விதிநீயே….

எது எந்த வேளையில் எனைச்சேர வேண்டுமோ
எழுதிநீ தந்து விடுவாய்.
இடிவீழும் போதிலும் இடியாமல் மீட்டெனை
இதமாயுன் நெஞ்சில் நடுவாய்.
“விதியென்ன” கேட்கையில் “விளைவென்ன” தேடையில்
விசயம்…நீ என்று பகர்வாய்.
வினையாலே தாழ்கையில் விருதுக்கு மாழ்கையில்
விடுவித்து புத்தி தருவாய்.
சதிநூறு செய்பவர் தலைதொங்கி ஓடவும்
தருணங் கொணர்ந்து மகிழ்வாய்.
தமிழாலே வெல்கையில் தருமவழி செல்கையில்
தலைகோதி உச்சி முகர்வாய்.
கதிநீயே என்று நின் கருணைக்கு ஏங்கினேன்
கடைக்கண்ணைக் காட்டு குகனே!
கரந்தந்து தூக்கெனை மடிதந்து பார்த்தணை
கடைசிவரை நல்லை அரனே!

அலங்காரக் கந்தனாய் அழகான மன்னனாய்
அயலெங்கும் உந்தன் அருளே.
அதுதாண்டி செல்வமும் அளிப்பாய்மெய் தேடிடும்
அனைவர்க்கும் நீயே பொருளே!
வெளிவேசம் ஆயிரம் மிகுசெல்வர் போட…நீ
விரும்புவாய் அன்பின் உறவே.
விடைதந்து ஏழ்மைக்கும் விருதாக நிம்மதி
விளைவிப்பாய் நீயே உயிரே!
வலைவீசும் நோய்நொடி… வசமாக மாட்டுவேன்
வலைவெட்டி மீட்க வருவாய்.
வலிமைகள் ஊட்டுவாய் வருமானம் கூட்டுவாய்
மகிழ்வையென் உறவுக் கருள்வாய்.
‘விலைபோயிடாப் பொருள் விழுமட்டும்’ என்றுயான்
விளங்கவும் கீர்த்தி தருவாய்.
“விதி…நீயே” கண்டுளேன் விடுகதை வாழ்க்கையை
விடுவித்து ஞானம் பகிர்வாய்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply