நஞ்சூறிய காலம்
நஞ்சூறிக் கிடக்கிறது நமதுணவு!
இன்றைக்கும்
நஞ்சூறிக் கிடக்கிறது நாங்கள் குடிக்கும் நீர்!
நஞ்சூறிக் கிடக்கிறது நமது மருந்துகள்!
நஞ்சூறிக் கிடக்கிறது நமதுநிலம்!
இன்றெங்கும்
நஞ்சூறிக் கிடக்கிறது நம் சுவாசக் காற்று!
நஞ்சூறிக் கிடக்கிறது நமது கடல்!
அதேபோல
நஞ்சூறிக் கிடக்கிறது நம்(ன்)மைப் புரக்கும் வனம்!
நஞ்சூறிக் கிடக்கிறது நாற் திசைகள்!
அன்றைவிட
நஞ்சூறிக் கிடக்கிறது நம் இயற்கை!
படிப்படியாய்
நஞ்சூறிக் கிடக்கிறது நமது பயிர் உயிர்கள்!
நஞ்சூறிக் கிடக்கிறது நம் சிந்தை இதயம் மூளை!
நஞ்சூறிக் கிடக்கிறது நம்
நரம்பு தசை எலும்பு!
நஞ்சூறிக் கிடக்கிறது நமது மனம் உணர்வு!
நஞ்சூறிக் கிடக்கிறது நட்பு கற்பு அன்பு பாசம்!
நஞ்சூறிக் கிடக்கிறது நமது வளம் நலன்கள்!
நஞ்சூறிக் கிடக்கிறது நம் கல்வி நம் தொழில்கள்!
நஞ்சூறிக் கிடக்கிறது நமது கலை கலாசாரம்!
நஞ்சூறிக் கிடக்கிறது
நமது இசை கவி நடனம்!
நஞ்சூறிக் கிடக்கிறது நமது மொழி சமயம்!
நஞ்சூறிக் கிடக்கிறது
நாட்டின் அரசியலும்!
நஞ்சூறிக் கிடக்கிறது நகரும் வரலாறும் !
நஞ்சூறி நீலம் பாரித்துக் கிடக்கு வாழ்வு!
நஞ்சூறிச் சாக கிடக்கிறது புவி
மனிதம்!
எல்லாம் இருப்பதுபோல் தோன்றினாலும்…
எவரெவர்க்கும்
எல்லாம் கிடைப்பதுபோல்
எதார்த்தம் மகிழ்ச்சி தந்தும்…
எல்லாம் தம் சுயம் இழந்து,
எல்லாமும் தூய்மை கெட்டு,
எல்லாமும் உயிர்ப்பழிந்து,
எதிர்ப்புச் சக்தியும் நலிந்து,
எல்லாமும் நஞ்சூறிக் கிடக்கிறது!
அரூபமாக
நஞ்செங்கும் சுவறினாலும்…
நல்ல பளபளப்பாய்க்
கொஞ்சிக் குலவிடுது குவலயம்…
இதே யதார்த்தம்!
நஞ்சை யார் படைத்தார்கள்?
நஞ்சை யார் தந்தார்கள்?
நஞ்சை யார் விதைத்தார்கள்?
நஞ்சை யார் அறுத்தார்கள்?
நஞ்சை எங்கும் யார் கலந்தார்?
நஞ்சாக்கி யார் விட்டார்?
நஞ்சை யார் கக்குகிறார்?
நஞ்சை யார் பெருக்குகிறார்?
நஞ்சான தெல்லாமும் என்றிருந்து?
யாராலே?
நஞ்சூறி எனது கேள்விகளும் துடிக்கும் வேளை…
நஞ்செங்கும் பரவி
நமைக்காக்கும் அமுதமுந்தான்
நஞ்சாக மாறுமெனில்…
என்னாகும் ஞால நாளை?