மீண்டெழுவாய்

கண்களில் நீர்த்துளி கண்டு துடைத்துக்
கசிந்து உருகுகிறேன். –உந்தன்
கால் கையில் காய்ந்து உறைந்த குருதியை
கழுவி அகற்றுகிறேன். –உடற்
புண்களின் சீழினை ஒற்றிப் புதுத்துணி
போட்டு மருந்திடுவேன். –சிறு
புன்னகை மொட்டு அரும்பி மலர் முகம்
பூக்க…. வருடுகிறேன்.

உன்மனக் காயம் வடுக்கள் உறுத்தும்
உளச் சிகிச்சை தருவேன். –அட
உள் மனைந்துள்ள கண்டல்கள், புற்றை…அறுத்
துள் வலி போக்கிடுவேன். –எதும்
மென்று விழுங்கத் தடுக்கும் வாய்க் கச்சலை
வீழ்த்த…. இரசம் அருள்வேன். –நிதம்
வேதி பிடித்து… தலைச் சளி, குத்திடி,
வேக உதவிடுவேன்.

“என் எழில் நாடே எழுந்திடு!” பத்தியம்
இப்போ அருந்திடுவாய்! –எடு
எட்டுக் குளிசைகள் தண்ணி மருந்திவை
கைக்கும் குடித்திடுவாய்! –உடன்
உன் பிணி போக்கவே நேர்ந்து வந்தேன்…பிர
சாதம், நூல் ஏற்றணிவாய்! –உள்ள
உன் முக ‘நாமுறு’ போக்கிடச் …சுற்றியே
போடுவேன்….நீ உயிர்ப்பாய்!

இப்படியே பிணியோடிருந்தால் எவர்
என்று உனைமதிப்பார்? –வலு
ஏது மிலாது நலிந்திருந்தால் இனி
எப்படி நீ நிமிர்வாய்? –உனைச்
சப்பும் கிருமிகள், நோய் நொடி, மேவிடில்
சாவில் விழுந்தழிவாய்! –எழு
சாப்பிடு சத்துக்கள்; நான்தருவேன் துணை
சக்திகொள்…மீண்டு வெல்வாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply