாக அமைந்துள்ளது.
“வாழ்க்கை ஒரு மட்பாண்டம்
வனைவது கடினம்…ஆனால்
போட்டுடைத்தல் சுலபம் புரியாத வாழ்க்கையொரு
அந்நியனின் பாஷை அறியாமல்- அறிந்ததுபோல்
புன்னகையால் மழுப்பிப் புகைகிறோமே…
………
வாழ்க்கையொரு தூண்டில்
எதிர்பாராத் திமிங்கிலமும்,
காத்திருந்தால் சேர்த்துவைத்த புழுகூடத் தொலைவதுவும்
நிகழ்வதனால்”
என்றவாறு கவிதை தொடர்கிறது.

மரபுக் கவிதையில் ஈடுபாடு கொண்டவர்களும், புதுக் கவிதையில் நாட்டம் உடையவர்களும் வேறுபாடின்றி படித்துச் சுவைக்கத் தக்க வகையில் இந்தக் கவிதைநூல் அமைந்துள்ளது. வாசகர்கள், ஆர்வலர்கள், இந்த இளங்கவிஞருடைய கன்னி முயற்சிக்கு ஊக்கம் வழங்கி யாழ்ப்பாணத்தில் இளைய தலைமுறையினரின் ஆக்க முயற்சிகளுக்கு உற்சாகமூட்டுவார்களாக.

(இவ்விமர்சனக் குறிப்பு கவிஞர் ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்) அவர்களால் 2002 ம் ஆண்டு எழுதப்பட்டது.)

Leave a Reply