ஆதரவு வார்த்தை.

ஆதரவு தேடி அலைகிறது பலமனங்கள்!
“யாரின் பரிவும்
தமக்குக் கிடைக்காதா?”
என்கின்ற ஏக்கத்தோ டியங்கும் பல் இதயங்கள்!
ஆதரவு வார்த்தை ஒளடதமாய்,
ஒத்தடமாய்,
காயத்தை மாற்றுகிற களிம்பாய்,
சில வேளை
சத்திர சிகிச்சை செய்து
தையலிடும் கரமாய்,
கத்தி உயிர்பிரியும் கணத்தினிலே…
நிம்மதிக்காய்
நெற்றி தொடும் உறவாய்,
“கிடைக்காதா அன்பு” என்ற
நப்பாசை யோடே சாவை நோக்கி
நகர்ந்துளன
அப்பாவிப் பல உயிர்கள்!
அவைகளது ஏக்கத்தைத்
தீர்க்கின்ற ஓர் வித்தை…
கோடி கோடி செல்வத்தைப்
பார்க்கப் பெறுமதி மிக்கதெனும் யதார்த்தம்!
கோடானு கோடி சனம்
குவிந்து வாழும் இவ்வுலகில்
ஓர் உறவு, இரத்த உருத்து,
உயிர் நட்பு
யாருமில்லை;
துணைக்கு எவருமில்லை;
பாசத்தில்
ஏழை; எனத் தனித்து இருக்கும்
எவர்களுக்கும்
காசு, உதவி, பொருள், கதிரை,
பண்டம், பதவிகள் ;
ஏதுமே தேவையில்லை!
“எப்படி இருக்கின்றாய்”
என்ற ஒரு ஆதரவு, இன்சொல்,
அதற்கு நிகர்
ஒன்றுமே இல்லை இந்த உலகில்…
இதே யதார்த்தம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.