குணம்

வானிலே சிட்டாய் மகிழ்ந்தேறிப் போம்;
நூறு
கானம் இசைத்துக் கவிக்குயிலாய்ச் சுற்றிவரும்.
மீனாக ஆழ்கடலில் விளையாடும்.
வளை நண்டாய்
ஓடி உயிர்ப்பயத்தில்
ஒதுங்க இடம் தேடும்.
மாடாய்த் திமிறும்.
மந்தியாய்க் கிளைதாவும்.
வேடமிடும்…பச்சோந்தி போல நிறம்மாறும்.
சேற்றுள் எருமையாகித் திளைக்கும்.
குழிபறித்துக்
காத்திருக்கும் பன்றியாகும்.
காமவேகக் குதிரையாகும்.
காற்றும் கலங்கப் பிளிறும் கரியாகும்.
ஏய்க்கின்ற காகமாகும்.
ஏமாற்றிக் கிளிபோல
வாய்ப்பாடும் சொல்லிவிடும்.
பூனைபோல் வளைக்க நிற்கும்.
வண்ணத்தி போல் ஒளிரும்.
உருமாறி மயிர்க்கொட்டி
என்றும் தொடச் சுணைக்கும்.
ஈசல் போல் ஏமாறும்.
பேய்க்கழுகாய் உயிரோடு கொத்த
எங்கோ வட்டமிடும்.
வீம்புநாயாய்ப் பிறரை விரட்டும்.
விசம்கக்கி
பாம்பாய் இரைபிடித்து
பசியாற அதைப்புசிக்கும்.
எட்ட இருந்து நாக் கெறிந்து
பசையில் உயிர்
ஒட்டச் சுவைக்கும்…ஓணான் தவளைகளாய்.
வெட்டுக் கிளி நுளம்பு ஈயாய்
பிறரு(வு)க்குக்
கஷ்டம் கொடுக்கும்.
கருத்தற்றுச் சில்வண்டாய்
திசைச் செவியைச் செவிடாக்கும்.
திமிங்கில வாய் திறந்தனைத்தும்
ஏப்பமிடப் பார்க்கும்.
யாரும் நிஜம் கண்டு
தொட்டாலோ அட்டையாய்ச் சுருளும்.
எதிரிவந்தால்
நத்தையாய் ஓட்டுள் நடுங்கியோயும்.
கணவாயாய்
சட்டென்று மை கக்கித் தப்பியோடி,
நரியாய்
வஞ்சகம் புரிந்து தாக்கும்.
இரக்கமின்றி…அப்பாவி
கெஞ்சவும் புலியாய் உயிர்கிழிக்கும்.
மேலாண்மை
கொண்டு சிங்கமாகிக் குரலடக்கும்!

நம் மனமோ….
மனிதனாக அன்றி
மற்ற விலங்குகளின்
குணத்தோடே கூடிய காலம்
உயிர் வாழும் !

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply