துயில்
மூன்றாம் பிறையினது மூலைகளில்
கயிறிணைத்துத்
தூளிகட்டி உன்னைத்
துயிலவைக்க நான் நினைக்க…
மூன்றாம் பிறையே முழுத்தூளி
என என்னை
ஏற்றிவிட்டாய்; பாட்டில்
என்னே நின் கவிச்சிறப்பு?
தாலாட்டுப் பாடித்
தளிருன்னைத் தூங்க வைக்க
தாலாட்டே நீயானாய் தழுவி;
எனை மறந்தேன்!
சாமரமாய் முற்றத்துத் தாவரங்கள்
தலையசைக்க
நானும் உருவேற்றி நின்றேன்.
தானாய் உருவேறி
நீ அசைவாய் சாமரமாய்…
நிம்மதியாய் நான் துயின்றேன்!
நானுன்னைத் தூங்கவைக்க,
நீ என்னைத் தூங்க வைக்க,
தூங்காத வாழ்க்கைக்குள்
நம்மை என்று
மீட்டெடுப்பேன்?