துணை செய்க!

வாசலில் புது வாழ்வு வந்திடும்
வல்லமைகளும் தந்திடும்.
மாண்டு போனநம் மான மென்பதை
மண்ணில் மீண்டுமே கொண்டரும்.
பேசிப் பேசியே வீழ்ந்த நம்மவர்
பீட்டைச் செய்கையால் மீட்டிடும்.
பிச்சை கேட்டிடும் பீழை மாற்றிடும்
பிச்சையும் பிறர்க் கிட்டிடும்.

அந்த நாள் வரும் என்றுதான் நிதம்
ஆவலாக நான் காத்துளேன்.
அற்புதங்களும் எங்கள் கைகளால்
ஆகும் என்றுதான் பூத்துளேன்.
அந்தநாள் வரும் போலிலை; அதை
ஆர் துணை கொண்டும் கூப்பிடல்
ஆகுமோ? அதைச் செய்வம்; ஊருள
அனைவரும் துணை நல்குவீர்!

ஓர் கருத்தொடு ஓர் இலக்கொடு
ஓர் கனாவொடு வாழ்ந்திடில்,
ஓர் பலத்தொடு ஓர் மனத்தொடு
ஓர் திசை தனில் போகையில்,
யார் தடுப்பது? யார் மறிப்பது?
யார் உடைப்பது சொல்கவே…
யாவர் தாம் அதை எண்ணினோம்? தினம்
தாழ்ந்து மாண்டு நலிந்தமே!

சாதனைக்கு நாம் சேர்ந்து நிற்பதே
சரி; அதை நிதம் நம்புவோம்.
சாய்க்க நிற்பவர் திட்டம் வீழ்த்துவோம்.
தாமாய்ப் பொங்குவோம். கெம்புவோம்.
நூறு சிந்தனை உள்ள போதும் ஓர்
நோக்கில் செல்வோம். திருந்துவோம்.
“நூதனம் ஒன்று சேர்தல்” என்பவர்
நோக சேர்வோம்…கிளம்புவோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.