மகிழ்வு?

நிலவின் ஒளியில் நெடுநேரம் குளித்து
அழகிரவு நனையும்
அகாலப் பொழுது இது!
பாலால் அபிஷேகப் பாணியிலே
பெளர்ணமியின்
பாலில் அயலும் பரவசமாய் முழுகிடுது!
வீசும் இளங்காற்று மிக மெதுவாய்த்
தலைதுவட்டிப்
போக…மரங்களது கிளைக்கூந்தல் புரள்கிறது!
“கூந்தலுக்கு வாசமுண்டா” என்ற
பழங்கேள்விக்கு
“ஆம்” என்று பதில் தோன்ற
அயலெங்கும் பொன்சுகந்தம்
தான்…இந்த நிலவின் தண்ணொளியில்
முற்றத்தில்
கூடி இருந்து குதூகலக் கதைபேசி
சோறு பிரட்டித் திரளையாய்க் குழைத்து
ஆச்சி அருள
அமுதமாய் அதைவிழுங்கி
மூச்சை நிறுத்த வரும் சாவை முட்டி மோதி ஓட்டி
ஆச்சர்யம் துய்த்த காலம்
அதற்குள் ஏன் தொலைந்து போச்சு?
பெளர்ணமியில் நிலாச்சோறு,
பரவசமாய் முற்றத்தில்
எவ்வளவு நேரம் இருந்தலட்டல்,
படுத்துறங்கல்,
சொந்தமெல்லாம் வந்து சூழ்ந்து
மகிழ்ந்துயிர்த்த
அந்த நெருக்கம்,
அவ்விரவில் எங்கிருந்தோ
கேட்கின்ற ‘காத்தான்’,
பழகும் நாத சுர கீதம்
சேர்க்கின்ற சொர்க்கம்,
சிதைந்தேன் தொலைந்துபோச்சு?
நிலவின் ஒளிமழையில் நெடுநேரம் நீராடி
அழகிரவு நனைந்தீரம் சுவறும்
பொழுதிலின்று
அறைக்குள் செயற்கை அழகுகளை
‘தொடு திரையில்’
வருடி இரசித்துப்,
பணமும் செலவு செய்து,
வெறும் கனவில் கற்பனையில் விடாய் தீர்த்து,
நிலா அமுது
விரயமாக…
இயற்கையருள் செல்லாக் காசாக…அதன்
பெறுமதி உணராதெம்
பிள்ளைகுட்டி மகிழ்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply