ஞானவீரர்

நல்லூரைப் புதுமைகளுள் நகர்த்திக் காத்த
நாயகர் நம் ‘குமாரதாஸ் மாப்பாணர்’ தான்!
எல்லைகளை விரித்து, மூலஸ்தானம் விட்டு
இருந்த முழுக் கோவிலையும் புதிதாய்ச் செய்து,
பல் பழைய நடைமுறைகள் தவிர்த்து, எந்தப்
பக்தர்களும் பேதமற்று வணங்க வைத்து,
வல்ல வரலாற்றை ஐம்பதாண்டின் மேலாய்
வரைந்த ‘பத்தாம் நிர்வாகத் தலைவர்’ அன்னார்!

சண்முக கோபுரம், முத்துக் குமார சாமி
சந்நிதியில் ‘விமானம்’, தேர் முட்டி, வையம்-
கண்டு பின்பற்றும் கோபுரத்தின் முன் ‘வில்
மண்டபம்’, புது வசந்த மண்டபம், பின்
சண்முக; குபேர நவ தளங்கொள் ராஜ
கோபுரங்கள், புனரமைத்த தீர்த்தக் கேணி,
சண்முகர்க்கு ‘சுவர்ண செப விமானம்’ பொன்னால்,
சாதனையின் பட்டியல்கள்…நீளும் சொன்னால்!

யாவருக்கும் ஒருநீதி, ஏழை செல்வர்
ஆண்டிக்கும் அரசருக்கும் சமனாய் வீதி,
வேலவர்க்கே முன்னுரிமை, நேரம் பிந்தா
வேளை..பூஜை, திருவிழாக்கள், பராமரிப்பு,
யாவையும் தம் சுய முயல்வில் முடிவில் செய்து…
வந்த தடை கொய்து…குகனருளால் உய்து…
பார் போற்றும் நல்லூரைக் ‘குமார தாஸர்’
படைத்தருளி…’யாழ்ப்புகழை’ வளர்த்தார் நெய்து!

மோனந்தான் தம்மொழியாய்; பார்வை ஒன்றே
முறையான நிர்வாகம் செய்யும் தூதாய்;
நீறணிந்த திருமேனி, செயல் சொல் சிந்தை
நிதம் வேலன் பணி செய் கருவிகளாய்…வாழ்ந்தெம்
பாரம்பரி யத்திற்கும் புதுமை யிற்கும்
பாலமுமாய் நின்று நல்லைக் கந்தன் நாமம்
நானிலமும் திகழவைத்தார் ஒருவர்…அந்த
ஞானவீரர் காண்..’குமாரதாஸ் மாப்பாணர்’!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply