நன்றருள்வான் என்றும்.

துன்பத்தில் தேவர்கள் துவண்டு
பரம்பொருளை
அன்றழுது நேர அரனும்
நுதல்விழி
திறந்தான்…பொறி ஆறு
செந்தாமரை சேர்ந்து
உருவாச்சு குழந்தைகளாய்!
உணர்ந்து கார்த்திகைப் பெண்கள்
சீராட்டி வளர்த்தார்.
தேவி ‘உமை’ வந்துபார்த்து
ஆரத் தழுவஆறு சிரம்கொண்ட
ஒரு முருகன்
உய்விக்க வந்தான் உலகத்தை!
சூரபத்மன்
மெய்வருத்திச் செய்ததவ மேன்மைகளால்…
சோதரர்கள்
உள்ள பலத்தால்…
மேல் கீழ் நடு உலகை
அள்ளிக் குடித்தான்.
அடங்காத மும்மலங்கள்
கொண்டு எளியரைக் கொன்றான்.
அறுமுகனை
வேண்டிப் பணிந்தார்மண் விண்ணமரர்
உபவாசம்
நோன்பிருந்தார்.
வாடி நொடிந்தார்.
மனமிழகி
வந்த கடனடைப்பான் வடிவேலன்
எனப் பணிந்தார்.
கந்தன் கருணைகூர்ந்தான்;
கருகிற்று அவுணர்படை!

அந்தக் கதைதெளிந் தறுமுகனை
ஆறுதினம்
கந்தசஷ்டி நாளில் கடும்விரதம்
இருந்து…. “நம்
அந்தரங்கள் தீர்” என்று அழைக்கின்றோம்!
“கைவிடானாம்
என்றும் குகன்” என்றோம்.
எம் அகப்புறச் சூரர்
நின்றெதிர்க்க…
வேலின் நெருப்பால்
அவை, அவரைக்
கொன்றொழிப்பான்.
நெஞ்சில் குறையாத சாந்தி தந்து
நன்றருள்வான் நம் கந்தன்,
நம்பி நடக்கின்றோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply