ஒளிர்வாய்

அழகென்ற கொடிஆடும் அகிலத்திலே -வாழ்ந்தும்
அதையாரும் இரசிக்கின்ற மனமில்லையே
வளம் கோடி குவிந்தாலும் மனம் ஏங்குதே -யாரும்
வயிறார உணவுண்ண வழியில்லையே!

வளம் யார்க்கும் பொதுவென்று வரவில்லை காண் -எங்கும்
வசதீகள் சமமாக இ(ல்)லை உண்மைதான்
பழி பாவம் எனயார்க்கும் பயமில்லையாம் -கொன்றும்
பலன் தேட பணந்தேட முயலாததார்?

சுயலாபம் பெறமட்டும் மனமேங்குது -சூழும்
சுவர்க்கத்தை நரகங்கள் என மாற்றுது
உயிரச்சம் வருமட்டும் உழைக்கின்றது -தர்மம்
உடல் வாட்டும்வரைப்…பொய்யை வளர்க்கின்றது.

எதைக்கொண்டு மறைவாயோ…எதுமில்லையே -சாவை
எதைத்தந்து தடுப்பாய்நீ…பதிலில்லையே
அதிகாரம் உளமட்டும் அழவில்லையே -நீயும்
அழும் போது அருகில் யாருமே யில்லையே!

பசியென்ற வயிறுக்கு உணவூட்டடா – வாடும்
பயிருக்கு மழையாகு உயிர் காக்கவா
நசிவோரின் வலிபோக்கு அருளூற்றடா -என்றும்
நலிவுன்னை அணுகாது…ஒளிர்வாயடா!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.