ஜெயம்

எனது விருப்பத்தை எனது கருத்துகளை
எனது சிந்தனையை
யான் பகிர முடியாதா?
எனது சுதந்திரத்தை
என் வாழ்வுரிமையினை
எனது தனித்துவத்தை
நானும் அனுபவிக்க
இயலாதா?
எல்லோரும் என்னை உற்றுப் பார்த்துள்ளீர்!
வியந்தோ புறக்கணித்தோ
என்எழுத்தை என் பேச்சை
எனது செயற்பாடுகளை
எப்போதும் நோண்டுகிறீர்!
எனை என் சுதந்திரத்தை
எங்கெங்கோ இருந்தபடி,
முகங்களை மறைத்தபடி,
முக்காடு போட்டபடி,
முகவரி முகத்தை மாற்றி,
போலிக் கணக்குகாட்டி,
கல்லெடுத்து எறிகின்றீர்.
மலம் சேற்றை வீசுகிறீர்!
எல்லை கடந்து இழிசொல்லால் அர்ச்சித்தீர்!
உங்களுக்குப் பிடிக்கவில்லை
உமக்கு உடன்பாடில்லை
என்பதற்காய் என் கருத்தில்
ஏறிச் சவாரி செய்வீர்!
நானுரைக்க விரும்பியதில்,
நான் கதைக்க எண்ணியதில்,
நான் எழுத நினைத்ததில்,
நீர் நுழைந்து நும் கருத்தை
உங்கள் விருப்பை உறுக்கித் திணிக்கின்றீர்!
என் விருப்பு ஒதுங்க,
என் நினைவு கலைய,
என் சுதந்திரம் கூட ஏன் சோலி
என்றடங்க,
உங்களது காழ்ப்புகளை
உம்மன வக்கிரத்தை
உங்கள் பொறாமைகளைக்
கொண்டுவந்து உறுக்குகிறீர்!
நீர் நும் பிழைதிருத்தீர்;
என்மேல் பிழை பிடிப்பீர்!
நீர் செய் குற்றம் மறைப்பீர்
யான் குற்றவாளி என்பீர்!
தடியெடுத்தோர் எல்லோரும் சண்டியர்கள்…
என்பது போல்
பொது வெளியில் கருத்துரைக்கும் எல்லோரும்
நீதவான்கள்…
சட்ட நிபுணர்…என்று
தீர்ப்பும் எழுதுகிறீர்!
எழுதிவிட்டுச் செல்லுங்கள்;
கல்லெடுத்து எறியுங்கள்;
அழுக்கான வார்த்தைகளில்
காழ்ப்புணர்வைக் கொட்டிவிட்டு
சேற்றை வாரி இறையுங்கள்;
சிறிதும் கலங்கேன் யான்!
காலம் …நிஜம் அறியும்.
பிறரைக் கணக்கெடேன் நான்!
காலம் என் விருப்பம், பேச்சை
என்படைப்புகளின்
நியாயத்தை
வழிமொழியும் நிச்சயம்
ஜெயிப்பேன்காண்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.