இப்படியே நீழுமா இரவு?

காரிருள் சூழ்ந்து கறுத்துக் கிடக்கிரவு!
ஆழ்ந்த அமைதியுள்ளும்
அசைந்தூரும் அச்சம் ஐயம்.
வீசுகிற காற்றினிலும் விளக்க ஏலா ஓர்பதற்றம்.
காரிருளுள் வேட்டையாட,
சாமத்தில் இரைகளினைத்
தேட, .பகலிலெங்கோ ஒளித்து… வரும்
நச்சுயிர்கள்
நடமாட சருகுகள் நசிந்துதிரும்!
இவ் இரவால்
கிடைக்கும் மறைப்புள்
கிடக்கும் கறையான் புற்றுள்
பாம்புகள் இடந்தேட,
வெளவால்கள் நம் முற்ற
மாம்பிஞ்சை அரித்தகல,
மரநாய்கள் நம்வளர்ப்புக்
கோழிகளைக் கொண்டேக கொல்லைக்குள்
குறிபார்க்க,
விழிதிறந்திவ் இரவு இரகசியமாய்
நடப்பவற்றை
புலனாய்ந்து வேவுபார்க்கும்!
புதிர்களை அவிழ்க்க ஏலா
நிலவு மிக அஞ்சி…
முகில் நிழலில் ஓளிந்து கொள்ளும்!
என்றாலும் கரிய
இரவில் நடப்பவற்றை
விண்மீன்கள் சாட்சிகளாய்
விழி விரியப் பார்த்திருக்கும்!
இப்படியே நீண்டிடுமா இவ்இரிவு?
துர்க்கனவை
எப்போதும் தந்திடுமா இரவு?
இல்லை….கிழக்கின்
காம்பினிலே மொட்டவிழும் கதிர்ப்பூக்கள்!
அவை விளித்துச்
சோம்பல் முறித்தெழுந்து
துயரிரவை எரித்தெரித்துச்
சாம்பலாக்கும்!
அதன் இதழ்கள் தரையில் ஒளிபூசும்!
இரவில்மட்டும் வாலாட்டும்
இரத்தக் கட்டேறிகளை,
பேய் பிசாசை, நச்சுயிரை,
பேரொளியைக் கண்டஞ்சி
ஓடி ஒளியவைத்து…ஒளிபாய்ச்சித்
திசை திக்கை
ஊருலகம் காண உதவும்
இது நடக்கும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply