காத்துள்ளோம்!

உன்னையே நம்பித் தானே
உடல், உயிர் வாழு கின்றோம்!
உன் கரம் காக்கும் என்றே
உறுதியாய் நம்பி நின்றோம்!
என்னடா இந்தத் தொற்று
எங்கெங்கோ வாயை வைத்து
இன்று எம் காலைச் சுற்றும்!
எம் திசை தனிலும் நிற்கும்!

உன்னையே நம்பி நின்றோர்,
உன் அருள் காக்கும் என்றோர்,
உன் பணியாளர்; உந்தன்
ஒளியன்றி…மருந்தும் தேடார்,
இன்று நோய் வாயுள் நொந்து
இருக்கவோ? இறப்பை நோக்கிச்
சென்றிடும் அவரை உன் பொன்
சேவடி காப்பாற் றாதோ?

இயற்கையை மறுத்த தாலே
இயற்கையை வெறுத்த தாலே
இயற்கையைப் பகைத்த தாலே
இயற்கையை அழித்த தாலே
இயற்கையின் தண்டனை தான்
இப்பிணி என்கின் றாரே…
இயற்கையும் அறமும் ஊழி
என்பதும் நீயே தானே..!

இயற்கையை இறையை ஊழி
என்பதை மறந்தோர்….எண்ண;
உயிர்களை உருட்டி ஆட்டும்
உன் விளையாட்டுப் பற்றி…,
இயங்கியல் பற்றித்…தேர்ந்தும்
“எல்லாம் நீ” என்று வாழும்
அயலவர் நமையும் காக்க
அருளாமை சரியோ ஐயா?

ஊர் முகம் பார்க்க வில்லை.
ஒரு வார்த்தை பேச வில்லை.
நீறோடு…பழநிப் பஞ்சா-
மிருதம் நீ தரவு மில்லை.
தேர் வெளி வீதி இல்லை.
தீர்த்தமெம் வாய்க்கும் இல்லை.
கூர் வேலால் என்ன செய்யக்
குறித்தாய்? நாம் நலமாய் இல்லை!

“பஞ்சங்கள் வந்தால் என்ன
பாரெல்லாம் வெந்தால் என்ன
அஞ்சோம் யாம்” என்றோம்; நல்லை
அருள் நிழல் தனைத்தான் நம்பி
வெஞ்சமருள்ளும் வாழ்ந்தோம்!
விரைந்து நின் திக்கில் சூழும்
நஞ்சு நோய் இதனை ஓட்டி
நற்பதில் சொல்; காத் துள்ளோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply