நல்லூரடி மாலை

மந்தை வரிசையாய் வானில் முகிற்கூட்டம்.
சந்தனத்தை அனைத்தினிலும்
சாத்திற்று பொன்அந்தி.
வடக்கிருந்து தெற்காக
நகருதந்ந முகில் மந்தை.
இடைக்கிடை சிலுசிலுத்து
‘இருப்புரைக்கும்’ மென்காற்று.
தொடராகப் பறந்து தொலைவேகும்
வெளவால்கள்.
படியத் தொடங்கிடுது மேற்கிருந்து இரவிருட்டு.
வெட்ட வெளியின் விரிவை
விரித்துரைக்கும்
அட்டகாச அயலில்
அணிவகுத்து எழுந்துயர்ந்த
கோபுரங்கள்!
‘அர்த்தசாமப்’ பூசைக் குழலோசை.
நாலு திசைகளையும் நனைக்கும் ‘திருஊஞ்சல்’.
ஓய்ந்தும் மனச்செவியில் ஓயா
மணியோசை.
பள்ளியறை சென்ற..இறை படுக்க
‘வயிரவரை’
“தள்ளாமல் காத்திடப்பா”
எனத்தவித்துத் தொழுது
‘கடைசித் தீபமும்’ கண்டு கலைகின்றார்
கடம்பனுக்கு நிதம் வரவு காட்டும்
வழமை அன்பர்.
மூடிய வாசலின்முன் விரியும்
மணல் முகிழ்ந்த
வீதியிலே வேலன் காற்
தடம் தேடிச் சிலபேர்கள்.
ஆறுதலாய்… அலுவல்கள் முடித்து வந்து
தலைவணங்கி,
“பார்த்துக்கொள் எல்லாம்நீ”
என்று பாரம் இறக்கி,
வீதி மண் விபூதியாக்கி,
வில்வமரம் தீண்டி,
தேரடியும் சுற்றித் திரும்புகிறேன்….
சுமையின்றி.
எரிந்தும் அணைந்தும் இடைக்கிடை
எழும்சுடரில்
சொரிகிறது இன்னருளை….
சூடாறாத் தீச்சட்டி!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply