சுடர் வாழ்வு

காற்றடித் தணைக்க கடும் முயற்சி செய்ய…தனை
ஏற்றத் துடிக்கும் விரல்களுக்கு
துரோகமற்று
எண்ணை உண்ட திரியில்
எப்படியும் பற்றி மூளும்
சின்னச் சுடர்போல்…சிரமம் தான் நம் வாழ்வு!
அடித்தணைக்க முயலுகிற
அற்பக் காற்றா காலம்?
பிடித்து பொறி உரசி புது நெருப்பை ஏற்றுகிற
கரம் தானா நம் முயற்சி?
எண்ணையா இச் சமூகம்?
திரி என்பதா குடும்பம் உறவு?
அதில் பற்றி
எரிய முனைகின்ற எம் வாழ்க்கைச் சுடர்…
தொடர்ந்து
அணையாமல் பார்க்கும்
அரூபக் கையா இயற்கை?
நொடியில் சிறுகாற்று அடித்தாலும்
நூர்ந்தணையும்
படி… பதறி அஞ்சி
பற்றும் சிறு சுடரின்
ஒளியாலே இந்த உலகத்தில்
கொஞ்சமேனும்…,
அழகில் சிலதையேனும்…,
அறிந்துணர;
வருவோர்க்கும்
தெரிவிக்க வல்ல சிறுசேவை செய்வதற்கு;
திரி கருகு முன்னர் திரிச்சுடரை
ஊதித்தான்
பறிக்குமா காலம்?
பதில் தருமா நம் தெய்வம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply