சொர்க்கம்

சொர்க்கம் எங்கெனத் தேடி எண் திக்கெலாம்
சுற்றி வந்தாலும் காணக் கிடைக்குமா?
சொர்க்கம் என்பதைக் கற்பனை பண்ணியே
சுழன் றடித்தாலும் சேர்ந்திடக் கூடுமா?
சொர்க்கம் என்பது சௌந்தர்ய லோகம்தான்!
தொட்டுப் பிடிக்க இயலாத தூரம் தான்!
சொர்க்கம் தேடி ..நம் காலடி மண்ணதன்
சுகங்களைத் துய்க்கா திருத்தல் துயரந்தான்!

சொர்க்கம் காலடிக் குள்ளே மறைந்துள்ள
புதையல் போன்றுந்தன்…சூழலில் உள்ளதே!
சொர்க்கம் உன்வாழ்வை சீரும் சிறப்பொடும்
துய்த்து வாழ்வதே! இருப்பதைக் கொண்டு நின்
மர்ம வாழ்வில் மகோன்னதம் காணலே!
வாய்த்த வரம் கொண்டே கோட்டைகள் கட்டலே!
சொர்க்கமுன் ஊ ரில் இருப்ப(தே)! அதைவிட்டோர்
சொர்க்கம் தேடி நீ காணல்…முயற் கொம்பே!

சொர்க்கம் உன்கைக்குள் உள்ளதைக் காண்பதும்,
சொர்க்கம் நின் காலின் கீழ் நிற்றல் தேர்வதும்,
சொர்க்கம்…உனக்கு விதிக்கப் பட்ட வாழ்வைச்
சுகித்து; உச்ச மகிழ்வைப் பெறுவதும்,
சொர்க்கம்… மாயையில் சிக்கா தெழுவதும்,
சொர்க்கம் நித்தமும் உன்னோ டிருப்பதை
சர்வ நிச்சய மாக உணர்வதும்
தான்! இதை விடச் சொர்க்கமொன் றில்லை காண்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply