கைகளுக்குள் சிக்காத காற்று

கைகளுக்குள் சிக்காத காற்று
(கவிதைத் தொகுப்பு)
த.ஜெயசீலன்
625, பருத்தித்துறை வீதி,
யாழ்ப்பாணம்
இலங்கை.

உரிமை : த.ஜெயசீலன்
முதற்பதிப்பு : 2004
பக்கம் : 110
வெளியீடு : அருணன் பதிப்பகம், நல்லூர்.
அச்சுப்பதிவு : ஈகுவாலிற்றி கிரபிக்;ஸ்
315, ஜம்பட்டா வீதி,
கொழும்பு- 13.

KAIKALUKKUL CHIKKATHA KATRU
(Collection of Poems)
T.JEYASEELAN
625, Point Pedro Rd,
Nallur, Jaffna
Srilanka.
E-mail :thajeyaseelan@yahoo.com
Copyright : T.Jeyaseelan
First Edition : 2004
No of Pages : 110
Publisher : Arunan Publishers. Nallur
Printed by : E-Kwality Graphics
315, Jampettah St
Colombo – 13.
prize :rs 200

625, பருத்தித்துறை வீதி,
நல்லூர் யாழ்ப்பாணம்
இலங்கை, 2004.

அன்புக்கினியவர்களே!
“கைகளுக்குள் சிக்காத காற்று’
எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு,
“கைகளுக்குள் சிக்காத காற்று” – கவிஞன் தான் என்பது
வெளிப்படையானது.
கவிஞன் என்ற பிறவியின் பயன் பெரியது.
சமூகத்தின் முன் எத்தனையோ பேர்களை, பதவிகளைப்
பெற்றாலும் கவிஞனாக
-கைகளுக்குள் சிக்காத காற்றாக- ஜீவித்து மடிவது
அர்த்தம் மிக்கது.
அந்த நிலையை அடையவேண்டும் என்பதே
என் கனா….. என் அவா!
இன்று கவிதை
அவரவர் வாயில்
‘அவலாய்’ அரைபட்டுக்கிடக்கிறது எனலாம்.
எவர் எப்படி சொன்னாலும்,
எவர் எப்படி நிறுத்தாலும்,
என்கவிதை இப்படித்தான் இருக்கும் என்பதில்
என்கவிதை இப்படிதான் என்னை வெளிப்படுத்தும் என்பதில்
எனக்கு தெளிவு இருக்கிறது.
இந்த தெளிவை எனக்குத்தந்த
இயற்கையும், இறைநினைவும், காலமும் என்னைச்
செதுக்கின, செதுக்கின்றன, செதுக்கும் என்பதிலும்
என் நம்பிக்கை மேலும் விழுது விட்டு வளர்ந்துள்ளது.
நம்பிக்கை தானே வாழ்வு;
நடக்கின்றேன்.
என் வளர்ச்சியில் பங்கெடுத்த ஒவ்வொருவரினது
பாதாரவிந்தங்களுக்கும் இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன்.
இந்த – எனது இரண்டாவது கவிமகளின் ‘முகத்துக்கு’
உயிர்கூட்டி ஒப்பனை அளித்த ஓவியர் ரமணி அவர்களுக்கும்,
‘இவளை’ நவீன நாகரிக நங்கையாக்கிய
பதிப்பகத்தாரும் என் நன்றிகள்.
மீண்டும் சந்திப்போம்.

நன்றி கலந்த நட்புடன்
த.ஜெயசீலன்.

துணை தருக

வான வெளியெங்கும் வசிக்கின்ற தெய்வங்கள்;!
நீலக் கடல்முழுதும்
நிறைந்துள்ள தேவதைகாள்;;!
மியுடன் பாதாள லோகத்திலும் வாழ்ந்து
‘லோகசேமம்’ பார்க்கும் இரட்சகரே!
மழையிற்கும்
தீயிற்கும் காற்றுக்கும்
பொறு×ப்பான தேவர்களே..!
ஐந்து நிலங்களுக்கும் அவரவர்கள் எனும் கணக்கில்
நின்று அருள்பொழியும் இறையோரே…..
உயிர்வகையைப்
படைத்தலுடன் காத்து
அழித்து அருளலொடு
மறைத்துத் தொழில்புரிய வகைப்பட்ட கடவுளரே!
எங்கள் கிராமத்தின் எவருமற்ற §சைவெளியில்,
சந்திகளில், சின்ன மரநிழலில்,
குளக்கரையில்,
தங்கிக் கடன்தீர்க்குஞ் சிறுதெய்வத் தூதுவரே!
நீங்களெல்லாம் தர்மத்தின் நிழல்கள்;;
உமை மீறி
யாரும் அதர்மத்தின் நிழலாய் அரக்கர்கள்;,
அதர்மர்..,எம் அழகுபூமி தனைஏய்க்க எழுந்தருளின்
அறம்பாடி அவரெரிய வைப்போம்.
நீர் துணைதருவீர்……!

நாட்டுக்குரைத்தல்

என்னருமைத் தாய்நாடே……!
என்னருமைத் தாய்நாடே……!
உன்னை நினைக்கப் பாவமாய் கிடக்குதடி.
உன்னை நினைக்கப் பயமாய் இருக்குதடி.
உந்தன் அழுகையிற்தான்
உன்சேய்கள் மகிழ்கின்றார்!
உந்தன் துயர்களாற்தான்…. உன் புதல்வர் பாடுகிறார்!
உந்தன் பசி… சொல்லி உன்மைந்தர் உணவுண்பார்!
உந்தன் வலி… காட்டி உன்தனயர் மருந்துகொள்வார்!
உந்தன் அலைச்சலாற்தான் உன்மைந்தர்
உலகெல்லாம்
தங்கிக் குடியுரிமை பெற்றார்; குலம் வளர்த்தார்!
உன்துடிப்பால்… தம்கதிரை
ஆடாமற் காக்கிறார்கள்…,
உன்னைப் புளுகுவோர்கள்! உனக்காய் உயிர்சிந்திச்
சின்னவரோ மெழுகானார்!
‘சீலர்’களால் நீயுருகி
மாற்றுடைக்கும் நேற்று வழியற் றிருக்கையிலே
காற்றடிக்கும் திசையெல்லாம்
கைநனைத்த பெரியோர்… உன்
முகவாட்டம் ‘மறைவதனை’ அறிந்துனக்கு அருளவாறார்.
உன்னை மனதார ஒவ்வொரு கணமுமெண்ணும்…
உன்னைப் பிரியாமல் உன்துயரைப் பகிர்ந்திருக்கும்…
இந்நாட்டு மன்னர்…
திரையரங்கில் ஏழைகள்போல்
பின்னுக்கே நிற்கின்றார்.
பின்னுக்கும் பின்னேநான்
உந்தன் நிசச்சிரிப்பை ஓர்தடவை பார்ப்பதற்குச்
சந்தர்ப்பம் தேடி எட்டியெட்டிப் பார்க்கின்றேன்.

நம்புதல்

இயற்கையெனும் தெய்வம் நானே எதிர்பாரா
அருள்பொழியும் எந்தனுக்கு!
ஊர்மறந்துபோன… நல்ல
‘ஞான இசை’யைநான் கேட்டுயிர்க்க வைக்கிறது.
நல்ல கவிதையின்பால்
ஈர்த்தென்னைத் தைக்கிறது.
நல்லபல நூல்களைஎன் கைகளிலே சேர்க்கிறது.
நல்ல கலை, அறிவை,
நான் தேடத் தூண்டிற்று.
நல்ல சிலநட்புகளை, நல்ல வழிகாட்டிகளை
நல்ல கனவுகளை, நல்ல மனநினைவை,
நல்ல உணர்வுகளை, என்னோ டிணைக்கிறது!
இவ்வளவும் செய்யும் இயற்கையிறை
இனி எனக்கு
நல்லதொரு வாழ்வருளும் நம்புகிறேன்.
ஏனெனிலோ
உன்னையது காட்டியது!
இயற்கையை நான் வணங்குகிறேன்.

ஆறும் நானும்

எந்தனது பாதைக்கு எதிரில்… ஒருபாம்பாய்
நெளிந்தபடி சிவப்பாறு
ஓடிக்கொண் டிருக்கிறது.
சலசலத்துக் கொண்டுஅது நகர்கிறது.
பீறிட்டவ்
ஆறடித்துச் செல்கையிலே
ஆங்காங்கு கரைகளிலே
காதுகள், கண்கள், கழுத்தில்லாத் தலை, முண்டம்
கால்கள், கரங்கள்,
துண்டாடப் பட்டகுறி,
துடிப்பினது ஓசை துளித்துளியாய் வடிந்தபடி
இதயங்கள், என்று எவையெவையோ ஒதுங்கிக்
கிடந்துளன!
சிவப்பாறு உற்சாக வீரனெனப்
படர்கிறது!
நானந்த ஆற்றைச் சபித்தபடி
நடக்கின்றேன்;
அவ்… ஆறு தனது பெருமைகளை,
தனது குலப்புகழை, தனது நதி மூலத்தை,
அலையிசையை யுஞ்சேர்த்துச் சுயபுராணமாய்ப் பாட…,
பிணமணமும் இரத்த வெடிலும் கமழ்ந்துவர…,
நடக்கின்றேன் என்பாட்டில்!
நானறிவேன்; இவ்… ஆறு
எந்தன் நிலத்தில் உதித்ததல்ல… இவ் ஆறு
எங்கள் கழனிகளை வளர்த்ததல்ல… இவ் ஆறு
எந்தன் தலைமுறையைக் காத்ததல்ல… இவ் ஆறு
எங்களினை மீட்பதற்கு வந்ததல்ல… என அறிவேன்!
ஆனாலும்… இவ் ஆற்றை
வற்றவைக்குந் திராணியற்று
மூன்று முறை துப்பி முழுதாய்ச் சபித்துவிட்டு
நடக்கின்றேன்;
ஆற்றின் எதிர்த்திசையில் நடக்கின்றேன்.

கொள்ளை போன குளம்

அல்லி மலர்களென ஆற்றில் குளித்தெழும்பும்
மெல்லிடையார் எங்கே
விரைந்து மறைந்தார்கள்?
அல்லிக் குளமிப்போ அநாதரவாய்க் கிடக்கிறது.
துள்ளும் அலைகளெல்லாஞ் சோர்ந்து
ஒருமௌனம்
முள்ளாய்க் கிடந்தெந்தன் முகத்தில் உறுத்திற்று.
இந்தக் குளக்கரைக்கு
இடைக்கிடையே வருகின்ற
எந்தப் பறவையையும் இப்போது காணவில்லை.
துண்டிலிட்டு நாலு
சிறுதிரளி பிடித்ததனால்
வீட்டுப் பசி விரட்டும் ‘அவனும்’ இங்கு வரவில்லை.
மௌனமொரு பூதமாக
எனைநெருங்கி எனை விழுங்க
செய்வதறி யாமல் தப்பிப் பிழைத்துவந்தேன்.
அல்லி மலர்களென ஆற்றில் குளித்தெழும்பும்
மெல்லிடையார்… யாரால்
வராது மறைந்தார்கள்?
துண்டிலிட்டு நாலு சிறுதிரளி பிடித்ததனால்
வீட்டுப் பசி விரட்டும்
அவனுமாராற் பசித்துள்ளான்?

கண்ணீரின் பாடல்

கண்ணீர்
இதைப்பற்றிக் கனக்கக் கதைத்திடலாம்;.
கண்ணீர்முன் னொருநாளில்…
-காய்ந்த இந்தப் பூமியலே-
காட்டாறாய்ப் பாய்ந்து கரையுடைத்து ஓடியது.
வீட்டுக்கு வீடு உருவாகி
வெட்டிவைத்த
வாய்க்கால் வழியோடி, வதக்கியது.
தொற்று நோயை,
வற்றாக் கவலைகளை வழங்கிக் கிடந்தது… நம்
புற்றுகளைக் கரைத்துப் புலம்பெயர வைத்ததது.
கண்ணீரின் வெள்ளத்தில்
காணமற் போனவர்கள்
எண்ணற்றோர்;
மூழ்கி இறந்து மிதந்தவர்கள்,
பேச்சுமூச்சு அற்றுப் பிரமை பிடித்தவர்கள்,
நீந்திக் கரையேற முடியாமல்…. அலைகளிலே
அடிபட்டு இன்றும் அலைபவர்கள் பல்லோர்தான்!
வேறுபாடு காட்டாதிவ் வெள்ளம்
அனைவரையும்
நாறடித்த துண்மை!
நகரும் இதிற் தப்பவில்லை!
ஆனால் கிராமங்கள் தான் அதிகம் வாடிற்று.
“கண்ணீர்ப் பிரவகிப்பைக் கட்டிவைக்க
அணையமைப்போம்….
மண்ணினிலே ஒவ்வோர் மனிதர்களும் வரவேண்டும்’’
கட்டளைக்குச் ‘செம்மனச் செல்விகள்’ தான்
என் செய்வார்?
“கட்டுகிறேன்” என்று கதையளந்த சிவன் மீது
பட்ட அடியோ பரவி எல்லார் முதுகும்
நொந்த துணர்ந்தோம்!
இன்றோ தொடர்கோடை…
கண்ணீரின் வெள்ளம் காயத் தொடங்கிற்று.
இன்னும் சில பொழுதில்
எல்லாம்’ வடிந்தோடும்!
பின்… இந்த வெள்ளப் பெருக்கில்… அகப்பட்ட
எல்லோரையும் மீட்டு
‘மனிதராக’ மாற்ற வேண்டும்.
மீண்டுந் துளித்துளியாய் வீழ்ந்து… பெருக்கெடுத்துப்
பாய்ந்தெம்மை வாட்டாமற் பார்க்கவேண்டும்.
அதற்காக
கோடைவெயில் நீடித்து நிலைக்க
உழைக்க வேண்டும்.

புலம்பல்

எத்தனைநாள் எதிர்பார்த்துக் காத்தி ருந்தோம்?
எத்தனைபேரிடம் தேடி நாமலைந்தோம்?
எத்தனையோ துரைகளிடம் நீதி கேட்டோம்
எத்தனை ஊர் வலங்களிலே நாம் கரைந்தோம்?
எத்தனை நாள் மகஜர்களில் நாம் தொலைந்தோம்?
எத்தனை உண் ணாவிரதம் நாமிருந்தோம்?
எத்தனை ஆணைக்குழுமுன் நாம் அழுதோம்?
இத்தனைக்குப் பின்னுமின்று இடிந்து போனோம்!

நேர்த்திவைத்த கோவிலொன்று இரண்டு இல்லை.
நினைந்து செய்த பூசைகட்கு அளவே இல்லை.
சாத்திரத்தில், மந்திரத்தில், நூலில், மையில்
தெய்வவாக்கில், நம்பி நின்றோம்… பதிலே இல்லை.
தேற்றியெமை நாம்நிமிர்த்தி… ஒருநாள் செல்வம்
சிறையிலிருந்து திரும்புமென்றோம்… நடக்க வில்லை.
தோற்றோம் நாம் ‘கூற்றுவர்’ முன்; வழமை போலே
துவண்டழுதோம்; இனியெமக்குத் துயரா எல்லை?

வன்செயலின் நகக்கிழிப்பில் சிக்கி… எங்கள்
வாசமலர் போனதென்று சேதி சொன்னார்.
எங்களது ‘இனிமைகளின்’ இறப்புக் கெல்லாம்
இது சாட்சி என.. நட்ட ஈடா தாறார்?
என்னாச்சு? துடிதுடித்துக் கண்ணீர் வற்றி
எங்களுள் நாம் சிதைந்தழவும் முடியா துள்ளோம்.
உண்மையெல்லாம் புதைந்ததுவோ? இனியென் செய்வோம்?
உயிர்ப்புகளை இழந்திழந்தே சடமாய்ப் போனோம்.

தார்

வெய்யிலிலே நன்றாய்ப் பொரிந்து கிடக்கிறது
தார் வீதி;
பாதம் தனைவைத்தால்… கொப்புளிக்கும்.
தாரொட்டிக் கொண்டால் மரணவலி சுட்டுலுப்பும்.
இரப்பர்ச் செருப்பும் இரணமாகச் சுட்டுத்… தன்
எரிவில் எனைக்கடிக்க எட்டி நடக்கின்றேன்.
உருகிய தாரின் குரூரம் எனைவறுக்கச்,
செருப்பும் அற,
பொரிந்த தாரில் பதம் பொசுங்கி
துடித்துப் பதைத்துத் தீமிதித்துப் புண்ணானேன்.
‘ஐம்பத்து எட்டில்’
கொதித்த தார்ப் பீப்பாவில்
சங்கமித்த தமிழ்மகனின் வலியினிலே… நானும் இன்று
கொஞ்சம் அனுபவித்த
கொடுப்பினையில் நடக்கின்றேன்.

மறத்தல்

இவ்வளவு சுலபமாயா எல்லாம் மறந்துபோச்சு?
ஒவ்வோர் மனதின் உள்ளும்
இருந்த இரணம்
இவ்வளவு கெதியினிலா ஆறிற்று?
இதயத்தில்
அன்று இட்ட தீயும் அணைந்ததுவா?
காதுகளுள்
அன்றறைந்த ஓலம் அகன்றதுவா?
கண்களுக்குள்
கல்வெட்டாய் நின்ற காட்சிகள் மறைந்தனவா?
அவ்வளவு சுலபமா ‘அத்தனையும்’ மறந்துபோதல்?
காயங்கள் காயங் களாயே இருக்காமல்
ஆறுவதில் வியப்பில்லை!
ஆனால்… வடுக்க ளெல்லாம்…
சாகா வரம்பெற்றுத் தழைக்கும்;
இது பொய்யில்லை!
மறப்போம்நாம் மாறிவிட்ட காயத்தை!
ஆனாலும்
மறக்காமற் சுமக்கோணும்
நாம்பெற்ற வடுக்களினை!
அவைகள்தான் நாம்தேட அடிமுடிகள் ஏது மற்ற
பிழம்பாகும்;
நாம்வைக்கும் அடிகளுக்கு வழிகாட்டும்.

வேர்

வீட்டுச் சுவரின் விரிசலிலே ஓர்துளிர்ப்பு.
ஆச்சர்யந் தானே…
ஆங்கு ஒரு ஆலவிதை
தனைத்தகர்த்;துப் பச்சைத் தளிர்க்கரத்தை ஆட்டிற்று.
மனம்போல் வளரவிட்டேன்.
மளமளென்று வேரோடி
விசுவ ரூபங்கள் கொள்ளத் தனைவிரித்து
சுவர்வெடிப்பைப் பிளந்து துணிந்து சுகங்கேட்டுச்
சிரித்ததெனைப் பார்த்து! சிலநாளில்… என்கையைப்
பற்றி அளவளாவப் பார்த்தது;
நான் சுதாரித்தேன்.
“இனியும் இதைவிட்டால் என்வீட்டுச் சுவர்தகர்த்து
எனைவீட்டை விட்டே எழுப்பிவிடும்”
நான் பயந்தேன்.
அன்பாய் அதுஎன்னை அருகழைக்கும் போதெல்லாம்
முன்போற் சிரியாமல்
முகந் திருப்பிச் சென்றேன்… பின்
“பாவ” மென்று பாராமல் சுவர்ப்பிளவில் வேர்தேடி,
வெட்டி…, அறுத்திழுத்தேன்!
ஆழ ஓடிச் சென்றவேர்கள்…
என்வீட்டு அத்திவாரத்திற் துளைத்து
அதைப்பிளந்து
நின்றுருந்த செய்திதனை நேரேநான் கண்டதிர்ந்தேன்.
ஆலமரஞ் சிலநாளிற் பட்டது;
என் ‘அகத்தில்’ அதன்
வேர்துளைத்த வலிமட்டும் இன்றும் இருக்கிறது.

மெய்யுறவு

ஒன்றென்றால் வந்து உதவ ஒரு நாதியற்ற
அன்று…
உனைப்பிரிதல் மரணத்திலுங் கொடியது
என்றுன் அருகிருந்தேன்.
எறிகணைகள் மிக அருகில்
வீழ்ந்து வெடித்து அயலை உருசிக்கையிலும்,
போர்… கட்டை அறுத்து வந்தெம்
புலவுகளை மேய்கையிலும்,
வாழ்ந்திருந்த சுற்றம் மழைக்கால எறும்புகளாய்ப்
போகையிலும்,
தெருக்கள் புழுதி தனைக்கிளற
ஆளற்று வாடையிலும்,
அண்ணாந்து வெறித்தபடி
ஏதோ ஒருதுணிவில் இருந்தேன்நான் உன்னோடு.
நானுனக்குத் தெம்பூட்ட
நீ எனக்கு தெம்பூட்ட
சாவை இருவருமாய் மாறிமாறித் துரத்தி நின்றோம்.
அன்றெமக்கு ஆதரவு
செய்ய எவருமில்லை.
வந்து விழிதுடைத்துத் காயத்தில் மருந்திட்டு
உண்ண ஒரு கவளஞ் சோறு தருவதற்கோ…
கண்ணுறங்கும் போது காவலுக்கு நிற்பதற்கோ…
“அஞ்சற்க” சொல்வதற்கோ
எவருமற்ற அனாதையானோம்.
இன்றுனக்கு எண்ணற்ற உதவுந் திருக்கரங்கள்.
“உன்துணைக்கு நாம்” என்று
உவந்து வந்து சேர்ந்தன… நீ
புண்பட்ட வேளை-விட்டுப் போனவைகள்.
கவர்ச்சி பொங்க,
வண்ணங் குலுங்க, வடிவொளிர, நாகரிகம்
மின்னப் பலபுதிர்கள்.
அவர்கள் அளவளாவப்
புன்னகைத்துச் சிரிக்கின்றாய்!
“நீயும் பகட்டுகளின்
பின்- பழசை மறந்தாயோ”
பேச்சிழந்து நான் நிற்க…
கடைக்கண்ணால் எனைப்பார்த்துக்
கண்ணீர் துடைக்கின்றாய்.

இல்லாத இதம்

எத்தனை அழகு இங்குறைந்து கிடக்கிறது?
மெத்தை விரித்ததென
விழிவிரியும் எல்லைவரை
பச்சை… பசேலென்று படுத்திருக்கும்.
தூரத்தில்…
உச்சியிலே முகில்கள் உட்கார மலைகளெல்லாம்
கரிய இராவணராய்க்
கடுந்தவங்கள் செய்திருக்கும்.
தெருவில் இறங்கினாலோ…
சிலிர்ப்பொன்று சூழ்ந்து கொள்ளும்.
தடிமன் பிடித்தொழுகும் மூக்காய்த்
தரை நோக்கி
அடிக்கடி மழைசிந்தும்.
அதிகாலைப் பனிப்புகாரின்
போர்வைக்குள் பூந்து, புதிதாய் நிலம் வெளுக்கும்
வேளையிலே;
வெய்யில் விழுதுவிடுங் காலையிலே;
குளிர்வாடை கொஞ்சக் குதிக்கும் நீர் வீழ்ச்சியிலே;
குதித்தெழுந்தால்…,
பூக்கள் கொத்தாய்ச் சிரித்திருக்குஞ்
சோலைகளைக் கண்கள் சுவைத்தால்…, அது சொர்க்கம்!
சந்திகளில், ‘அரசடியில்’
நிஷ்டை நிலைதன்னில்
இருக்கின்ற புத்தர் சிலைமுகத்தில் அமைதியெழ
தருமச்சக் கரத்தில்,
வர்ணக் கொடியிடையில்,
‘பிரித்’தொலியும் கேட்க,
அலைகளென நகர்ந்துவரும்
தாமரை மலர்களது தளதளப்பில் மனம் இலயிக்கும்.
“வஞ்சனைகள் இன்றி
மலர்ந்த எழிலிங்கு
மட்டும் மலியும் மருமமென்ன” மனம் வியக்கும்.
இந்த அழகு,
இந்தக் குளுமை, இதம்
இங்குள்ள அப்பாவி மக்களிலே மட்டுமன்றி
இந்நிலத்தை ‘மேய்ப்போரில்’ இருந்திருந்தால்
என்தாய்மண்
இடுகாடாய்த் தானா
இன்றைக்குக் காட்சிதரும்?
கண்டி வீதியில் கவிந்த கவிதை

‘கண்டிவீதி’ தன்னைக் கடக்கின்ற போதெல்லாம்
எண்ணத்தில் ஏதோ
இனம்புரியா அங்கலாய்ப்பு!
‘முகமாலை’ கடந்து ‘ஓமந்தை’ செல்கையிலும்,
‘ஓமந்தை’ இருந்து ‘முகமாலை’ போகையிலும்,
ஓடுகிற பேருந்தின்
கண்ணாடி ஓரத்தில்
நானமர்வேன்;
கண்ணை நங்கூரம் பாய்ச்சிடுவேன்.
பஸ் ஓட ஓடப் பயணிக்குங் காட்சிகளைக்
கைகோர்த்தென் நினைவும்
பின்னோக்கிப் பயணிக்கும்.
‘விளக்குவைத்த குளத்தில்’ இருந்தின்று புறப்பட்டேன்…
வெளிகள் சிறுபற்றைக் காடாய் விரிகிறது.
இந்த இடத்தைச்
சில வருடத்தின் முன்பு
கண்கொண்டு பார்த்திடுதல் சாத்தியமோ?
போர் இங்கே
தன்னிஷ்ட்டம் போலே தலை விரித்து ஆடியது.
இந்தத் தெருமருங்கில் எத்தனை உயிர்களன்று
சின்னாபின் னமாகிச் சிதறிற்று?
எங்கெங்கோ
பிறந்தவர்கள்… வந்திங்கே
உயிர் பிரிந்து போனார்கள்.
கொக்கட்டிச் சோலையிலோ
கோண்டாவில் மேற்கினிலோ
பிறந்த தமிழிளையோர்
இம்மருங்கிற் சாய்ந்திருப்பார்.
காலியிலோ, கண்டி, களுத்துறை, மாகோவினிலோ
பிறந்த சிங்கள இளைஞரிங்கே வீழ்ந்திருப்பர்.
எவரெவர்கள் தேய்ந்தார்கள்?
எவரெவர்கள சாய்ந்தார்கள்?
எவருடலின் எச்சமின்றும் புதரடியில் இருக்கிறது?
எவரெவரின் மூச்சின்னும்
இக்காற்றில் மிஞ்சிற்று?
எவரெவரின் இறுதியோலம் இன்னுமிங்கு அலைகிறது?
இவ்வீதிக்காய் அன்று இறந்த முகங்களெவை?
இவ்வீதிக்காய் அன்று தொலைந்த பெயர்களெவை?
தேடி இன்றும் பார்க்கின்றேன்
எதுவும் தெரியவில்லை.
போனவார மழையில் புசுபுசென்று புல்முளைத்துப்
பசுமை துளிர்த்துப்
படர்ந்து சிலிர்க்குதன்றி
போர்…நடந்து போன சுவடெங்கும் தோன்றவில்லை.
சமாதான காலப் பயணச் சுகத்திடை… இத்
‘தெருவின் விலைகொடுப்பு’
சொகுசான பயணத்தை
எனக்குத் தருவதில்லை… இன்றும் தரவுமில்லை.

காற்று வரும் காலம்

இது காற்றுக் காலம்.
இரைந்தெம் தலைகலைத்துச்
சதிசெய்யும் காற்று; தாராளமாய் மண்ணை
அள்ளி அபிசேககம் அதுசெய்யும்.
மரங்களிலே
துள்ளி விளையாடும் துடுக்கு இளங்காற்று
கொள்ளை வாசங்கள் கொணரும்.
கிளுக்கிண்டும்.
மரங்கள் கரகமாடும். வருவோர் போவோர்க்குச்
சொரியும் புதுப்பூவைத் தூவி ஆசீர் வதித்தேகும்.
பட்டங்கள் ஏற்றப்
பரவசமாய் வருஞ்சிறுவர்
இட்டமுடன் ஓடி இளைப்பார்கள்.
காற்றாடச்
சைக்கிளேறி வீதிகளிற் தம்பிமார் படையெடுப்பர்.
கைபிரியாக் காதலரைக் காற்று விசாரிக்கும்.
வெளிபூர்ப் பறவைகள்
காற்றில் மிதந்து வந்து
எழில் புதிதாய்ப் பூத்திருக்கும் எம்கொம்பில் இளைப்பாறும்.
விந்தைநெல்லாய் விளைய… விளைத்துச்
சிரித்தவர்கள்
வந்தடிக்கும் ‘காற்றின் வளத்துக்கு’த்
தூற்றுவரோ?
இது காற்றுக் காலம்… எனது கவிதைகட்கு
இது ஊற்றுக் காலம்.
எழிலை இரசித்தபடி
வருடுகிற காற்றில் வசமிழக்கும் என்தேகம்.
என்றாலும் காற்று எடுத்து வரும்
புழுதி மணல்
கண்ணுள் விழுந்துறுத்தி என் இரசிப்பைக் கெடுத்திடலாம்…
என்பதனாற் காற்றின் முன்
எச்சரிக்கை கொள்ளும் உள்ளம்.

துணை

ஊரெல்லாந் தூங்கிற்று.
உறவெல்லாம் தூங்கிற்று.
வேர், விழுதுந் தூங்கிற்று, இராகூடத் தூங்கிற்று.
எனக்கும் கவிதைக்கும் துணையாகத்
தூங்காமல்
‘மினக்கட்டு’ வானில் விழித்திருக்கு
நிலாவிளக்கு.

ஊர்வலம்

கம்பீர மாகக் கட்டியமும் கேட்கிறது.
கீர்த்தி பலசொல்லி
கிண்டிக் கிளறி… அவள்
முப்பாட்டன் பூட்டனது சந்ததியின் ‘அடி’ மற்றும்
பூர்வீகச் சொத்தின் புகழ் சொல்லி
புது மிடுக்கில்
கம்பீர மாகக் கட்டியமுங் கேட்கிறது.
“சமாதானத் தேவதை பராக் பராக்” எனச்சிலிர்த்துத்
தலைப்பாகைச் சேவகனோ
தண்டோராப் போட்டபடி
முன்செல்ல…,
மேள தாளக் கரக இசை
விண்செல்ல…; சந்தி மூலை முடுக்கெல்லாம்
வாய்பார்க்க; ஒவ்வோர் வாசலிலும் நிறைகுடங்கள்
வரவேற்க;
சமாதானத் தேவதையோ நடைபயின்று
வருகின்றாள்!
அவள்வாயில் ஒட்டிவைத்த புன்சிரிப்பு!
அவசர கோலத்தில் அலங்காரம் செய்தனரோ…
அன்னவளின் மேனியெங்கும் அரிதாரப் படையெடுப்பு.
நொண்டி நடப்பதனை மறைக்கக்
குதியுயர்ந்த
பாத அணி பூட்டினரோ…நடையினிலோர் தத்தளிப்பு.
கையொன்றில் ‘ஒலிவ்’ இலைகள் துலங்க
முகத்தினது
பதட்டத்தை மறைத்துப் பாட்டொலிகள் உசுப்பிவிட
வாய்நாற்றம் மறைத்து வெளிநாட்டுச் ‘சென்ற்’ பரவ
பிச்சைத் திருவோட்டை
உருமாற்றித் தயாரித்த
மகுடத்தில் நிறநிறமாய் மணிகள் ஒளிவீச
கொண்டையிலே வெண்புறாவின்
சிறகு குத்தப் பட்டிருக்க
சமாதான தேவதையோ வருகின்றாள் அணிவகுத்து!
புழுதி படிந்த முகங்களிலே புன்னகையும்,
ஆறா இரணங்களிலே ஒருசுகமும்,
பயந்திருண்ட
மனங்களிலோர் வெளிப்பும், மலர்வும், பிறந்துவர
தகர்ந்துபோன கடை தெருமுன்
வரிசையாய்நாம் நின்றபடி
கையை அசைக்கின்றோம்.
தானும் ஒரு கையசைத்து
சமாதான தேவதையும் எமைக்கடந்து போகின்றாள்.

புதிதாய் மலர்ந்த ஆறு

சென்ற வருடம் இதேதினத்தில்
பாம்பொன்றின்
காய்ந்து கழன்றுபோன செட்டையாய் உலர்ந்தபடி
தடமழிந்து,
மண்ணும் பொருக்கு வெடித்து, வரள்
நெடிபரவக் கிடந்ததென்னூர் ஆறு நடந்தபாதை!
நேற்றாற்றுப் படுக்கைதனில்
எந்த நிழலுமில்லை!
எந்த மரமுமில்லை! எந்த வயலுமில்லை!
தூரத்துக் கானற் துளியினிலும் குளுமையில்லை!
நீச்சல் அடிப்பதற்கோ,
புனித நீராடுதற்கோ,
யாரும் வரவுமில்லை! கொக்கு, குருவியென
ஏதுந் திரிந்ததில்லை!
இறந்து; நீர் வற்றியோய்ந்து
பொருக்கு வெடித்து வரள் நெடியோ டிருந்ததெங்கள்
ஆறு நடந்தபாதை!
இன்றோ சலசலென்று
கரைகளோடு கைகுலுக்கிக் கதைபேசி நகர்கிறது…
எங்களது ஆறு!
என்காலை வளைத்தபடி,
தரைதட்டி வந்த நிலாப்
படகை என் காலடியில்
காட்டி, தளம்பி
கதைக்கிறது எங்களாறு!
இப்படியே எங்களாறு இளமையோடும் இனிமையோடும்
என்றும் இருந்தெம்மை
இரட்சிக்க வேண்டுமென
ஆசீர் வதித்தேன்!
“இனி எந்தப் பெருங்கோடை
வந்தாலும் வற்றேன்யான்” என எனக்கு உறுதிகூறி
கரைபுரள என்னைக் கடக்குதெங்கள்
ஊர் ஆறு.

உறவு

வண்டியிலே கனபாரம்!
நுரைகக்க நாம்பன்கள்…
கொண்டிழுத்துச் சென்றுளன…
‘கொல்களத்தில்’ வெட்டுண்ட
மாட்டை… இறைச்சிக் கடைக்கு வெகுவிரைவாய்.!

உருவேற்றல்

இங்கே கிடக்கிறது எலும்புகளின் துண்டங்கள்.
சங்குக் கழுத்தெலும்பு,
தலையெலும்பு, மார்பெலும்பு,
காலெலும்பு, எல்லாமும் ஓரிடத்திற் கிடக்கிறது.
பேய்களன்று கூடிப் பிய்த்து அழித்ததனால்
சா… விழுங்கிச் செமித்துச்
சாய்ந்துபோன சீவனது
எலும்புகளை மீட்டெடுங்கள்…
பறவையுரு வருகிதே! பறவையுருவில் ஈகத்
தசையைப் பதியுங்கள்.
சரி… தோலை அணியுங்கள்.
அடடா புறாவடிவம்!
ஆம் இனி நீர் அப்பாவி-
வெள்ளை மனதிருந்து மையெடுத்துப் புறாவினது
தோலுக்கு நிறமிடுக! என்றாலும் உயிரற்ற
‘சடலமாய்க் கிடக்குது சனியன்;’ சரி!
இனிமேல் நீர்
பொறுமையுடன் உயிர்தன்னைத்
தீர்த்தம்போல் படிப்படியாய்
ஊட்டுங்கள்!
அவசரங்கள் வேண்டாம்… உதவுங்கள்.
புத்துயிர்க்க வேண்டுமிந்தப் புறா!
அதுவும் புத்துயிர்த்தால்
இந்தத் தரை சிரிக்கும்பூ எல்லோரும் வெண்புறாக்கு
வந்து உயிர்கொடுங்கள்…
அது உயிர்த்துச் சிறகடித்து
இந்தத் திசையெல்லாம் எழில் பூக்க வைக்கட்டும்.

கேள்விகள்

வானம் சற்று வெளுத்துத் தெளிகையில்
வந்து ஏன்தான் கருமுகில் சூழுது?
கானகங்கள் துளிர்க்கத் தொடங்கையில்
காட்டு மரங்களேன் அரணாக மாறுது?
போன காலத் துயரைக் குழிதோண்டிப்
புதைத்தனர்பூ எந்த நாய்தான் கிளறுது?
ஈனப் பேயை ஏவி விடும்படி
எந்த மந்திர வாதி பணித்தது?

இரத்தப் பசியாறித் தூங்கிய கொற்றவை
எதற்கதற்குள் “பசி” என்றழுகிறாள்?
நரிகள் ஒவவொன்றாய்க் கூடி… வளையற்ற
நண்டு பிடிக்கத் தொடங்கிற்றோ நித்தமும்?
எரிமலை வாயை நீரூற்றி மூடியோர்
ஏன் அதற்குள்ளே… கீழே இறங்குறார்?
துருப்பிடித்த கருவியை வீசினர்
துருவிலாத கருவிகை யேறிற்றோ?

கொம்பு சீவிக்… குடல்கள் உருவவும்
கொள்ளி வைப்போர் குலையை அறுக்கவும்
நம்பியார்த்தன வில்லரை வீழ்த்தவும்
நந்திபோல வழியை அடைத்துமே
கம்பீரங்கள் நகரத் தடுத்திடும்
கரங்கள் சாய்க்கவும், கண்ணீரின் சாவினை
நம்பியோர்களின் விழியைத் துடைக்கவும்
ஞானவான்… இங்கு யாருமே இல்லையா?

நியாயங்கள்

என்னுடைய சொத்தை ஏய்த்து… அதிலமர்ந்து
உன்தரப்பு நியாயங்கள்
ஒவ்வொன்றாய்க் கூறுகின்றாய்.
‘அடைவுவைத்து’ ‘அறுந்து’
ஆதனத்தை மீட்டெடுத்து
இருந்தவன் நான்பூ
சண்டித் தனத்தாற் பறித்து விட்டு
“உரிமையுனக் கில்லை” யென உலகுக்குச் சொல்கின்றாய்.
அன்றொருகால் அந்த ஆதனத்திற் தானே… என்
சின்னஞ் சிறு பராயம்
சிறகடித்துப் பாடியது.
முன்… எனது தலைமுறையின் மூச்சதனுட் சுவறியது.
நான் நடந்த தோட்டம்,
நான் புரண்ட மண்திடல்கள்,
நான் திரிந்த நாற்திசைகள், நனவிலெனை மேய்க்கிறது.
அன்றொருநாள் நானும்
அடித்து விரட்டுண்டேன்.
உன்திமிரால் நானும் ஊரூராய் அலைவுற்றேன்.
உன்கொற்றம் அங்கு
உயர்ந்து வளருகையில்
என்சுற்றம் எங்கோ இடிந்து சிதறிற்று.
எத்தனை பெருங்கோடை என்னை வரட்டிற்று?
எத்தனை மழைநாட்கள் என்னை நனைத்திற்று?
இன்றும்நான் கையா லாகா திருக்கையிலே
என்னுடைய சொத்தில்
எதையெதையோ செய்துகொண்டென்
புன்னகையை நிம்மதியைப் பெரிது படுத்தாது
உன்தரப்பு நியாயங்கள்
ஒவ்வொன்றாய்க் கூறுகின்றாய்…

துயர அனல்

துயரம் ஒருநெருப்புபூ சுடும்!
தொட்டுத் தொடர்ந்தெரியும்.
துயரம் ஒரு நெருப்பு… அதுதான் நீ யாரென்று
உலகுக்குப் பறைசாற்றும்!
நீமெழுகாய் இருந்திருந்தால்…
இளகி உருகவைக்கும்.
நீ தங்கமாய் இருந்தால்…
உருக்கிச், சுடர்ந்து ஒளிமயமாய்த் திகழவைக்கும்.
துயரம் ஒருநெருப்புபூ
அது நீயார்… என உனக்கே
அறிவிக்கும்பூ
துயரத்தை எதிர்கொள் அது உனை வளர்க்கும்.

நிகழ்காலம்

கானல்நீர் தானோ கண்முன் தெரிகிறது?
நாவரண்ட தன்றுபூ
நாவரண்டு பேச்சிழந்து
தாகத் தவிப்போடு தள்ளாடி நீர்த்துளியைத்
தேடிநெடும் பயணத்திற் திரிகின்றறோம்.
திடீரென்று…
கானல்நீர் தானோ கண்முன் தெரிகிறது?
சற்றுத் தொலைவில் சலசலென்று இசைமீட்டி
முற்றும் குளுமை முகிழ்த்தபடி
“எங்களதும்,
எங்களது ஊரின் எரிவை வரட்சியையும்,
சங்கரிப்போம்; பசுமை; தரையெல்லாம்
ஓங்கவைப்போம்”
என்று முழங்கிவிட்டு இன்றோ
சலசலப்பு
அற்று, குளுமை குறையாகக் கொண்டு, எங்கள்
கற்பனைகள் விக்கிக் கதறவைத்து,
நாம் அணுகப்
பின்னோக்கிப் பின்னோக்கிப் பிரயாணப் படுகிறதே…
கானல் நீர் தானோ நம் கண்முன் தெரிந்துளது?
கண்ணீரும் வற்றிற்றெம் கண்களிலே…
நாமென்ன
பன்னீரா கேட்டோம்?
பசி மயக்கம் தனைப் போக்கத்
தண்ணீர்க்குத் தவிக்கின்றோம்!
தாகம் தணியுமென்று
ஆவலுடன் ஏங்குகிறோம் ஆர்க்கு இது புரிகிறது?
கானல் நீரோ இன்னும்
கண்முன் தெரிகிறது?

உங்களது கைகோர்ப்பு

எங்கே எழுந்துநின்று எக்காளங் கொட்டுங்கள்.
எங்கே பறைகள்?
எங்கே நும் பேரிகைகள்?
ஒன்றாய் எடுத்தூதி உரக்க முழக்குங்கள்.
கண்பறிக்கும் மத்தாப்பு,
கணக்கற்ற வெடி, வாணம்
விண்ணை உலுப்பி விண்மீன்களை உதிர்த்து
மண்ணில் விழுத்த…
மக்காள் வெடியுங்கள்.
ஆனந்தக் கும்மி அரங்குகளை ஆட்டட்டும்.
ஊர்த்தெருக்கள் எல்லாம் உருவேறி
‘அற்புதத்தை’
வாழ்த்திப் பரவசமாய் வாயாரப் பாடட்டும்.
ஆளுயர ஆண்டாள் மாலை
‘அதிசயத்தின்’
தோள்களிலே வாடாமற் தொடர்ந்து அசையட்டும்.
‘அதிசயமாய்’ ‘அற்புதமாய்’ ஆகிவிட்ட
உங்களது
“எங்களினை ஈடுவைக்க”
என்றிணைந்த கைகோர்ப்பு
உங்கள் வெறிதன்னை ஒருபடி உயர்த்தட்டும்.
அந்தவெறி ‘எம் நிலையை’
எங்களுக் குணர்த்திவிடும்.

ஓமமும் வேள்வியும்

கான மணியோசை காற்றை உசுப்பிற்று.
பேரிகைகள், கொம்பு,
பெரிய பறை, சங்கு,
முரசு, உடுக்கின், ஓசை மூலைகளிற் கேட்கிறது.
தலைவாசல் தொடக்கம்
சதிராடுந் தோரணங்கள்…
கலையாடும் காற்றோடு கைகுலுக்கிக் கொண்டுளன.
வாழைகள்… பிரசவித்த
வலியோடும்… குலையோடும்
நாற்றிசையும் கட்டப் பட்டுத் துடித்துளன.
நடுவிலொரு ஓம குண்டம்!
நாயகர்நாம் எனப்பொங்கி…
படமெடுக்கும் நூறு பாம்புகளாய் ஓமத்தீச்
சுவாலைகள்… நெய்யுண்டு
சுடர்ந்து எரிந்துளன.
சுற்றிவர யாகத் துணைப்பொருட்கள்;
அவிசொரிந்து
சற்றுந் தளராமல் சரளமாக மந்திரங்கள்
சாத்திச் சுடரால் ஜொலிக்கும் முகங்களுடன்
சாஸ்த்திரிகள்; ஒவ்வோர் தரமும்
அவர்களது
கைகள் அவிசொரியக் கனன்றுமூளும் ஓமத்தீ…
மெய்யடியார் வணங்க விசுவரூபம் கொள்ளுதடி!
எத்தனை பொருட்கள்
எரிவாயிற் போகிறது?
எத்தனை திரவியங்கள் நீறிற்று?
வேக இன்னும்
எத்தனை அவிபொருட்கள் இருக்கிறது?
இதற்கிடையே…
வேள்விக்கு நேரம் விரைகிறது… என அருகில்
வாளெடுத்து ஆடுகளை
வரிசையாக விட்டு விட்டு
பூசாரி மார்கள் பூசை தொடர்கின்றார்!
ஏவலர்கள் படையலுக்கு
எவையெவைகள் தேவையென
ஆவலுடன் ஓடியாடி ஆயத்தஞ் செய்திருக்க
பார்த்திருக்கும் பக்தர்கள்
‘பய-பக்தி’ கொள்கின்றார்!
கண்கள திறந்து கருவறையில்
கடவுளெனும்
‘எண்ணற் கரியான்’ சிலையாயே இருக்கின்றார்!
கான மணியோசை
காற்றை உலுக்கிற்று.
பேரிகைகள், கொம்பு, பெரிய பறை, சங்கு
முரசு, உடுக்கின் ஓசை
முழக்கமெனக் கேட்கிறது!

பாலூற்றும் பாட்டு

எட்டுத் திசையும் எழுந்தடித்த போர்நெருப்பு
சுட்டுப் பொசுக்கிற்று சூழ்ந்தவற்றை! – கட்டுப்
படுத்த முடியவில்லை; பாவலர் ‘வாய்ப் பூப்பை’!
படர்ந்துளது மண்ணிலெம் பாட்டு.

சந்தக் கவிமழையால் சாம்பல் பசுமைபெறும்.
வெந்தநிலம் பூக்கும். விருட்சமாகும்- மந்திரத்தால்
மாங்காய் விழல்… மாயம்; வாழும் கவிதைகளால்
ஓங்கிற்றே இங்கு உயிர்ப்பு.

எந்த அழிவினையும் ஈடுகட்ட ஏலும்… ஆனால்
சொந்த மொழியழிந்தால் தோல்விதான்!- இந்தமண்ணில்
இத்துயரம் இல்லை! இறவா வரக்கவிஞர்…
புத்துயிர்க்கும் மண்செய்வார் பூத்து.

இறவாக் கவியால் இளையாநம் தாயின்
எரிவகலப் பாடும் இனிய – புறக்கவிஞர்
வாழ்வதனால்; ஊழியுள்ளும் வந்து வசந்தங்கள்
ஆள்வதனைப் பாரே அறி.

எல்லாம் எரிந்தும் எரியாக் கவி நாக்கு
எல்லாத் தையும்மீட்கும் இங்கேகாண்! – பொல்லாத
சூதகலும்; தர்மம் சுடரும் கவிதைபோல்!
வேதனையை வெல்வோம் விரைந்து.

வல்லமைகளுக்கு வரவேற்பு

“வரண்டு போகவோ” எங்களின் வாழ்வென
வல்லவர் சிலரேனும் எழும்புக.
வரட்சி மாற்றும்… மகிமை உணர்ந்த நம்
மைந்தரின் துணையோடு கிளம்புக.
எரிந்து காய்ந்த பயிரை…பசளையாய்
இடுக; வெந்து வெடித்த நிலமதில்
பெருகி வியர்வை தெளித்து… இளக்கியே
பீடை யொழித்து நம் மண்ணைப் புரட்டுக!

ஆழக் கிணறுகள் தோண்டுந் திறனுள்ள
அந்தக் கரங்களில் ஆற்றல் பெருகுக.
பாழடைந்த கிணறு பல உண்டு
பயன்படுத்த… ‘தூர்’ எடுத்துக் கலக்கிடும்
ஊர வர்களை ஓரணி சேர்க்குக.
உதவிடா தென்ற ஓடை, வாய்க்கால்களை
நீளப்பாட்டிற் செதுக்கி நீர் பாய்ச்சுக.
நிறைய நீரூற்றி நிலத்தைக் குளிர்த்துக.

மாரியிற்கும் மனசுண்டு; நாம் வேர்வை
வார்த்தல் கண்டால்… அதுவும் இரங்கிடும்.
தூறித் தன்னால் ஆன உதவியைத்
தொடரும்; பேந்தென்ன வரட்சி தொலைந்திடும்.
ஏரெடுத்து இறங்கிப் புது விதை
இடுக; வரம்பொடு வேலியும் கட்டுக.
நாளை எங்களின் வாழ்வு குளிர்ந்திடும்…
நம்பிக்கை கையோடு இன்று எழும்புக.

அபிமான வீரன்

வானம் வெளுத்து விரிகிறது ஒரு பூப்போல்.
பூமி விழித்துப்
புலர்ந்து மலர்கிறது.
மூசித் தினம் பெய்யும் மாசிப் பனி கரைந்து
புல்லைக் குளிப்பாட்டிப் புலர்வை நனைக்கிறது.
“இனியென்ன சூரியன் எழுந்து மெதுவாகப்
பனிகுடிப்பான்;
பச்சை இலைகளுக்கு உணபூட்டி
அணிவகுப்பான்;
எங்கள் அட்ட திசையின் இருள்-
வினைதுடைப்பான்;
ஒளியென்னும் வெள்ளம் பெருகவைத்துப்
பணிதொடர்வான்” என்று பகர்கையிலே…
சூரியன் என்
முன்னே எழுந்து வந்தான் முறுவலித்தான்.
சூரியனின்
அயரா உழைப்பெண்ணி அசந்தேன்.
அவனோ எம்
உயிரின்மேல் வைத்திருக்கும் உண்மைக் கரிசனையை
வியந்தேன்.
முகில்கள் விலகா தடம்பிடிக்க…,
ஓரிரண்டு கீற்றையேனும் சிலநிமிடம் ஒளித்தருளும்
சீலத்தை எண்ணிச் சிலிர்த்தேன்.
தனைப்புதைத்து-
மழைஆக்கும் அன்பை மதித்தேன்.
‘அனைத்துக்குங்
காரணமாய்’ நின்றும் பிரதிபலன் பாராது…,
தாழ்வுயர்வு நோக்காது ஞானியென நிற்பவனின்
ஆழம் அறிந்தேன்;
ஆற்றல் தனை அடக்கிப்
பிரபலங்கள் தேடாத பீடுகண்டேன்;
அவன்போல
“என்வாழ்வை மாற்றவேண்டும்”
சபதம் எடுக்கின்றேன்.

எமது பாடல்கள்

இனிமை நுரை பொங்கி வழிய… இலய சுத்தம்
சுருதிசுத்தத் தோடு
துளிர்த்தவை நம் பாடல்கள்.
கிராமத்தின் மாரி மழைவாசம் போல்… இயல்பாய்ப்
பிரவகித்து எம்மோடு
பிணைந்தவை நம்பாடல்கள்.
எங்களது பாடல்கள் எமது விருப்புகளை
எங்கள் வெறுப்புகளை இயம்பியவை.
எங்களது
இன்பதுன்பத் தில்எங்கள்
நாவோடு ஒட்டியவை.
எங்கள் தனித்துவத்தை எம்முயிர்ப்பைச் சொல்லியவை.
எங்களது பாடல்களை எமதூதர் பறித்தெடுத்தார்.
எங்களயல் வாய்களிலே ஒப்பாரி தனைப்பதித்தார்.
எத்தனை காலங்கள்…
எங்களது பாடல்கள்
செத்ததென எண்திசையும் கூச்சல் கிளம்பிற்று.
நாமறியாப் புதுராகம்
கேட்டெம் செவிப்பறையும்
பிய்ந்து செவிடாச்சு! அப்போதான்… நாம் எமது
இதயத் துடிப்பில்நம் பாடல்கள் ஒலிப்பதனை
தெளிவாகக் கேட்டோம்! நம்
இதயத்தில் உள்ள அந்தப்
பாடல்களை நினைவுமீட்டிப் பாடி,
ஒலிபெருக்கி,
ஊருலகுக் கெங்களுயிர்ப் பாடல்களின் சிறப்பை
இன்றில்லாப் போதுமொரு நாளுரைப்போம்
உறுதிசொன்னோம்.

குயிலி

குயிலொன்று புல்லாங் குழலாகக் கூவிற்று.
உயிரின் குரல்நாண்கள்
ஒவ்வொன்றாய் அதிர்ந்திசைக்கக்
குயிலொன்று புல்லாங் குழலாகக் கூவிற்று.
“கூ” என்று அதுகூவ
என்நண்பன் எதிரொலிபோல்
“கூ” என்றான்;
குயிலின் குரல் உயிர்த்துக் கூவிற்று.
“கூ” என்றான்.
மறுபடியும் குயிலினேக்கம் கூடிற்று.
ஏக்கம் குழைத்த ஒற்றைக் குரல்தந்த
தாக்கத்தில் சிலையானேன்.
தவித்த குயிலழைப்பு
ஏமாந்து போயிருக்கும்.
இன்றைப்போல்… இனி நாளும்
எங்கோ இதேகுயிலி ஏங்கிக் குரல்கொடுக்கும்.
அங்கங்கு ஏமாற்றந் தானா
அதை அணைக்கும்?

வெளிப்பு

தோட்டக் கிணற்றில் துலாமிதிப்புத் தொடர்கிறது.
பாட்டோடு… ஏதும்
பரபரப்பு இன்றி… நெடுந்
துலாவில் நடக்கின்றான் துரை.
வாய்க்கால் சீராக்கி,
கலகலத்து ஓடும் நீர்பாய்ச்சிப்
பயிர் வாயில்
பால்வார்த்துச் செல்வம் பாடுகிறான் எதிர்ப்பாட்டு.
ஏதோ பறவையினம்,
ஏதேதோ இசைக்கலவை,
ஏதும் கவலையற்று மௌனம் நகர்கையிலே
காலைப் புகாரும்
கலைகிறது கீழ்த்திசையில்.
தீபமேற்றி ஒவ்வோர் திசைதிசையாய்த் திரிதூண்டிச்
சூரியனார் வருகின்றார்.
சிற்றோடை நீராடி,
மாசற்ற காற்று வந்து வளைக்கிறது.
கண்ணெட்டுந் தூரமெல்லாம் பசுமை கடைவிரித்தென்
எண்ணத்தில் பசுமை இறைக்க,
வானத்தின்
வண்ணம் மனதினையே
வண்ணமய மாக்கிவிட
வரம்பில் நடக்கின்றேன்.
பனிபடர்ந்து குழைகின்ற
வரம்பில் அமர்கின்றேன்… மனசு நிறைகிறது.
காற்றை அளைய என் கையும் சிலர்க்கிறது.
எனைக்கண்டு கையசைத்து
‘நடக்கின்றான்’ துரை… ஆம்
பாட்டோடு ஏதும் பரபரப்பு இன்றி… நெடுந்
தோட்டக் கிணற்றில்
துலாமிதிப்புத் தொடர்கிறது.

அவஸ்த்தை

காந்தம் இரும்பைமட்டும் கவர்வதுபோல்
உன்னிடத்தில்
மட்டும் ஒரு சக்தி மலர்ந்து – அது நானும்
கிட்ட நெருங்கக் கவர்கிறது!
என்செய்வேன்?
ஒன்றுந்தன் காந்த சக்தியினை ஒளித்துக்கொள்.
அல்லாதென் உள்ளிரும்பைக்
கல்லாக்கி விட்டுப்போ!

ஆறுதல்

வாசம் பரவி வருகின்ற மாலைவேளை.
கோவிலடி வீதி.
கொற்றக் குடைநிழலாய்,
ஏதோ பரவசத்தை எமக்கூட்டும் அன்னைமடி!
இளைப்புக் களைப்பென்று
எவரெவரோ வேம்பின்கீழ்
அமர்ந்து, அளைந்து மணலெண்ணும் பொன்முற்றம்!
வயிரவரின் வாசலிலும்,
கேணி யடியினிலும்,
தேர்முட்டி அருகேயும் தினம்வந்து கூடுகிற
இளையோர் முதியவரால் எழில்பூக்கும் அருள் விருட்சம்.
அயல்அம்மன் கோவில்
மணியோசை கேட்டபடி
அந்தி சரிய, அசைந்துவரும் இரா…கவிய
அந்தரங்கள் அற்று ஆறவரும் நண்பருடன்
நேரம் நகர்வதனை
நினையாமற் கதையளக்கும்
நிம்மதிப் பூங்கா!
நின்று அளந்தகதை
எண்ணில் அடங்காது… விட்ட பகிடிகளும்
சொல்லியே மாளாது…
நேற்றிருந்த பலநண்பர்
இன்றில்லை;
இன்றோ புதிய சில நண்பர்கள்.
பின்னோக்கிப் பார்க்கின்றேன்;
நானும் எனைப்போன்ற
ஒன்றரண்டு பேருந்தான் நிரந்தர உறுப்பினராய்
நிற்கின்றோம்!
காலம் நெடும்பாய்ச்சல் பாய்ந்தபின்னும்
நிற்கின்றோம்!
போனோர்… “எதையெதையோ சொல்கையிலும்”
நிற்கின்றோம்!
பக்கத்து நண்பனுக்கு ஒரு அழைப்பு…
‘செல்லிடத் தொலைபேசி’ சிணுங்கிச் சிரிக்கிறது…
“என்ன புதினமடா இன்றைக்கு”
வெளிநாட்டில்
இருந்து ‘பழைய நண்பன்’
எம்மோ டிணைகின்றான்.

கோவிலடி வீதி… கொற்றக் குடை நிழலாய்
ஏதோ பரவசத்தை
எமக்கூட்டும் அன்னைமடி.

நெருடல்

அலையள்ளி அள்ளி எறிகிறது கடல்; அந்தி
இளங்காற்று… கடலை
விட்டிறங்கி இளைப்பாறி
கரையில் குழந்தைபோல் உருண்டு புரள்கிறது.
வருவதுவும் போவதுமாய்
வானளக்கும் கப்பல்கள்.
தொலைவினிலே முத்துக் குளிக்கும் அரைக் கதிரோன்.
இனிமையான பொழுது.
எங்கும் செழிப்பு வாசம்.
கவலையின்றிக் காலாறும் நாகரிகம்.
பணஎலும்பை
எறிவதிலே பெருமையுற்று இனிமைவாங்கும் இடாம்பீகம்.
கரையோரக் கல்லணையில்
கரைந்தபடி காதலர்கள்.
சிறகடிக்குஞ் சிட்டுக்கள், சொர்க்கமேறும் பட்டங்கள்.
எனினும் எனது மனது இடறிற்று.
கண்களுக்குள் மண்ணாயிக் காட்சிகள் உறுத்திற்று.

வரும் ‘வழியில்’ கண்ட வறுமை…, அழிவு…, ஏக்கம்…,
இருண்ட முகங்கள்…,
என்..உள் பதறிற்று.
‘அவர்களை’ – ‘இவர்கள்’ – அறிவாரா?
அவர்கள்பற்றி
இவர்கள் நினைப்பதற்கு நேரமுண்டா?
அவர்துயரை
இவர்கள் என்றேனும் தெரிந்துகொள்ள வாய்ப்புண்டா?
கேள்வி கேட்டேன்!
ஒரே பதில்தான் கிடைக்குமென்றும் நானறிவேன்.
இச்சூழல் மாறாது…
இது எனக்கு அந்நியமாய்
மாற… அந்தி தனை இரசிக்க
மனமின்றி மீள்கின்றேன்.

நப்பாசை

மாசிப் பனிநாளின்
நடுநிசியில் திடீர்த்தும்மல்;
காதில் குளிர்நுழைந்த காரணந்தான் மெய் எனிலும்
ஆதங்கம் தோன்றிற்று…
“நீதான் நினைத்தாயோ”?

மனக்காயம்

“ஒரு ‘பைக்கற்’ வாங்கி உதவினா என் வீட்டிலின்று
அடுப்பெரியும்” சொன்னான்
பாலைப் பழச் சிறுவன்.
“கொழுக்கட்டை வேணுமோ” கூவியொரு குரல்கேட்கச்
“சும்மாவெனில் தாடா”
சொன்னவனை அமைதியாய்த்தான்
பார்த்தென்முன் வந்தான்
அழுக்கு உடையோடு
பள்ளிக்குப் போகாத பசிமுகத்துச் சிறுபொடியன்.
இரவுப் புகைவண்டி எப்போ கிளம்புமென்று
வெறுத்திருந்த இரண்டு மணிப்பொழுதுள்
தூறுதரம்
“கடலை இருக்கு கடலை” என வந்து
தள்ளாத வயதில்
தன்கையிற் கூடைதூக்கித்
திரிந்தார் ஒரு கிழவர்.
எல்லோர்க்கும் இரங்கி… ஓய்ந்த
அந்நொடியில் அதிர்ந்துஉளம் வாடிற்று;
பரபரத்துக்
காலையில்,
என் அவசரத்துக் கிடையில் நீ செய்து தந்த
புட்டோடு சாம்பற் பொதி பிரித்தேன்!
புளித்த அது
கெட்டுக் கிடந்தது! மௌனமாக அதை வெளியிற்
கொட்டிவிட்ட திலிருந்தென்
மனங் குறுகிக் கிடக்கிறது.

கார்த்திகை மழை

மழைக்காலம் வந்தாலென் மனதுக்கு மிகப்பிடிக்கும்
இலை தழைகள் எல்லாம்
இளகக்p குளித்துறைய
வெளிச்சமும் இருளும் விவாகம் புரிந்திருக்கும்.
அழுக்கெல்லாம் கழுவும்
அந்தவேலைக் காரியைப்போல்
மழைவந்தெம் மண்ணின் மலங்களினைக் கழுவிப்போம்.
குளிரூட்டப் பட்டகாற்று
போர்வைக்குள் குறண்டவைக்க
குளிரைக் கரமுஞ்சிக் குட்டிக் கலைத்துவிட்டு
வெளிஜன்னற் கண்ணாடி மேடையிலே நடனமிடும்
துளிகளினை நீயும் நானும்
கணக்கெடுப்போம்.
மழையின் மகோன்னதத்தை வர்ணிப்போம்.
சுடுதேநீர்
சிலநேரம் நீதருவாய்… குடித்துக் குளிர்சிதைப்போம்.
ஒழுக்குத் துளிசிதறி
ஒருலயத்தில் முத்தமிட
எழுந்து விலகாமல் துளித்தொடலில் மெய்சிலிர்ப்போம்.
மழையினது நாதம்,
மழையினது மென்குளுமை,
மழையினது என்னென்று வர்ணிக்க முடியாத
இயல்புகளில் நானும் பரவசித்தல் போல்… நீயும்
பரவசிப்பாய் நண்பா!
இந்தமுறை பரவசிக்க
நீயில்லை… இங்குன் நிழலில்லை!
ஆனால் நீ
‘கார்த்திகைநாள் தீபத்தில்’ கண்திறப்பாய் என்பதிலே
எனக்கையம் இல்லை!
இன்றுமழை பெய்யுது தான்…
எனினும் மனதில் பழைய இனிமையில்லை.
வருங்கால மழைக்காலம் இறந்தகாலத்தைப் போல
வரப்போவதில்லை…
ஏனெனில் நீ அருகிலில்லை.
கண்ணம்மா

ஒருதுளி பட்டாலே உயிர்போகும் பனிக்காலை.
சுருண்டு படுத்திருந்தால்
சுகங்கேட்கும் ‘திறந்தூக்கம்’.
மார்கழிக் குளிரில் மனதோ உறைந்திறுகும்.
போர்வை விலக்கிப், புலர்வின் முன்
சில்லிட்ட
நீரில் முழுகி,
கூந்தலிலே நீர் சொட்ட…
பிறந்த மல்லிகை சூடி, பெரியகுங்குமம் இட்டு,
பறப்பாய் திருவெம் பாவை நாள் பூசைக்கு!
“ஆதியும் அந்நமும் இல்லா அரியபெருஞ்
சோதியினை” நீபாடிச்
சொரிவாய்கண் ணீர்மல்கி!
எதற்கெதற்கோ நேர்வாய்; உனைத்தவிர்த்து
எல்லோர்க்கும்
பெயர் நட்சத்திரஞ் சொல்லி அருச்சனைகள் செய்து… அடி
அழித்துவிட்டு வருவாய்;
ஆறுமணிச் சூரியனின்
மென்சூட்டில் நான்பல் விளக்கையில் நீ வீடுமீள்வாய்.
மகால~;மி நேரில்
வந்ததென நான் சிலிர்ப்பேன்.
பிரசாத விபூதி பூசிடுவாய் நான் மலர்வேன்.
உனை உந்தன் செய்கை
உணர்வுகளை நான் வியப்பேன்.
‘ஓலை, மட்டை, பாளை,’ -‘உலகம்’ என்றிருப்பவள் நீ.
கோயில், குளம், குடும்பம்
‘வாழ்வென்று’ சொல்பவள் நீ.
மனிதரின் சுத்து மாத்து, அரசியல்கள்
உனக்குத் தெரியாது!
ஊர்மாற்றம் உலகமாற்றம்
உனக்குப் புரியாது!
“எனக்கெந்தன் வாழ்க்கைவட்டம்
போதும்” எனச் சொல்லிடுவாய்;
“போதுமா” நான் எனைக்கேட்பேன்.

துயரின் கனம்

என்னறை இருந்து எதிர்வீட்டுக் குசினியோரம்
உன்னைநான் கண்டுவிட்டு
உட்கார்ந்தேன் ஜன்னலோரம்.
என்னைநீ கண்டிருக்க மாட்டாய்;
தனித்திருந்து,
விண்ணிலொரு புள்ளியினை அடிக்கடி வெறித்துவிட்டு
மடியிற் தலைவைத்து
விசும்பி விசும்பி விழி
துடைத்தாய்!
உனக்கே நீ ஏதேதோ சொல்லிவிட்டுக்
கடிதமொன்றை மார்பின் கதவிடுக்கி லிருந்தெடுத்துப்
படித்தாய்;
படித்துவிட்டுக் கண்ணிலொற்றிக் கண்துடைத்தாய்.
மடித்துவைத்து… மீண்டும் மடியில் முகம்புதைத்தாய்.
மணிபார்த்தேன்…
நள்ளிரவோ பன்னிரெண்டைத் தாண்டிற்று.
அசதியெனை வீழ்த்திற்று!
அயர்ந்தெழுந்து பார்க்கையிலும்…
விண்ணை வெறித்தபடி விழித்திருந்தாய்., மணிமூன்று!
என்னுறக்கம் ஓடிற்று.
“என்னதுயர் மூடிற்றுப்
பெண்ணே” எனக்கேட்க முடியா அகாலத்தில்…,
உன்னை அறிய முடியா யதார்த்தத்தில்…,
நெஞ்செரிந்து போயிற்று!
வாடகை கொடுத்துவிட்டு
என்னறையைக் காலிசெய்து திரும்புகிறேன்;
ஊர் மீளும்
வண்டியிலும் வழித்துணையாய்
உன்நினைவே வருகிறது.

தூண்டிற் காரி

கண்களெனுந் தூண்டிலிலே
கணநேரப் பார்வையெனும்
மண்புழுவைக் குத்தி எனைநோக்கி வீசிவிட்டாய்.
என்னிதயஞ் சிக்கிற்று.
எதிர்பாராத் தூண்டிலினால்
என்னிதயஞ் சிக்கி எகிறித் துடித்திருக்க…
கண்தூண்டில் தன்னைக் கவர்ந்திழுத்தாய்.
பிடித்ததெடுத்த
என்னிதயம் தன்னையென் செய்வாய்?
வாய் முள்ளகற்றி
கண்ணீரில் வளர்ப்பாயா?
கறியாக்கித் தின்பாயா??

பாட்டனும் பேரனும்

வீடு திரும்பி விரைந்து வந்து உங்களது
பாடென்ன என்று
பார்த்தேன் வழமைபோல்!
விழியிரண்டும் விட்டத்தை வெறிக்க,
கரம்மெதுவாய்க்
குளிர்ந்துவர, நீங்கள் குறண்டிக் கிடந்தீர்கள்.
சர்வநாடியும் என்னுள் அடங்கிவிட ஓலமிட்டேன்.
உங்கள் உதிர்வை
உலகுக் குரைத்தார்கள்.

பாட்டா…! என்னிலென்றும் பாசத்தின் முழு அளவைக்
காட்டி எனைவளர்த்த கற்பகமே!
நான்கைந்து
வயதினிலே, உங்கள் வலக்;கை விரல்பிடித்து
அயலெல்லாஞ் சுற்றி “அது என்ன இது என்ன”
எனக்கேட்டுக் கேட்டு
எத்தனையோ கற்றதனை;
அரிவரிக்குப் போன அந்நாளில்… ‘உற்சாக
உருவாய்’ எனைத்தூக்கிச்
சென்றென்னோ டிருந்ததனை;
நகரத்துப் பள்ளியிலே நான் படிக்கப் போகையிலே
சைக்கிளோடத் தெரியாமல்
எனைக் கூட்டி நடந்ததனை;
துடுப்பாட்டம் பழக நான் துடித்தநாளில்
பந்து வீசப்
பொடியனாய் மாறி விழுந்து எழும்பியதை;
காலை ரிபூசனென்று கண்ணயர்ந்தால் புலரியின் முன்
கோப்பிக்குத் தண்ணீர் கொதிக்கவைத்து
எனைஎழுப்பிக்;
கூதல் கலையவைத்துக் கோப்பிபூற்றித் தந்ததனை;
பென்சன் எடுத்து வந்தால்
பின்னேரம் போளி, வடை
என்று எதையேனும் எனக்கு வேண்டித் தாறதனை,
கொஞ்சம் வளர்ந்துநான் சைக்கிளோடப் பழகியபின்
தன்னோடு வராததற்காய் தவித்துப்
பலதடவை
குழந்தைபோல் கோபித்துக்
கோவிலுக்குப் போனதனை;
காலை புறப்பட்டு மாலை… வீடு சேருகிற
வாலைப் பருவத்தில்
எனை ஏக்கப் பார்வையுடன்
“ராசா” என அழைத்து எனைக்கரைய வைத்ததனை;
வீட்டில் எவருடனும்
எரிந்து விழுந்தாலும்
என்னோடு என்றும் இனிப்பாக நின்றதனை;
நாலு மணிக்கெழுந்து நீரள்ளி, அடுப்புமூட்டி,
அடிவளவு முற்றம்
அனைத்தினையுங் கூட்டி,
குளித்து, அனுட்டானம் பார்த்துக், குறிவைத்து,
முதல்நாள் பறித்துவைத்த
மொட்டில் மலர் தெரிந்து…
கோயில் பலசென்று பின்சந்தை கடை என்று
நிதமும் ‘ஒரு ஒழுங்கில்’ பொடிநடையாய்த் திரிந்ததனை;
சண்டை வலுத்திருந்த தருணத்தில்
காலொன்றில்
குண்டுபட்டு ‘வேலைசெய்ய’ இயலா திருந்ததனை;
இடம்பெயர்வில் சென்று இடர்படையில்
புதுச்சூழல்
தடம்மாறிப் போன தனிவாழ்வு என்பவற்றால்
வழமைக் ‘கடமை’ தவிர்த்து ஒடுங்கியதை;
மீண்டும் ஊர் மீண்டு
கோவில் மணி கேட்டால்
“முருகா” எனக்கண்ணீர் மல்கிக் கசிந்ததனை;
கட்டிலே வாழ்வாகக் காலம் கழிக்கையிலே
இடைக்கிடையில் கோயிலுக்குச்
சைக்கிளிலே நான் ஏற்றிக்
கொண்டு சென்ற போது குளிர்ந்து மகிழ்ந்ததனை;
முதுமையிலே குழந்தையாகி
அடம்பிடித்துப் பல இரவு
எதுவென்று தொடர்பற்ற பழங்கதை புசத்தியதை;
சிலவேளை நான்கூடச் சினந்ததனை;
பலதடவை
எமையெல்லாம் ‘வெருட்டிவிட்டு’ மீண்டுங்கண்
திறந்ததனை;
கடைசியிலோர் காய்ச்சலிலே
கட்டிலிலே சரிந்தபடி
நீண்ட தினங்களாய் நினைவற்றுக் கிடந்ததனை;
‘அத்த நட்சத்திரம்’ சொல்லி
அருச்சனை நான் செய்து… உங்கள்
பேச்சைமீண்டுங் கேட்கப் பெரிதும் விரும்பியதை;
எண்ணியெண்ணிப் பார்க்கின்றேன்!
இன்றதற்குள் நீங்கள் போய்…
இத்தனை நாளாச்சா? “ஓம்” என்று திதி நாளும்
கூறக்கண் துடைக்கின்றேன்!
உங்கள் நினைவினை இப்
பிறவியிலே மறப்பேனா?
பிரதிபலன் பாராமல்
-அன்புவைக்க ஆளற்று;
நாகரிகம் என்று கொண்டு;
செல்லுகிற வாழ்விலெல்லாஞ் செயற்கையாச்சே!
உங்களைப்போல்
ஓருறவை நானெனது
பேரனுக்கு வழங்குவனா?

வெளிநாட்டுப் பறவைகள்

காலநிலை மாறிவிட்டால் கண்டங்கள் தாண்டியெங்கள்
ஊரில் அணிவகுத்து
உலாப்போகும் பறவைகள்.
எங்கள் வயல்களிலே இறங்கி
மணிபொறுக்கி
தங்களுக்குள் ஏதேதோ தர்க்கிக்கும்.
தரையமர்ந்து
இறகுலர்த்திக் கொள்ளும். எங்களது வானெல்லாம்
வரிசை பிசகாமல் வட்டமிடும்.
அவற்றினது
பாட்டின் ‘அடி’யெனக்குப் புரியாத போதும்… அதெம்
காட்டுக் குயில்களது கானம்போற் தானிருக்கும்!
அன்றொருநாள்…
எந்தன் அயலிலுள்ள குளக்கரையில்
வெண்ணுரைகள் பூத்ததென வந்தமர்ந்த அவற்றோடு
உரையாடி மகிழ்ந்தேன்.
ஊர்ப்புதினம் சொல்லிவிட்டென்
தரைநிலையைக் கேட்டுவிட்டுச் “சந்தோசம்” என்றன… தாம்
வெடிச்சத்தம் கேட்காத
வெளிப்பிலின்று வந்ததற்கு
கொடுத்துவைத்தோம் என்று கொஞ்சிக் குலவின… நம்
தரைஎரிந்த போது…தாம்
வேறு திசைநாடிப்
பறந்ததெல்லாஞ் சொல்லிப் பகிடிவிட்டுஞ் சிரித்தன… நான்
விடைபெற்றேன்!
காலநிலை மாறியதாற்தான் சொந்த
மடிவிட்டுப் புள்ளினங்கள் வந்தன…
நான் கையசைத்தேன்!
வேர்பெயர்ந்து எங்கோ விழுதுவிட்டுச் சொந்த ஊரைப்
“பார்த்துவிட்டுப் போக”ப் படையெடுக்கும் நம்மவரும்
வெளிநாட்டுப் பறவைகளா?
விளங்காமற் கேட்கிறேன்.

பழி

வீட்டுக்குள் வந்துவிடும் அநாதை நாய் பூனைகளை
ஓட்டிக் கலைக்கையிலே…
ஏனென்று தெரியாமல்
எந்தன் முதுமைபற்றி எண்ணம்
எனக்குள்ளே
வந்து சிலகணங்கள்
எனை வதைத்துச் செல்வதுண்மை.

நீ இட்ட சாபம்

என்னுடைய கொட்டிலுக்குப் பக்கத்தில் நீநின்றாய்.
உன்கண்ணின் மிரட்சி
“உனக்குஇது புது இடந்தான்”
என்பதனைச் சொல்லிற்று எனக்கு!
உன் உருவம்
உன் கறுப்பு மேனி,
உனது திமிர் உரோமம்,
உன் ஆண்மை என்பவற்றின் கம்பீரங் காண்கையிலே…
என்னைநீ பார்த்தாய்.
இருதடவை வாலசைத்தாய்.
பின்னேரத் தூக்கம் பிடர்பிடித்துத் தள்ளுகையில்
என்கண்கள் செருகி
எனையிழக்கும் மைம்மலதில்
உன்கத்தல் என்னைத் திடுக்கிட்டு முழிக்கவைக்க
“என்ன சனியன்” என
இரண்டு மூன்று முறை திட்டி
நித்திரையும் கெட்டெழுந்தேன்… நீ நின்றாய்!
இன்றுகாலை
நீ நின்ற இடம்பார்த்தேன்.
வெறுமையாய்க் கிடந்ததங்கோர்
ஓரத்தில் ‘பங்கு போடப்’ பட்டிருந்தாய் நீ.
உன்னைச் சதைவடிவில் உருசித்தபடி
நான்கைந்து
பங்காக்கிக் கொண்டிருந்தார்.
உன்தோல் உரிபட்டுக்
கொப்பில் கிடக்கக் குதறிற்று ஒரு காகம்.
கட்டிய கயிற்றின்
தடையறுக்க முயன்று தோற்று
வெட்டுண்டாய்;
எதிர்;க்க முடியாமல் வெட்டுண்டாய்.
உன் கெஞ்சல் எனைஎழுப்ப உன்னைநான் திட்டினேனே…
“என்னை நீ காப்பாற்று” என்ற உன் அபய ஓலந்
தன்னை கவனியாத எனையும்நீ
பயந்தபடி
திட்டி இருப்பாயா?
திகைத்தெனைநான் கேட்கின்றேன்.

பயணப் பாடம்

பயணங்கள் எனக்குப் பலதை உணர்;த்தினகாண்.
பயணப் பொழுதில்…
பரபரக்கும் மனம்… வீணாய்
அவசரங்கள் கொள்ளும். “வாகனத்தைத் தவறவிடக்
கூடாது” இதயம் குறுகுறுக்கும்.
சுயநலமாய்
இருக்கையொன்றில் அமரக்கண் குறிவைக்கும்.
பயணத்தில்…
என்னுடைய கைப்பை; என்
அடையாள அட்டை வகை
என்னோடே உள்ளனவா எனத்தடவிக் கரம் பார்க்கும்.
பணப்பை பின் காற்சட்டைப்
பையில் நழுவுவதாய்
எனை அறியாதென் உள் உரைக்கும்;
என்கை அங்கோடிப்போம்.
எதையுந் தவறவிடச்
சாத்தியங் குறைவெனிலும்
“எதையுந் தவறவிட்டு விடுவோமோ” எனக் கிளம்புஞ்
சந்தேகம்…
தவற விடத்தக்க பொருட்களினை
“இருக்கிறதா” எனப்பார்க்கும்!
எனைச்சுற்றி நோட்டமிடும்!!
பயணங்கள் பலதை உணர்த்தின தான்;
அவற்றினிலே…
வாழ்வு, அதன் மீது வலிந்து எழுஞ் சந்தேகம்,
ஏதோ பயம்,
ஏதும் நிரந்தரமே இல்லையென்ற
நம்பிக்கை யீனம்,
எனுள்… புற்று நோய்போல
இருப்பதைநான் உணர்ந்துகொண்டேன்.
இதற்கா நான் பலியாவேன்?

கரை

நிதமும் பலதடவை நினைத்தேடி தேடி…ஓடி
அலையாக வந்து,
அகமுடைந்து மீளுகிறேன்.
கரையாக மட்டும் கருங்கல் உளத்தோடு
கரையாமல் வீற்றிருக்கக்
கற்றதெங்கே சொல்தேவி.

நாய் பிடித்தல்

காலையிலே நித்தம் கடன்முடித்தும்… மனம்பதறும்.
ஏனென்றால்… காலையிலே எம்தெருவில்
வண்டிலுடன்
நாய்பிடி காரர்கள் நாட்டாமை செய்வார்கள்.
ஊர்நாயை,
வீட்டுக் கொளித்தோடிச் சுதந்திரமாய்த்
தன்பாட்டிற் சுற்றும் தறுதலையாம் நாய்களினை,
சின்னஞ்சிறு குட்டிகளை,
சுருக்கிட்டுப் பிடித்துக்
கொண்டு சென்றடித்துக் கொல்வார்கள்.
விசர்நாய்தான்,
என்றல்ல… பிடித்ததனை அழிப்பார்கள்.
இதைக்கண்டால்
கண்றாவி யாயிருக்கும்.
அப்பாவி நாய்களினை
வண்டிலுள் ஏற்றிக் கொணர்கையிலோ
அவற்றினது
பயந்த விழிகளினைப் பார்க்க மனம் வலிக்கும்.
அயர்ந்துள்ளே இருப்பவற்றின் ‘நிலை’ எண்ண
விடிபொழுதின்
ஆனந்தம் கெட்டுள்ளே அதிர்ச்சிஎழும்.
இரவுகளில்
அவிட்டுவிடும் என்நாயை ஒருவாறு பிடித்துக்
கட்டுவதும் காலைக் கடனாகும்!
ஆனாலென்
நாய்க்கு இது பிடிப்பதில்லை.
தனைக்கட்டி அடக்குவதென்
நாய்க்குப் பிடிப்பதில்லை!
நான்கட்டி விட்டிருந்தால்…
கத்திக் குளறும்; சங்கிலியை அறுத்தலையும்;
கட்டற்றுத் திரியும்;
நான் பிடிக்கப் பின் தொடர்ந்தால்…
ஓடும் எனையுச்சி ஓடிவிடும்!
நாய்வண்டில்
போகையிலோ பின்னாலே போகும்… குலைத்தபடி!
அதைப்பிடித்துக் கட்டுவதும்;
நாய்பிடிப்போருடன் பேசி
அதைக்காக்க முயல்வதும் ஐயோ பெரும்பாடு.
ஒவ்வோர் தடவையும் நான் போராடி
என் நாயைக்
காக்கத் துடித்திடுவேன்;
நாய்க்குஅது விளங்காது.
விட்டேத்தியாய்த் திரிந்து பிடிபட்டால்
அதன் நெற்றிப்
பொட்டில் மரணம் பொறிக்கப்படும் என்றென்
நாய்க்கு விளங்காது.
என்னைச் சபித்தபடி
கட்டிவிட நான்கலைக்க எனைஉச்சிப் போகிறது.

மரநிலை

இந்த மரங்கள் இடம்பெயர்ந்து எம்மைப்போல்
சந்திக்குச் செல்வதற்கும்,
தம்பாட்டிற் போவதற்கும்,
எண்ணியெண்ணி ஏங்கினவோ… எவருக்குந் தெரியாது!
நின்ற இடத்தினிலே நின்று…
கால் உளைந்தாலும்
குந்தி இருப்பதற்குக் கொடுத்துவைக்க முடியாத…;
காற்றுவராப் போது… காற்றாட முடியாமல்
ஊற்றுகிற வெய்யிலிலே உலர்ந்து தகிக்கின்ற…,
மழைநாளில் மட்டும் மணியாய் குளித்தடுத்த
மழைமட்டும் ஊத்தை அகலா திருக்கின்ற…,
தம் இலை அசைப்பதற்கும், காற்றையெதிர் பார்க்கின்ற…,
என்ன உணர்வுக்கும்
இலையைமட்டும் ஆட்டி ஆட்டி
துன்பத்தை இன்பத்தைச் சொல்லுதற்கும் நாதியற்ற…,
குண்டு விழுந்தாலும் குடிபெயரத் தெரியாமல்
நின்றபடி காயம் பட்டு வதைகின்ற…,
யார் பூ பறித்தாலும்,
யார்கிளை முறித்தாலும்,
யார் வேர் அறுத்தாலும் எதிர்ப்பெதுவுங் காட்டாமல்
பேசா மடந்தையாய் வலிசுமந்து வீழுகிற;
இந்த மரங்களது… எழிலை மட்டும் இரசித்தபடி
சந்தோசப் பட்டோமே…!
அவற்றின் குறை துயரை
எந்தக் கவிவரியில் இத்தனைநாள் பதிவு செய்தோம்?

கழுத்தறுந்த சேவல்

கழுத்தறுந்த சேவலொன்று துடிக்கையில் நான் கண்டுள்ளேன்.
பொழுது விடிந்தெழுந்து
பேப்பர் புரட்டுகையில்
தெருக்கொலையின் சேதிகளால்… கழுத்தறுந்த சேவலாவேன்.
மரணம் பரிசளிக்கப் பட்டு
மடிந்தவர்கள்
எவராயு மிருக்கட்டும்;
மரணத்தை வழங்கியோர்கள்
எவராயும் இருக்கட்டும்; என்கண்ணிற் தெறித்து விழும்
இரத்தத்தாற் திசையெல்லாஞ்
சிவப்பாகக் காண்கின்றேன்.
ஒவ்வோர் மரணத்தின் பின்னும் நான் அறியாத,
எனக்குத் தெரியாத,
எனக்கு விளங்காத,
ஏதோ சரித்திரமும் ஏதேதோ காரணமும்
இருந்திடலாம்; “தர்மம்” “அதர்மம்” என இவையும்
விளக்கப் படலாம்;
‘கீதை எல்லாஞ் சரியாக
நடக்குதென்று’ சொல்வதுபோல் ‘இவையும்’ நடந்திடலாம்.
எனினும்இச் சேதிகளால் கழுத்தறுந்த சேவலாவேன்.
“கைவெட்டப் பட்டு, கழுத்து அரிபட்டு,
மெய்துளைக்கப் பட்டு, வெடிகுண்டாற் சிதறுண்டு,
மனிதர்கள் நித்தம் மடிந்தார்கள் தெருநாயாய்”
எனுஞ் செய்தி கேட்கையில்நான்
கழுத்தறுந்த சேவலாவேன்.

முதுசம்

பெட்டகம் வீட்டுக்குப் பெரிய இடைஞ்சலென்ற
திட்டைத் தணிக்க
தினமொன்றை ஒதுக்கி… அந்தத்
‘தோம்புகளை’ ஆராயத் தொடர்ந்து கிளறி விட்டேன்.
சாம்பல் படர்ந்ததெனக்
கிடந்த பெருந்தூசு
பாய்ந்து பரவிற்று! தும்மல் கிளம்பிற்று!!
இராமபாணம், கரப்பானின் இரகசியக் குடித்தனங்கள்,
கலைபட்டே போயிற்று!
‘கை-விடவும்’ பயத்தோடு
விளக்கேற்றித் தேட வெளிக்கிட்டவை இவைகள்.
இங்கிங்கு உந்தன் இடமென்று
சுட்டிநின்ற
உறுதிகளின் பழங்கட்டு, உருத்திராட்ச மாலையொன்று,
பாட்டாவின் பாட்டா பாவித்த மிதிவடிகள்,
எப்போ எழுதிவைத்த ஓலைச் சுவடிசில,
முப்பாட்டன் பேர்பொறித்த பித்தளைத் தாம்பாளம்,
யந்திரத் தகடு,
எவரினதோ ‘சாதகங்கள்’,
தூண்டா மணிவிளக்கு, சருவங்கள்,
முனைமழுங்காக்
குத்துவாள்,
குடமொன்றுள் பழைய செப்பு நாணயங்கள்,
வெத்திலைச் சல்லம்,
துருப்பிடித்த பாக்கு உரல்,
சத்தகங்கள்,
உக்கிச் சிதைந்த சிறு கடகம்,
வெள்ளிச் சருகை வேலைப்பாடுடன் கிழிந்த
கொள்ளுப் பேத்தியின் கூறை,
கொலுசு, ஒரு மெட்டி,
ஒல்லாந்தர் காலத்து மண் கூஜா,
கையுடைந்த
கண்ணன் சிலை,… திகைத்தேன்!
இவைதங்கள் முதுசவாழ்வின்
ஆதாரமாய் முன்னோர் விட்டுவிட்டுச் சென்றார்கள்.
நாளை நான் அடுத்த
தலைமுறைக்குக் கையளிக்க
என்வாழ்வின் முதுசமென இருப்பவைகள் எத்தனைகள்?

முகங்களும் நீங்களும்

உங்கள் முகங்கள் உள்ளனவா எங்கெனிலும்?
உங்களது பாட்டுகளில்
உங்கள் முகங்களில்லை.
உங்களது ஆட்டத்தில் உங்கள் முகங்களில்லை.
உங்களது பேச்சில், உங்கள் நடைமுறையில்,
உங்கள் உடையில், உங்கள் உருவத்தில்,
உங்கள் தலைமுடியில், உங்கள் நகம், உதட்டில்,
உங்கள் உணர்ச்சி வெளிப்பாட்டில்,
அவை, அரங்கில்,
உங்களது நாடகத்தில், உங்கள் சினிமாவில்,
உங்கள் எழுத்துகளில், உங்கள் கவிதைகளில்,
உங்கள் இரசனையில், உங்கள் உணர்வுகளில்,
உங்கள் நகரில், உங்கள் கடை தெருவில்,
உங்கள் முகங்கள் உள்ளனவா எங்கெனிலும்?

“யாதும் ஊரே யாவரீரும் கேளீர்” என்று
கூறியவன் வாய்பிளக்க
உலகமெல்லாம் ஒரே முகமாய்
நீங்கள் சிரிக்கிறீர்கள்;;. சர்வதேச மயப்பட்டு
எவரோ ஒருகூட்டத் தியல்புகளைப் பெற்று… “நாமும்
அவர்கள் போல்” எனக்காட்ட
உங்களையே அடகுவைத்தீர்.
“எந்த முகமிருந்தால் எமக்கென்ன” எனத்திரியும்
மந்திகட்கும் நீர் புனையும் வேடம் புனைவித்தீர்.
சொந்த முகத்தைத் தொலைக்கா
‘விழுமியத்தை’
அந்தரிக்க விட்டுநீங்கள் அப்பாலே போகின்றீர்.
சொந்த முகங்களுடன் திரிவோரைப் பரிகசித்து
மந்தைகளாய் – அவர்கள்-
பார்ப்பதுபோல் பார்க்கின்றீர்.
எல்லாம் ஒருகுடைக்கீழ், எல்லாம் ஒரு கொடிக்கீழ்,
நல்லாய் இருக்கிறது நாகரிகம்;
எங்கெங்கும்
உல்லாசம் பூக்கிறது; உலகமய மாதலினைப்
பல்லோரும் ஏத்தப் பணிதலெங்கள் தலையெழுத்தாய்…
எல்லாம் கலைந்து இரண்டறக் கலந்தொன்றாய்…
ஆகத் துடிப்பதிலா அழகு இருக்கிறது?
முன்னேற்றத் திற்கு முகங்கொடுக்க வேண்டும்… ஆனால்
முன்னேற்றத் திற்காய்
முகமிழத்தல் முழுத்தவறு.!
நான்சொல்லிக் கேட்க நீங்களென்ன பேயர்களா?
ஏழுகடல் தாண்;டி இயக்கவல்ல ‘நாகரிக
ஊடகங்க’;டு உருவேற்றப் படுவோரே…
நான் சொல்லி நீர்…கேளீர்;
நான் எனக்கே சொல்கின்றேன்.
முன்னேற்றத் திற்கு முகங்கொடுக்க வேண்டும்…
ஆனால்
முன்னேற்றத் திற்காய்
முகமிழத்தல் முழுத்தவறு.

போதி மரம்

வாகன வரிசை மலைப்பாம்பாய் நீண்டு…நிற்க
‘மாநகரின்’ சந்தடியோ
ஸ்தம்பித்துப் போயிருக்க
கூட்டம் விலத்தினேன்…,
கொலையொன் றரங்கேறி
வேட்டுத் துளைத்து விழுந்திருந்தது உடல்: கார்
கட்டுப் பாடிழந்து
வீதிநடுக் கட்டோடு
முட்டுண்டு மோதி முகஞ்சிதைந்து கிடக்கக்…
கார்
ஐன்னதூடு மூன்று சன்னங்கள் பாய… ரத்தம்
சிந்தித் தெருவே
சிவப்புநிறத் திட்டாகிக்
கிடந்தது;
ஏதோ புரியாத பாஷையுடன்
சடலத்தை இருவர் வாகனத்தி லேற்றினார்கள்.
தலையைத் துளைத்திருக்க வேண்டுமச் சன்னங்கள்…
முகம்முழுக்க இரத்தம்
முகாமிட் டிருந்ததையோ!
வாழ்வதற்குக் கோடி வழிசொல்லி… நாள்தோறும்
நாகரிகம் மாற்றி நகர்ந்தபடி…
நொடிப்பொழுதுஞ்
சோராமற் சுற்றிச் சுகம்தேடி… “ராசாக்கள்
நாமெ”ன்று வாழ்வை இரசித்தபடி…
தொடர்ந்தியங்கும்
மாநகரின் மத்தியிலே நொடியில் நிகழ்ந்துபோன
மரணம் எனக்குஒரு போதிமரம் ஆகிற்று.

எதற்காய் நிகழ்ந்ததிது?
இதிற்சரியும் பிழையுமெது?
இறந்தவரின் விபரமெது? என அறியும் விருப்பமின்றித்
திரும்பி நடந்தேன்.
கலவர முகங்களிலே…
பயமிருந்த தன்றி ‘போதிமரம்’ தனைப்பார்த்த
உணர்விருக்க வில்லை!
உலகம் ‘இன்னும்’ மாறவில்லை!

சாபம்

எங்கள் இதயத்தில் இடிவிழுத்தி நீரசித்தாய்.
உன்னைநீ காப்பாற்ற
ஊர் இரண்டு பட வைத்தல்
ஒன்றே வழியென்றாய்; உசுப்பிவிட்டாய்.
எங்களுயிர்
வேரறுந்து போக விசம் வைத்தாய்.
நாம் துடித்தோம்;
எங்கள் வரலாறு உந்தன் மகிழ்ச்சிதனை
“ஏப்பமிடக் கடவதென்று” ஆற்றாமல் வேண்டுகிறோம்.

கைகளுக்குள் சிக்காத காற்று

தாமரை இலையின்மேல் தண்ணீரைப் போலத்தான்
நானுன்னில் ஒட்டாமல் நகர்ந்திருப்பேன்…
எந்தனது
சமுதாய அமைப்பே! சுயநலத்தின் தனிவடிவே!!
உனக்கெங்கே கலைஞனது
உணர்வில் ஆழும் கவிஞனது
மனது புரியும்?
மரத்த உனக் கெது விளங்கும்?
காசின்முன் மட்டும் கரங்கட்டி., “உடன்வருமாம்
இலாபங்கள்” என்றால்
தழுவி, வேச அன்புகாட்டி
ஒட்டுண்ணி யாக உறுஞ்சிப் பயன்கொள்ளும்
மட்டும் கவரிவீசி
வழியில் வேறு ‘வாடிக்கை’
தேடிப் பறக்கின்ற தேவடியாள் தானே… நீ!
பகட்டு ஜோலிப்புகள்முன் பலியாகி
உன்சொந்த
முகம்மாற்றிச் சோடித்து முன்னேற்றம் என்பவள் நீ!
ஈகம் தியாகத்தை
எடுத்தெறிந்து விட்டு… இற்ற
மூடத் தடிப்புகளை, கற்பிதத்தைக் காப்பவள் நீ!
எத்தனை பெரியோரை இடறிவிட்டு,
தமைவிற்ற
பித்தருக்கு மாலையிட்டு பெரிசாக்கி விட்டவள் நீ!
பொறாமை, புகழாசை பூண்டவள் நீ!
நிமிர்பவனை
அறுத்தடிமை ஆக்கிவிட்டு
அருள்பவள்போல் ஆடுவாய் நீ!
உனக்கா கலைஞனது உணர்விலாழும் கவிஞனது
மனது புரியும்?
வாழ்க்கையிலே… பாரதியை
வாழ்ந்திடவா விட்டவள்நீ…இன்றுவரை அதேநிலையே
நீள்கிறது திருந்தலை நீ!
நின்நாற்றம் தாங்கலடி!!
“காசின்முன் எந்தனையும் கைப்பொம்மை ஆக்கிடுவேன்
பார்” என்றா நான்நடக்க நங்கூரம் பாய்ச்சுகிறாய்?
சமூகப் பிரச்சனைக்குள் என்னைச் சமாதியாக்கி
அமைதிக் கவிஞனென்றா
அயலுக் கெனைச் சொல்வாய்?
தாமரை இலையின்மேல் தண்ணீரைப் போலத்தான்
நானுன்மேல் ஒட்டாமல் நகர்ந்துவாழ்வேன்.
ஏனென்றால்
என்னைநம்பி நீயில்லை என்பதுபோல்… நானில்லை
உன்னைநம்பி!
உந்தனது உள்ளுருவம் அறிந்துகொண்டேன்!
தாமரை இலையின்மேல் தண்ணீராய்
சமூகமே உன் –
னோடொட்டிக் கொள்ளாமல்
‘என்பாட்டில்’ நடக்கின்றேன்.

தீப்பொறிகளைத் திரட்டுதல்

உங்கள் கால்கள் நேராய் நடக்கட்டும்.
உங்கள் கட்டுண்ட கைகள் உயரட்டும்.
உங்கள் முகங்கள் மலர்ந்து சிரிக்கட்டும்.
உங்கள் பொத்திய வாய்கள் திறக்கட்டும்.
உங்கள் நாக்கின் தடுமாற்றம் ஓடட்டும்.
உங்கள் கண்கள் எவரையும் நோக்கட்டும்.
உங்கள் தோள் உரங்கொண்டுமே வீங்கட்டும்.
உங்களின் முள்ளந் தண்டுகள் ஓங்கட்டும்.

தாழ்வை மனதிலும் காவி… அயலின் முன்
தலைகுனிந்து திரியும் தளிர்களே!
கோடி ஆண்டாய்க் குமுறி… வெடித்தெழும்
கோபத் தோடும்… குறுகிய பூக்களே!
தூரம்… எமக்கு விடிவென்று சேற்றினுள்
தோய்ந்து ‘தோசத்தில்’ சோர்ந்த கமலங்காள்!
“நாங்கள் ஏன்தான் தேய்ந்தோம்” என உம்முள்
நன்றாக யோசித்து ஞாயத்தைக் கேளுங்கள்.

அவரவர் தம் நலன்களைக் காத்திட
ஆக்கி வைத்திட்ட வட்டந் தகருங்கள்.
அவரவர் உம்மில் ஏறி உயர்ந்தனர்;
அடிமை ஏணியா நீங்கள்? நிமிருங்கள்.
தவக்குறைவென முரட்டுக் குணங்கொளல்
தவறு; முள்ளினை முள்ளால் ஜெயியுங்கள்.
சிவிகை தூக்கிய தோயட்டும்; ஒன்று நீர்
சிவிகை யாகுங்கள்; சிவிகையில் ஏறுங்கள்.

மண்புழுக் குணம் மாற்றுக! பின்பற்றும்
மடைத்தனங்களை ஓட்டுக! கோஷத்தால்
ஒன்றுமாகாது; யாரையும் நம்பாமல்
உய்த்து நீங்களாய் மனதால் உயருக!
பண்பு திருத்துக, அன்பும் பெருக்குக!
படிப்பீர்…மேலும்! மேலும் பொருண்மியம்
தன்னைச் சேர்க்குக; இந்த வளர்ச்சிதான்
சமத்துவம் தரும்… வெல்க! என் வாழ்த்துக்கள்.

உரிமை

நான்நானாய் இருப்பேன்.
நீ நீயாய் இருந்துகொள்.
நான்நீயாய் – நீ நானாய்
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
வேடமிட முடியாது விளங்குறதா?
நானுன்னை
“நானாய்” இரு என்று சொல்லவில்லை.
அதுபோல் நான்
“நீ”யாக வேணுமென்று நினைக்காதே என்நண்பா!

தனித்திருத்தல்

தனித்து இருத்தலொரு தவம்;
ஆம்… தனிமைக்குத்
துணையாய் மவுனம் சுழன்று வரும் ஏகாந்தத்
தளத்தில் ஒதுங்கி,
தவிப்பேக்கம் அற்றியற்கை
நிழலிற் பதுங்கி, நினைவுச் சமுத்திரத்தில்
அலைந்து சுழியோடி ஆனி முத்துப் புதுப்புதுசாய்
எடுத்து எழில்மாலை
கோர்த்தணிதல் பெருயோகம்.
தனிமையில் நானிருக்கையிற்தான்
என்னைத் தவிர்த்தகன்ற
கவிதை திரும்பிவந்தென் கைசேரும்.
எனக்கேற்ப
தனைவடித்தென் தாளில் தவழ்ந்துறையும்.
ஆரவாரச்
சனநெரிவுள், ஆரவாரச் சந்தை நகர்ப்பொறிக்குள்,
அகம்விரும்பா முகச்சிரிப்பு அறிமுகத்துள்,
கவிதையது
தலைதெறிக்க ஓடிவிட நானெனக்குள் மரத்திடுவேன்.
தனித்து இருத்தலொரு தவம்;
ஆம்… தனிமைக்குத்
துணையாய் மவுனம் சுழன்றுவரும்
ஏகாந்தத்
தளத்தில் ஒடுங்கி எனைத்தழுவும் கவிதையுடன்
இலயிக்கின்ற இன்பத்துக்
கெது புவியில் ஈடாகும்?

ஓர் அறிவு நட்பு

என்னைப்போல் இந்த எவருமற்ற ஏகாந்தத்
தன்னந் தனிமையினுள்
சடைத்து நிற்கும் பொன்மரமே…!
உன்னெழிலில் மூழ்கி உன்பாதத் தண்டையதில்
வந்து அமர்ந்துன்னை
வருடுகிறேன் என்விழியால்!
வரையறைகள் ஏதுமற்று வளர்ந்துள்ள உன் வடிவு
பிரமனது படைப்பின் பெருமையை உரைத்துளது!
கானப் பறவைகளின்
காதல் மொழிகளிலே
நீலயித்து நிற்பதாலோ நின்முகத்தில் ஓரிளமை…,
நாள்நகரும் போதும் நகராமற் பூத்துள்ளது!
இன்றும் உனைப்பார்க்க
எனக்கு வியப்பாச்சு.
நர்த்தகியின் கைபோல், நயனம்போல்,
உன்கிளைகள்
அர்த்தமுடன் காற்றினது தாளத்துக் கசைந்துளன!
உந்தன் மலரிதழ்கள்
உலகுக்குக் கேட்காத
சந்தத்தை திசைகளுக்குச் சொல்லிச் சிவந்துளன!
காலை மழையினிலே கலையாடிப்
புதுமினுக்கம்
பூசி… தளிர் இலைகள் புளகித்து நின்றுளன.
ஈர மணமொன்று இதமான குளிரொன்று…உன்
மேனியிலே இருந்து
மெதுவாய்க் கசிந்துளது.
இன்றும் உனைப்பார்க்க எனக்கு வியப்பாச்சு.
உந்தன் நிழலென் உணர்வை ஸ்பரிசிக்க
என்னுள் பரவசமாய் ஏதோ நிகழ்கிறது.
சில்லென்ற காற்றையென்னில்
சிறுவனைப்போல் நீவிசிற
உள் இரணங்கள் ஆறி ஒரு தெம்பெழுகிறது.
மௌனத்தின் கைகோர்த்து மிருதுவாக
நீ நல்கும்
மென்பரிவில், ஆதரவில் மேனி சிலிர்க்கிறது.
என்னைப்போல்…
இந்த எவருமற்ற ஏகாந்தத்
தன்னந் தனிமையிலே சடைத்து நிற்கும் பொன்மரமே!
உன்னுறவு நல்கும் ஒரு அமைதி
என் மனதை
உந்தனையே சுற்றும்
ஒரு நாயாய் மாற்றிற்று.

ஆறுதல்

ஊரெல்லை வெளிபூடு ஓடுகிற பஸ்சினிலே
நானிருந்தேன்.
இரவின் நிழலின்னும் நகராத
காலை;
மழை… மண்ணில் கால்வைத்துப் பரதமாடும்
வேளை;
சூரியனின் விழியை முகிற்கரங்கள்
பொத்தி மறைத்துவைத்த பொழுது!
குளிர் அயலைச்
சுத்தி வளைத்து ஈரஞ் சுவறவைத்த ஒரு புலர்வு!
புகைப்படங்கள் பார்த்துள்ளேன்…
புகைபடர்ந்த படங்களாக
வகை வகையாய் மரங்கள் மழைப்புகாரிலே விறைக்க,
அயலெ;லாம் வெள்ளம்
அள்ளைகொள்ளையாய் நிறைய,
கொடுகி நனைந்தபடி கொப்புகளிற் கொக்குகளும்
உறைந்து கிடக்க,
கண்ணாடி ஜன்னலிலே
தூறல்கள் பட்டுத் துளியாக…, பனிக்காற்று
ஏதோ இடுக்குகளின் ஊடுவந்து தழுவிவிட
நானும் சிலிர்த்தபடி நகர்கின்ற பஸ்சினிலே
போனேன்!
எனக்குப் பிடித்ததொரு பாடல்… உள்ளே
பரவி எனை மயக்கப் பஸ்சிலுயிர்ச் சமாதியானேன்.
பஸ்தரித்து நின்றபின்பே சமாதிநிலை மாறியது.
இதுபோன்ற அனுபவங்கள்
துயர்அலைக்கும் வாழ்க்கைமீது
சிலமணி களேனும் பற்றுவைக்கச் செய்கிறது.

குழல் ஏக்கம்

பாதி இரவு பாதியாயே வெண்ணிலவு
பாதியாய்த் தேயாமல்
முழுமையாயே பனிபொழிய
மோதி வியர்வையொற்ற மூலையிலே இல்லைகாற்று.
நித்திரா தேவி
நெடுந்தொலைவுக் கேகிவிட்டாள்.
சுத்தி வளைத்தென்னைத் துளைத்தனவாம் நுளம்பினங்கள்.
தூரத்தில் ஒலிக்கும்
சுகமான குழலோசை
ஏனின்னுந் தோன்றி இரவயலைக் குளிர்த்தவில்லை?
நிதமும் இதற்கு முன்பே…
நித்திரைக்குள் நான் முழுகும்
முதலே… இசைக்கின்ற முகாரியின்றேன் கேட்கவில்லை?
யாரென்று அறியாமல் அவனின்Æளின் குரலிசைக்கு
நானடிமை ஆகி
நாட்கள் பல ஆச்சு.
இரவில் எனைநோக்கி நித்திரா தேவியினைத்
“தறதறென்” றிழுத்துவந்து
தாலாட்டுங் குழலோசை
இல்லாட்டில் எந்தன் இரவும்- இரா ஆகாது.
‘நான்’ அடங்கிப் பாம்பாக… நாதமிடும் மகுடிநிகர்
வேய்ங்குழலின் மூச்சேன் இப்போ அடங்கிற்று?
முகந்தெரியா மாயவனின்Æளின்
மோகக் குழலிசையென்
அகந்தொட்டு வருடாதென் அகமுறங்க மறுக்கிறது.
பாதி இரவு,
பாதியாயே வெண்ணிலவு,
பாதியாயே என்னிதயம் பாயினிலே துடிக்கிறது.

விலைமதிப்பற்ற சுமை

எந்தன் மனமென்னுஞ் சிப்பி
அடிக்கடி… இவ்
விண் பார்த்துத் தாகத்தில் திறந்துமூடும்.
என்றாலும்
எந்த முகிலும் எனக்கு ஓர் துளியையேனும்
சிந்திவிட்டுச் சென்றதில்லை!
திடீரென்றுன் விழிமுகில்கள்
மின்னற் கணமொன்றுட் கூடிப் பொழிய ஒரு
சின்ன அருட்துளியென்
சிப்பிக்குட் சேர்ந்தது… என்
ஆவியினைக் கருவாக்கி அழகாய்த் திரண்டின்று
காதலெனும் விலைமதிக்க முடியாத,
மிகச்சிறந்த
முத்தாச்சு;
மனச் சிப்பி கர்வமுள்ள கர்ப்பமாச்சு!
முத்தெனக்குள் முகிழ்ந்ததுதான்…
முத்துதனைத் தந்த ‘விழி-
முகில்’ ஓடிப் போனதெங்கே நானறியேன்.
வழிபார்த்து
தகித்தபடி தவித்தபடி தேடுகிறேன்.
எனைமறந்த
முகிலுக்கென் மனமுத்தைக் காட்டி அழக் காத்துள்ளேன்.

நின்னைப் புரிதல்

உன்னுடைய பார்வை ஒருநெருப்பு.
மனப்பஞ்சை
என்ன விரைவாய் எரித்துவிட்டுப் போயிற்று?
உன்னுடைய பார்வை ஒளிப்பிழம்பு.
எனை எனது
கண்களுக்கு இப்போதான் சரியாகக் காட்டிற்று.
உன்னுடைய பார்வை உதயம்.
என் வாழ்வின்
முன்னிருளை நொடியில் முழுதாய் விரட்டிற்று.
உன்னுடைய பார்வை ஒரு ஓடம்.
இன்பத்தைக்
கண்ணீர்க் கடல்கடந்து காண உதவிற்று.
உன்னுடைய பார்வை உயிர்கொல்லி.
எனை விழுங்கி
என்னை அணுஅணுவாய்க் கொன்று புசிக்கிறது.
உன்னுடைய பார்வைக்கு
உவமைகளை அடுக்குகிறேன்.
ஒன்றுந் திருப்தியான உவமையாக மறுக்கிறது.
உன்பார்வை நெஞ்சில்
உசுப்பிவிட்ட ஏக்கத்தை,
உண்மையிலே என்னுள் உரசிவைத்த உணர்வனலை
என்னால் எழுத இயலாது…
புரிகிறது.

இதய இயக்கி

என்னிதயம் கருங்கல்லுப் பாறையாய் இருந்ததடி.
உன்விழிகள் கன்னக் கோலாய்த்
துளைத்துடைத்துக்
குடைந்தென் இருதயத்தில்… அமைந்த சுரங்கத்தில்
நீ..போய்க் குடியமர்ந்தாய்.
நித்தமுமென் இதயத்தில்
காலையிலே கூட்டிப் பன்னீர் தெளித்திடுவாய்.
கோலங்கள் போட்டிடுவாய்.
குத்துவிளக் கேற்றிடுவாய்.
உள்ளேநீ வசிப்பதனால் உன்விழிகள் என்னிதயப்
பாறையினை மீண்டும் உடைத்துடைத்துச்
சுரங்கத்தை
மேலும் பெரிதாக்க… கருங்கல் இருதயமோ
படிப்படியாய் நொருங்கிப் பாரம் குறைந்துள்ளே
தூய வெளிதோன்றி சுகந்த மணங்கிளம்பி
பரவசத்தில் என்னைப்
பறக்கவைக்கச் சிலிர்த்தேன்.
இப்போது என்னிதய வெளி புனிதக் கோயிலாச்சு,
கோயிலிலும் நீயே வியாபித்துக் கொண்டதனால்…
இதய இயக்கியாக நீயே இருப்பதனால்…
மனசும் இதயத்தின் வழி செல்ல ஏற்றதினால்…
கவலைகொளேன்!
எந்தக் காட்டாற்றையும் கடந்து,
இல்லறத்தை நிம்மதியின்
உச்சியிலே வெற்றிகொள்வேன்.

தேவதைகள் பற்றிய பாடல்

தேவதைகள் பற்றி நினைவு தெரிந்திருந்த
நாளிருந்த தூறு
கதைகளினை நானறிவேன்.
தேவதைகள் யாவும் தேவலோக வாசிகளே…
என்ற எண்ணமும்,
இருஅழகுச் சிறகோடு
வண்ண முடிதரித்து வானில் வலம்வந்து
மின்னும் உடைபுனைந்து வித அழகால் மயக்குபவை
என்ற மனப்படமும்,
எனக்குள் இருக்கிறது.
தேவதைகள் நல்லவற்றைச் செய்து
வரங்களினைத்
தாமாய் வழங்கித் தரித்திரத்தைச் சாய்த்துவிட்டு
வானிருந்து பூத்தூவி வாழ்த்தி மகிழுபவை
என்றவொரு கற்பிதமும்,
எனக்குள் இருக்கிறது.
தேவதைகள் ஆண்டவனின் சேவகராய்த் தூதுவராய்த்
தோன்றுவன என்றும்…
துஷ்டதேவதை சிலதான்
வாழ்ந்தாலும் அவற்றின் வலிமை குறைவென்றும்
எனக்குள் ஒரு நினைவு எப்போதோ சொல்லிற்று.
தேவதைகள் எதையும் நான் இதுவரையில்
நேரெதிரில்
காணவில்லை;
இனியுங் காண்பேனோ தெரியவில்லை.
தேவதைக் கதைகள்…
சிறுவயதிற் சொன்னதுபோல்
ஏதும் வரங்களினை, எவையேனும் அற்புதத்தை,
எனக்கு அருளினவோ என்று புரியவில்லை.
“தெருக்களிலே காண்பவற்றிற் சிலவேனும்
மனிதவுரு
எடுத்துலவும் தேவதைகள் தானோ” விளங்கவில்லை.
ஏதோ ஒரு தேவதை
எப்போதோ ஓர்நாளென்
மேலேபூத் தூவி மேலான ஓர்வரத்தை
தருவதற்காய் நல்ல தருணம் பார்த்திருக்குதென்ற
ஒரு உணர்வு மட்டும் என்
உளம் விட்டுப் போகுதில்லை.

வாழ்க்கைப் போர்

விரிந்து கிடக்கிறது அறையெங்கும் ஒருதனிமை.
சுழன்றபடி இருக்கிறது மின்விசிறி.
வசதியாகக்
கட்டிலிலே கால்வைத்துச்
சாய்மனைக் கதிரையிலே
நீட்டிக் கிடந்தபடி நீந்துகிறேன் கற்பனையில்.
விரும்பிய புத்தகத்தின் பக்கங்கள் சிறகுகளாய்
விரியப் பறக்கின்றேன்.
மின்னற் பளிச்சீடாய்க்
கவிதைப் பொறிகள் கருத்தரித்துக் கடதாசி
மேலே பிரசவித்து உயிர்ப்போடு தவழ்ந்திருக்க
ஏகாந்தத்துள் யாரும்
இடைபூறு செய்யாத
பேரமைதிக் குள்நான் எனைமறந்து உறைகின்றேன்.

விரிந்து கிடக்கிறது அறையெங்கும் ஒரே தனிமை!
தனிமை கொடுமையென்று
சொன்னவர்கள் யார்? எவர்கள்?
தனிமை இனிமையென்று சொல்கின்றேன் நானெனக்குள்.
சிறிது பொழுதகன்றால்…
அறைக்கதவில் இடியிறங்கும்.
தட்டுகிற ‘அயலவரால்’ திறபட்ட கதபூடென்
தனிமை, அமைதி தடுமாறி வெளியேறும்.
அதன்பின் சிரிப்பு,
அரட்டைகள் அரங்கேறும்.
எதÇடும் ஒட்டாது எனக்குள்நான்
கொதிகொதித்தும்
அவர்களுடன் போலியாகத் தலையசைப்பேன்.
இல்லையேல்… நான்
பேயனாவேன்;
“என்னைப் பிரசவிக்கப் பார்” என்று
கேட்குங் கவிதைகளைக் கருக்கலைத்து
அவர்களது
சேட்டை சிரிப்புகளில் ஒட்டாமற் சிரிக்கின்ற
‘யதார்த்தம்’ வருமுன்னர்
‘ஒன்றிரண்டைப்’ பிரசவிப்பேன்.

ஏழ்மை

சுழலுகின்ற மின்விசிறி சுழன்று
சுழன்று… தான்
களைத்து வியர்க்கையிலே
காற்றுக்கு எங்கு போகும்?

மேலாண்மை

பல்லக்கு ஒன்றைப் பரிசாகத் தந்தாளென்
செல்வாக்கு கண்டு
சிரங்குவித்த தேவகன்னி.
பல்லக்கில் ஏறிப் பவனி புறப்பட்டேன்.
எல்லோரும் எழுந்து
என்னை வணங்கினார்கள்!
நாரி முறிந்திடவும்…, நாலுபேர் நாளெல்லாம்
ஓயாமற் காவி ஊர்சுற்றி வந்தார்கள்!
என்கைத் திசைபார்த்துச் சேவகர்கள்
“பராக்” கென்ன…,
முன்செல்லும் ஏவலர்கள் கட்டியமாய் என்புகழைச்
சொல்லிவர,
உள்ளே சேடியர் கவரி வீச,
எல்லை கடந்த இறுமாப்புச் சொகுசில்நான்
மீசை முறுக்கிவிட்டு மேன்;மைச் சிரிப்பெறிந்தேன்.
முன்பார்த்த அழகையெல்லாம்
நாலுபேரின் தோளமர்ந்து
கண்ட திமிரில் அலட்சியமாய் வீற்றிருந்தேன்.
பல்லக்கை அலங்கரித்த
பட்டு, பவுண், வைரம்
பற்றித்தான் ஊரும் பரபரப்பாய்ப் பேசிற்று…
பல்லக்கு அழகில் நெஞ்சைப் பறிகொடுத்த
மெல்லியரின் கீதம்
பின்தொடர்ந்து கேட்டிற்று.
பல்லக்குக் காவுவோரின் பண்பு,
பணிவுகண்டென்
வல்லமையை எண்ணி ‘வழி–விழிகள்’ விரிந்திற்று.
எந்தன் அதட்டலுக்கு…
இருந்தெழும்பி,
வாய்பொத்தி,
தங்கள் வலிமறந்து சுமக்கின்ற ‘மாடுகளை’
எந்தன் மனது எள்ளி இரசித்திற்று.
எந்தன் பவனியினை
எல்லோரும் வரவேற்குஞ்
சந்தோசம் கண்டென் தலைப்பா கிரீடமாச்சு!

கண்திறந்து பார்த்தேன்.
காலடியில்… பல்லக்கோ,
எந்தன் மலரணையோ, எவையுமில்லை!
“செய்” என்ற…
என்னேவல் ஏற்றோர் எவருமில்லை!
எனைமதித்த
எண்ணற்ற வழிப்போக்கர் யாருமில்லை!
வெறுங்கனவு…
கண்டதனை உணர்ந்தாலும்;
கனவு தந்த இன்பத்தை
இன்றை ‘யதார்த்தம்’ எனக்கருளா தென்பதனால்
கண்மூடித் தேடுகிறேன்
அதே… கனவு தோன்றுதில்லை!

மன அவதாரம்

எந்தன் மனது எடுக்கும் அவதாரம்
ஒன்று இரண்டு அல்ல,
உவமைகளும் கொஞ்சமல்ல.
எந்தன் ‘மனப்புறா’ எண்திசை அளந்து… மீண்டும்
இன்றும் பறக்க எனைமீறிச் சிறகடிக்கும்.
எந்தன்‘திருட்டு மனம்’
எதிலெதிலோ;
பிறரினது
சொந்தப் பொருட்களிலோ; ஆசையுற்றுக் கவர்ந்துவந்து
எந்தன் இதயத்தின்
இருட்டறையுள் ஒளித்துவைக்கும்.
எந்தன் ‘மனநோக்கு’ பிறரறியாது அவரழகை
தந்திரமாய் நக்கித் தன்தாகம் தணித்து விடும்.
எந்தன் ‘மனச்சகுனி’
என்னைவிட எவரும்
சந்தோசம் வெற்றி தனையடைந்தால்… சதித்திட்டம்
ஒன்று செய்து மற்றோரைப்
பழிக்கும்… பரிகசிக்கும்.
எந்தன் ‘மனக்கால்கள்’ என்னோடு ஏறுவோரை
தடமிட்டு விழுத்தத் தருணத்தைப் பார்த்திருக்கும்.
எந்தன் ‘மனக்கழுகு’ “எதிரிக்குச் சாவுவரும்
எப்போ” எனத்தேடி
எங்கெங்கோ சுற்றிவரும்.
எந்தன் ‘மனக்கழுதை’ ஊர்த்துள வாரமென்னும்
சுமையை வலிந்து
சுமந்துநிதம் தள்ளாடும்.
எந்தன் ‘மனப்படகு’ இலாபம் வருமெனிலோ
எந்தப் புயலிடையும் எப்போதும் போக எழும்.
எந்தன் ‘மன ஆமை’
எனைச்சூழத் துயர்நடக்கும்
சந்தர்ப்பத் திற்தப்ப ஓட்டுள் தனையொடுக்கி
எந்தன் மனவேடம்,
எந்தன் இயலாமை,
தன்னைப் பிறரின்முன் தலைகாட்டாமற் தடுக்கும்.
எந்தன் ‘மன ஆடை’
என்றென்று தோய்த்தாலும்
கொஞ்சப் பொழுதுக்குள் ஊத்தையாகிப் போயிருக்கும்.
எந்தன் மனது எடுக்கும் அவதாரம்
ஒன்றுஇரண்டு அல்ல!
உவமையிவை மட்டுமல்ல!!
இன்னுமுண்டு… எழுதுவதற்கு வார்த்தையில்லை,
என்னசொல்ல?

காலத்தின் கைபிடித்து

காலம் எனைத்தனது கைப்பிடிப்பில் நடத்தி;ற்று.
நேற்றுச் சறுக்க…,
நிலைகுலைந்து, விழுந்தெழுந்து,
சேறு கழுவி, காயத்தில் மருந்துகட்டி,
சறுக்கிய இடத்தைத்
தவிர்த்தின்று செல்கின்றேன்.
காலம் எனை இன்றும் தன்பின் அழைக்கிறது.

நேற்றந்த வழுக்கலிலே கால்வைக்கச் செய்ததுவும்,
எனைத்தவற வைத்ததுவும்,
நான்வீழச் சிரித்ததுவும்,
விழுந்திறந்து போகாமல் விருட்டெனநான் எழவைத்து
சேறு கழுவுதற்குத் தண்ணீராய் வந்ததுவும்,
காயம் வடு வராது காத்ததுவும்,
விழுந்ததனை
எண்ணி இடியாமல் எனைச்செதுக்கி விட்டதுவும்,
என்னை வழிநடத்தும் காலம்… என அறிவேன்.
நானேதோ பாதைசெல்ல வைத்து…
அதைதவிர்த்துத்
தான்காட்டும் பாதையிலே நடத்திற்று… என உணர்வேன்.
காலமெனை இன்றும்… தன்
கைப்பிடியில் நடத்திற்று.
வாழ்வினது எல்லைவரை எனைக்கொண்டு நடத்துமது!

எப்பிடித்தான் இனிக்காலம்
எனை அலைக்கப் போகிறதோ?
எந்தச் சறுக்கல்களில் விழுத்திடுமோ?
எழுப்பிடுமோ?
கம்பீர நடைக்குவழி காட்டிடுமோ?
இல்லையுயிர்த்
தெம்பிழக்க வைத்திடுமோ? தெரியேன்!
எனினுமெனைக்
காக்கின்ற கடவுள்தான் காலமென் றறிந்ததனால்
இன்றுவரை எனைக்காலம் நெறிப்படுத்தி மீட்பதனால்,
நாளைக்கும் எனைக்காலம்
நடுத்தெருவில் விடாதென்று
நாள்தோறும் என்னுள்ளே நம்பிக்கைப் பயிர்வளர்த்துக்
காலத்தின் கைகோர்த்தேன்;
கவலையில்லை நடக்கின்றேன்.

வாழ்க்கைப் புதிர்

கனவு போன்ற இம் மானுட வாழ்க்கையைக்
கவிதை யாலே எழுத முனைந்தனன்.
மனித வாழ்வதன் மேடுகள் பள்ளங்கள்
வலிகள், வெற்றிகள் பாட எழுந்தனன்.
மனது என்றிடும் மர்மப் பொருளதன்
மையந் தேடி வரிகள் செதுக்கினேன்.
நனவு நித்தம் துவைத்து எடுக்கவும்
நைந்து போகாது சந்தஞ் சமைக்கிறேன்.

கனவு போன்றதே வாழக்கை என்றாலும்… அக்
கனவு நல்கும் களிப்புகள் ஆயிரம்.
மனது என்பது மர்மமே ஆயினும்
மனதின் எண்ணங்கள் ஆசைகள் கோடியாம்.
மனிதனைச் சுற்றி இடரும், மரணமும்
வாலை யாட்டித் திரியுதென்றாலும்… இம்
மனிதன் ஆடிடும் ஆட்டம்… அதிசயம்.
மனிதன் ஆடி அடங்கலும் அதிசயம்.

கேள்வி கேட்டிடக் கேட்டிட வாழ்க்கையாம்
கீதையின் பொருள் ஆழமோ கூடுது.
கேள்வி கேட்டொரு எல்லையில்… “இல்லையே
கேள்வி” என்றிடும் போதிலும்… வாழ்க்கையின்
ஆழ்ந்த பொருளோ புரிய மறுக்குது.
ஆதியந்தத் தொடர்பா விளங்குது?
வாழ்வை வலைக்குள் வளைக்க முனையும் என்
வரிகள் என்றுதான் தாகம் தணிப்பது?

நீயும் உனது நிறுத்தலும்

“என்னுடைய உணர்வு இது” என்று உருக்கொடுத்து
என்னுடைய கவியை எழுதுகிறேன்.
அட… நீயோ
“என்னென்று உனக்கு இப்படி உணர்வுகள்
வந்து அதையிதுபோல்
கவிதையிலே வகுத்திடலாம்”
என்றுஉன் ‘வட்டங்கள்’ இழிக்க எனைக்கேட்டாய்.
என்னுடைய உணர்வு இதுதான்…
அதுபோல்
என்னுடைய கவிதை இதுதான்…
இதைச்சொல்ல
என்னுள்ளே வெட்கம் எதுவுமில்லை.
என்னுணர்வைப்
புரிய முடிந்தாற் புரி; புரிய வில்லையெனில்
“போ” உனக்காய் எந்தன் உணர்வுகளில் அணையிடவோ…,
“நீ விரும்ப வேண்டும்” என என்கவியை மாற்றிடவோ…,
ஆயிரம் உணர்வுகளை அடக்கிவைத்து;
நம்வாழ்வின்
சாரத்தை, விருப்பைத் தவிர்த்துவிட்டு;
பிழைப்புக்காய்
போலி உணர்வுகளைப் பூவாகச் சூடியிந்த
மண்ணில் மிதியாமல்…
யாரோ திருப்தியுற
அந்தரத்தில் நடப்பதென வேடங்கள் கட்டுகிற
உன்போல் உயிர்வாழ முடியாது!
என்னுணர்வைப்
புரிந்தாற் புரி; புரிய வில்லையெனிற் “போ…” எனக்குக்
கவலையில்லை;
உந்தன் நிறுத்தலதும் தேவையில்லை;
எனைப்புரியும் காலம் இதிலெனக்கு ஐயமில்லை!

பாசக் – கயிறு

காட்டெருமை வந்தென் கவிதைப் பயிர்நிலத்தை
வேட்டை இடும்வரைக்கும்
விட்டுவைக்க முடியாது.

எந்தன் கவிப்பயிர்கள் இப்படித்தான் விளைந்தோங்கும்.
எந்தன்; கவிப்பயிர்கள்
இப்படித்தான் பூப்பூத்து
சந்தன மணந்ததும்ப தளதளென்று காய்த்தோங்கும்.
காட்டெருமை எந்தன்
கவிப்பயிரைப் புரிந்திடுமா?
வேட்டையென வெளிக்கிட்டால் பிரித்தறிந்து மென்றிடுமா?
கண்ணிற் தெரிவதெல்லாம் தின்று கழிப்பதுவே
இன்றும் எருமைகளின் குணம்;
இதுவும் மாறிடுமா?
காட்டெருமை நின்றென் கவிதைப் பயிர்நிலத்தை
வேட்டையிடும் வரைக்கும்
விட்டுவைக்க முடியாது.

காட்டெருமை தன்னைக் கட்டிவைக்க வல்லதொரு
நீட்டுக் கயிறுக்காய் நேர்கின்றேன்.
அது எனது
பாட்டன் வழிவந்த பழமரபு!
அதென் பயிரைக்
காக்கும்! தொடர்ந்து வளர்த்தெடுக்கும்!
நம்புகிறேன்.

கவிதை துணையாய்

கனவும் நினைவும் கவிதையுடன் வாழுகிற
எனது உயிர்வாழ்வை
எப்படித்தான் இடர்மாய்க்கும்?
சூழுந் துயரிற் துடித்தாலும்… கவிதையினைப்
பாட… துயர்சாய்க்கும்
-பார்கடந்த சக்தி – அருள்
கூடும்; தலைநோக்கிச் சுட்ட இடர்வேட்டுப்
போகும் என் ‘தலைப்பா’ மீதுரசிப் போயோயும்.
எத்தனை தடைவ
இடர்நெருப்பினுள் விழுந்தேன்…
‘தத்துக் கழிக்கும்’ பா… பீனிக்ஸ் பறவையாவேன்!
எத்தனை தடவைமிடி வெள்ளத்தில் அமிழ்ந்தேன்…
வற்றவைத்து வாழ்த்தும்… பா…
நாணலெனத் தலையெடுப்பேன்!
கவிதை எனக்கு கவச குண்டலம் போல…
கவிதை எனக்கு ஒரு கைவாளினைப் போல…
கவிதை எனக்கு ஒரு கன்னித் துணை போல…
கவிதை எனக்கு ஒரு கருணை மடிபோல…
கவிதை எனக்கு ஒரு கற்பக தருபோல…
கவிதை எனக்கு ஒரு கடவுள் நிழல்போல…
கவிதை துணையிருக்கக்
கலங்கி மரணிக்கேன்.
கவிதையினைக் கொண்டென் கவலை கலைப்பதுபோல்
கவிதையெனும் பாலமேறி
வந்துங்கள் கண்துடைப்பேன்.
கவிதையினால் இந்தக் ககனத்தை நானளப்பேன்.
கவிதைப் பயன்களினைப் பெற்று…. ஊரின்
கண் திறந்தென்
கவிதையெனும் வெளிச்சத்தால்
இயற்கை ‘இன்றும்’… கருமிருட்டுள்
மறைத்துவைத்த மர்மங்கள்
உங்களுக்குக் காண்பிப்பேன்.

துணிவு

எந்த வெயிலினிலும்
எந்த மழையினிலும்
நின்று வருந்துயரை நொருக்கிடுவேன்.
நீமட்டும்
உன்நிழலை ‘வெண்கொற்றக் குடையாய்’
எனக்களித்தால்!

தேடல்

ஆடம் பரமும் ஆரவாரப் பொய்ப்போலி
வேடங் களுமெங்கும்
மிக மலிந்த காலமாச்சு.
எங்குமெழும் நடிப்பு… உண்மை எளிமைகளைத்
தின்று இடாம்பீகச் சிரிப்போ டலைகிறது.
இயற்கைக்கு ஆப்புவைத்துச்
செயற்கைகொடி யேற்றுவதால்
உயிர்த்துடிப்பை அடகுவைத்து
உடல் பூச்சிட் டொளிர்கிறது.
அதிகப் படியான அரிதாரச் சோடனையும்,
எதிலுமெங்கும் போர்க்குரலும் நாகரிகம் ஆகியது.
கல்வி, உடை, காதலன்பு,
கவிதை, இசை, சமயம்,
செல்வம், உயிர்வாழ்க்கை…, எல்லாவற் றிலுமின்று
மிதமிஞ்சி ஆரவாரம், ஆடம்பரம் ஆள்கிறது.
இந்த வெறும்பகட்டில்
இந்த இரைச்சல்களில்
எந்திரமாய் மனிதம் இறுகிக் கிடக்கிறது.
பஞ்ச புலன்மரத்து,
நெஞ்சு சிறைபட்டு,
எப்போ இவற்றிருந்து விடுபட்டு எளிமையன்பில்
மென்மைகளில் அமைதிதனில் மெய்மறப்போம்…
எனமனிதர்
நிற்பதுவும் புரிகிறது!
நிழலெவர்க்குந் தரவல்ல…
நல்ல கவியை, நல்ல இசை, அறிவை,
உண்மையான காதலன்பை, உயிர்ப்பணையா இல்லறத்தை
நெஞ்சுக் கிதம்பூசும் ஆன்மிகத்தை,
கட்டறுத்து
வென்று சிரிக்கும் விடுதலையை,
அமைதிபூறும்
நிம்மதியைத் தேடி எனதிதயம் நேர்கிறதே!
என்னோடு தேடலுக்குச் சேரவாரும்… ஜெகத்தீரே!

வேண்டுதல்
கண்தெரியாப் பிச்சைக் காரனுக்கு
‘கிழிவை’ ஒட்டி
செல்லாத தாட்காசைத்
தர்மமெனப் போடுகிற
கேவலங் கெட்டவனாய்
மாற்றாதே என் விதியே!

பாதைகள்

உலகத்தில் பாதைகள் ஒன்றுஇரண்டு அல்லநண்பா!
பலதூறு பாதைகள்.
பலகோடி பயணிகள்.
எல்லோரும் பாதையொன்றிற் செல்ல முடியாது.
எல்லோரின் பாதைகளும் ஒன்றாக முடியாது.
அவரவர்கள் தத்தமது
பாதைகளில் செல்கிறார்கள்.
அவரவர்கள் தத்தமது பாதைகள் சரியென்று
நினைத்தபடி தானே நிதமும் நடக்கிறார்கள்.
அவரவரின் பாதைகளில்
அவரவர்க்கு நம்பிக்கை
இருக்கிறது;
‘அது’ சரியாய் இடஞ்சேர்க்கும் என்பதிலே
அவரவர்க்கு ஏற்ப அகத்திற் தெளிவுளது.
அவரவரின் பாதைகளைத் தெரிவுசெய்ய அவரவர்க்குச்
சுதந்திரமும் இருக்கிறது.
சூழ்நிலையும் உதவிடுது.
சிலரோ… தடுமாறி, திசைமாறி, வழிமாறி
பலநாள் அலைந்துலைந்தோர் பாதைக்கு வருகின்றார்.
ஆயிரம் பாதைகள் அணிவகுத்தும்
அவரவர்தம்
பாதைகளிற் பற்றுவைக்கப் பயணம் தொடர்கிறது.
பாதைகளைத் தேர்ந்து பயணித்தல் மட்டுந்தான்
எங்களது கைகளிலே…
இலக்கை அடைந்திடுமோ?
நடுக்காட்டில் விட்டிடுமோ? நமைப்பிழையாய் நடத்திடுமோ?
எதுவும் எம் கைகளிலே இல்லாமல்
ஏதோ ஓர்
நம்பிக்கை யோடு
நமது முன்னோர் சுவடையொற்றித்
தெம்போடு நம்கால்கள் செல்கிறது.
“நம்…. வழியே-
தம் வழியாம்” என்போரின்
அரவணைப்பின் துணையிருப்பில்
அவரவரின் பாதைகளிற் பயணஞ் சுலபமாச்சு.

என்பாதையில் நானும் பயணித்துக் கொண்டுள்ளேன்.
உன் பாதையில் நீ பயணித்துக் கொண்டுள்ளாய்.
உன்பாதை தவறென்று சொல்வதற்கோ… விமர்சித்து
“உன்பாதை எங்குசேரும்”
என்று எள்ளிக் கொள்வதற்கோ
எனக்குத் தகுதியில்லை!
அதுபோலென் பாதையினைத்
தவறென்று சொல்வதற்கோ பழிப்பதற்கோ
உந்தனுக்குத்
தகுதியில்லை!
ஏனெனில் நம் பாதையினைத் தெரிவுசெய்தல்
மட்டும் நம் கைகளிலே
பயணம் யார் கைகளிலே…?

தப்பிக்கும் கற்பிதங்கள்

செய்வதெல்லாம் செய்துவிட்டு சென்று நீ சரணடையப்
‘பாவ மன்னிப்புக் கூண்டு’ இருக்கிறது.
“மன்னிப்பீர்” என்று
மன்றாடி நீ கேட்டால்
மன்னித்து ஏற்க மதகுருமார் இருக்கின்றார்.
உன்பழியைப் பாவத்தை
ஒரேயடியாய்க் கரைத்தகற்ற
எண்ணற்ற ‘தீர்த்தம்’ இருக்கிறது ஊரூராய்.
தண்டனைக்கு அஞ்சித்
தப்பிப் பிழைப்பதற்கோ…
உடல்வருத்தி நோற்கின்ற நேர்த்தி பலஉண்டு.
பிராயச்சித்தம் எல்லாம்
பிசகாமற் செய்வதற்கோ
சரியாய் வழிகாட்டுஞ் சடங்குகட்குக் குறைவில்லை.
‘தெய்வத்தின் பேரால்’
‘புனிதப்போர்’
‘சுகமளித்தல்’
பொய்யில்லை உனைக்காக்கப் போர்வைகள் ஏராளம்.
ஆதலினால் மானுடனே… அசராமற் கடவுளர்க்குள்
மோதல் வளர்த்துந்தன் ஆணவத்தைப் பெருக்கு;
அதற்காய்
தீ… வை; கொலைகள் செய்.
மாறிமாறிக் கோவிலிடி.

நிஜம்

பச்சைப் பசேல்வயல்கள் படர்ந்த ஊர் எல்லையதன்
அச்சம் குடியிருக்கும் அயலில்
சுடுகாடு
உறங்கிக் கிடக்கிறது.
ஊளையிட்டு வருங்காற்று
நிரம்பிக் கிடந்த மௌனத்தைக் கலைக்கிறது.
ஆளரவம் அற்ற அகாலம்… பகல்வேளை.
காகம் குருவிதானும் கண்ணிற் படாப்பொழுது.
சப்பாத்திக் கள்ளி, சாய்ந்தவரின் பெயர் திகதி
ஒப்பிக்கும் பேயறைந்த ஒரு விருட்சம்,
காவலுக்கு
எனஓர் சூலம், இடிந்தழிந்து கப்பியற்ற
கிணறு, ‘மயானச் சபை’யால் எழுந்துநிற்கும்
தங்குமிடம்,
காற்றிற் தவழ்ந்துவரும் சாம்பல்மணம்,
உடையுண்ட முட்டி, ‘காடாத்து’ முடிந்து மீந்த
படையல்கள், வாழை மடல்கள்,
கரிபடிந்த
ஐம்பது சதக்குற்றி, அப்பால்… ஒரு திசையில்
பாதி எரிந்தபடி பாடையுடன் பன்னாங்கு.
ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன்… ஒன்றிலுமே உயிரில்லை!
பக்கத்துச் சுடுமேடை பஸ்ப்பமாகிக் கிடக்கிறது.
நக்கி உடல்சுவைத்த தீப்பாம்பு நாக்குகளின்
தகிப்படங்கிப் போய்… மேடை
சாம்பற்பூ பூத்திருக்க
வாடி வரண்ட சிதை மனதை மிரட்டிற்று.
அங்கங்கே எலும்புகள், அணைந்துபோன கரிக்கட்டை,
யாருடைய ஆசைகள் அவிந்து கருகிற்று?
யார்… இவ் எலும்பு?
யார்… இந்தக் கரிச்சாம்பல்?
‘வானை அளக்க வல்ல’ னெனப் போராடி
ஆணவத்திற் பாடி,
அடிபட்டு மண், பெண், பொன்
தாகத்தில் வாடித் தவித்து… ஆங்கோர் துளிக்காற்றுப்
போகப் பொசுக்கென்று போய்… இப்போ
நீறிற்றே…
யார் இவ் எலும்பு? யார் இந்தக் கரிச்சாம்பல்?
அழகு, புகழ், பெருமை,
இன்னும் எது எதுவோ…
முழுதும் எரிந்து முடிந்து கிடக்கிறதே…
கடைசியிலே துணைக்குவந்த மரப்பெட்டி ‘திரிதூண்ட’
பொசுங்கி நெருப்பைப் புணர்ந்து கரியாச்சே…
“யாரிவ் எலும்பு?
யாரிந்தக் கரிச்சாம்பல்?”
கேட்கையிலே… காற்றோர் பிடிசாம்பல் அள்ளிப்போய்
“யாருக்குத் தெரியும்” என வானில் விசிறிற்று.
மரணத்தை நிரந்தர வைப்பிலிடுஞ் சுடுகாடு
எனையும் பார்த்துத்தன்
கொடுப்புள்ளா சிரிக்கிறது?

எங்கே அவதாரம்

எங்கே இறைவன்? எங்கே அறத்தலைவன்
அதர்மமொடு ஆணவமும்
ஆடிக் குதிக்கையிலே…
நீதிவழி செல்கின்ற தேவர்களை மிதித்து
அப்பாவிகள் வாட,
அவற்றைப் பசளையாக்கி
வல்லமைகள் விளைகையிலே… வந்து அவதரித்து
அதர்மத்தின் ஆணவத்தின்
ஆணிவேர் தனை அறுத்து
அவற்றின் முதுகெலும்பை முறித்து அருள்வானே…
எங்கே இறைவன்? எங்கே அறத்தலைவன்?
இன்றும் சிலசூரர் ஆணவத்தோ டலைக்கின்றார்.
இன்னும் சில அசுரர்
தங்கள் பலத்தின்முன்
சிறியோர் தலையெடுக்கக் கூடாதென்றாடுகிறார்.
நீதிநெறி மீறி, நினைத்தபடி,
அநீதிவழி
வம்புத் தனத்தால் மெலியோரை வதைக்கின்றார்.
தர்மத்தை மதிக்கும் தலைகளிலே
குட்டித்…தம்
அதர்ம நடத்தையினால் அறிவை அடகுவைத்துக்
குதிக்கின்றார்.
வலிமையதன் குமரர் தாமென்கிறார்.
எங்கே இறைவன்? எங்கே அறத்தலைவன்?
அதர்மமொடு ஆணவமும் ஆடிக் குதிக்கையிலே
வல்லசுரர் வெருட்டையிலே
வந்து அவதரித்து
அவற்றின் முதுகெலும்பை முறித்து அருள்வானே…
எங்கே இறைவன்? எங்கே அறத்தலைவன்?

சரண்

ஏன்நித்தம் சோதனைகள் வருகு தென்று
எந்தனுக்கு புரியவில்லை; கோள்கள், தங்கள்
வீடுமாறி… ‘வாடகையும் அதிக மான’
வீடடைந்த கொதிப்பினோடு… என்னை வாட்ட
வேதனைகள் சூழ்கிறதோ…? விளங்கவில்லை.
“ ‘மெய்யன்’ உனை வேண்டிஅழ… கோளும் நாளும்
தீதொன்றும் செய்யாது” என்ற வாக்கு
சேவிக்கும் எனைத்தானா காக்க வில்லை?

எத்தனைநாள்… வேறெவர்க்குஞ் சொல்லா தெந்தன்
“இறiவா” உன் செவிக்கே என் துயரைச் சொன்னேன்.
எத்தனையோ முறை கவியில் “எந்தன் சோகம்
ஏற்றுள்ளம் அமைதியாக்கு” என்று கேட்டேன்.
அத்தனையுங் கேட்டுவிட்டும்… அடுக்கடுக்காய்
அயரவைத்தாய்; இடர்தந்தாய்…! உனை இறைஞ்சிக்
கத்திடும் என் கவிதைகளை இரசித்துக் கேட்டுக்
களிக்குமாசை யோடா நீ சோகம் தாறாய்?

ஆணவத்தோ டலைபவர்கள், தட்டிச் சுற்றி
அடக்கியாழ்வோர். குறுக்கு வழித் திட்டம்போட்டு
ஊரையேய்த்துப் பிழைப்பவர்கள் சிரித்து வெல்வார்.
உண்மைவழி உரிமைகேட்டு, எழுந்து, “உந்தன்
பார்வையொளி நடத்து” மென்று… கவலை வந்;தால்
பாப்புனைந்தென் சுமையையுந்தன் பதத்திற் சேர்க்கும்
பாவி அடிக்கடி உடைவேன்; துயரில் சோர்வேன்.
பார்த்தணைக்காய்! எனினுமின்றும் நின்தாள் வீழ்ந்தேன்.

வெற்றிடம்

எப்பாதையாற் செல்வ தென்ப தறியாமல்
எப்போதும் போற் தானே ஆறு நகர்கிறது.
யாருக்கு வீசுவது என்ற குறிப்பின்றிக்
கால்போன போக்கிற்தான் காற்றுந் திரிகிறது.
“எங்கேபோய்ச் சேர்வதற்கு” ஏதும் புரியாதே…
காலைவரும் முன்-
மொட்டு, கண்விழித்துக் கொள்கிறது.
என்ன விதியென்று எதுவும் புரியாமல்
அலைகள் பிறந்தெழுந்து கரையில் சிதைகிறது.
மனிதன் இவற்றுக்கு விதிவிலக்கா?
இல்லையடா!
வழிதெரியாப் போதும் நதியொருநாள் கடல்சேரும்;
திசையறியாப் போதும் செல்கின்ற காற்றெவர்க்கோ
மூச்சாகும்;
ஏனென்று புரியாமற் பூத்திருக்கும்
பூவுமொரு நார்சேரும், இல்லையொரு கோவிலிலோ,
பூத உடலினிலோ போய்ச்சேரும்;
மானுடனும்
எங்கு செல்வதென்று அறியா தலைந்தாலும்
ஓர்நாள் தனக்குரிய இடந்தன்னைப் போயடைவான்.
அவனவனுக் கென்று ஆங்காங்கு வருகின்ற
வெற்றிடத்தை மிகஇயல்பாய் நிரப்பி
உலகியங்கவைப்பான்.

குரு

வாழ்வின் இடர்கள் வழிநெடுக ஓநாயாய்ச்
சூழ்ந்து குதறின… நான்
வடியும் குருதியுடன்
வலிமறந்து, கால் ஓய்ந்து, சற்று இளைப்பாற,
மனஅமைதி தேட,
நிம்மதிக்குள் தூங்கியெழ,
கோயிலுக்குப் போனேன். கூட்டம் எனைநெரித்து
மூச்சுத் திணறவைத்து மோதிற்று!
ஆரவாரக்
கூச்சல் எனைப்பாம்பாய்க் கொத்திற்று!
பொய்யோடு
காமம், களவு, கழுத்தறுக்க நேர்த்திவைத்தல்,
காசால் கடவுளரைக் கைப்பற்றும் ஆவல், எனக்
கோவில் குழம்பிற்று.
ஆண்டவன் “தான் அங்கில்லை
ஏன்பின் இடிபட்டாய்” எனக்கேட்டான்.
தான்…. தெய்வ
ரூபம் எடுத்தஉன்னில் குடியிருப்பேன் எனச்சொன்னான்.
அன்பே…!
அட அந்த ஆண்டவனே உணர்ந்தமரும்
பண்பே!
எனைநீயாய்ப் பார்த்தழைக்க மாட்டாயா?
உந்தன் அருட்கண்ணால் உயிரமைதி தாறாயா?
உந்தன் இதயம் ஒன்றே… நான் அடைக்கலமாய்த்
தங்குமிடம்;
இதயம் திறந்து அழைப்பாயா?

கடவுளுக்கு உரைத்தது

காண்டா மணியோசை கர்ப்பக் கிரகத்தில்
தூங்கிக் கிடக்கும்உனைத்
தொட்டு எழுப்பட்டும்.
நாமெல்லாம் பாடுகிற நாதாஞ்சலி உனது
காதூடு பாய்ந்துனது
கருத்தை உசுப்பட்டும்.
கொட்டுத் தவில் முழக்கிக் கூடிக் கரகமாடி
கட்டியமும் உன்வரவுக் காக உரைத்தபடி
நிற்கின்ற எங்கள்
‘நிலை’ நின்னை எழுப்பட்டும்.
எங்களது பொங்கல் கல்லாய்ச் சமைந்திருக்கும்
உந்தன் இருதயத்தில் ஈரமூற வைக்கட்டும்.
அற்புதமே உந்தன்
அருள் விழிகள் எங்களினை
நோக்கட்டும்; உந்தன் நுண்ணதிர்வு எம் இடரைச்
சாய்க்கட்டும்; சூழும் தடைதகர்த்துன் அபயக்கை
காக்கட்டும்;
எங்களினைக் காத்துக் கரைசேர்த்துன்
‘ஞானாக்கினி’ எம்மைச் சுட்டுப் புடம் போட்டெம்
ஈனம் அறுத்து
இதந்தந்து வாழ்த்தட்டும்.
ஞானத்தின் எல்லையை உன்
நாதரூபம் காட்டட்டும்.

(பின்அட்டைக் கவிதை)

“நமக்குத் தொழில் கவிதை”
என்றானே தீக்கவிஞன்.
எனக்குத் தொழிலல்ல…எனக்கு அது உயிராம்!
கவிதை முழுதாய்க் கனிந்து
வசப்பட்டு
எனக்குள் ‘நிரந்தரியாய்’ இருக்க வரங்கேட்டேன்.
எனக்குக் கிடைத்ததுவோ…
கவிதையெனும் அண்டத்தின்
‘சிறுதுகளே’!
அந்தச் சிறுதுகளின் உயிரெனக்குள்
வளர்த்தபேர் இன்பத்தை மாந்தியதால்
‘முழுஉயிரும்’
எனக்குள் நிரந்தரமாய் இருக்க வரங்கேட்டேன்.
வரமாய்க் கவிதையுயிர் வாய்த்தால்
இப்பிறவியினைக்
கழித்திடஎன் கவிதையினைக்
கருவியாகக் கைக்கொள்வேன்!