காப்பு வழி?

என்ன கொடுமையிது? -எங்கள்
எட்டுத் திசையும் நலிந்து துவண்டு
துன்பத்தில் தோய்கிறது! -அதன்
சுவாசம் நொடிந்து திணறிடுது!
புன்னகை தோற்றலைந்து -பேய்கள்
புகுந்ததாய் முகங்கள் இருண்டுறைந்து
அன்பும் அரவணைப்பும் -இன்று
ஆதரவற்றுத் தனித்துளது!

கூடி இருக்கையிலே -என்ன
கொடுமைகள் சூழினும் ஓர்துணிவு
கூடி இருக்குமுள்ளே -துணை
கூட்டம் தொடர்புகள் தெம்பருளி
வாடும் மனங்களிலே -நீரை
வார்க்கும்; இன்றோ அயல் நிற்பவரும்
கூட நோய்க் காவிகளாய் -உயிர்
கொள்ளலாம்…கோர்க்குமோ நொந்தகரம்?

நானோர் தனித்தவன் காண் -ஆமாம்
நாமும் தனித்தனித் தீவுகள் தாம்!
சாவு வலி நோயை -நாம்தாம்
தாங்கணும்…யாரும் துணைக்கிலையாம்!
ஆக நம் பாதுகாப்பு -எங்கள்
அசட்டையால் போம்; அயல் நிற்கும் வாழ்வும்
மாளலாம்…என்ன தீர்வு? -நாம்தாம்
வாழணும்…காப்பு வழி தெரிந்து.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply