காண் நிஜம் பொய்யும்!

காலன் வருகிற நாளு -எது
கண்டு முதலே தெரிந்தவர் யாரு?
சாவின் பின் போவதெவ் ஊரு? -அங்கு
தண்டனையோ விருந்தோ உனக்குண்டு?
ஆலம் அமுதமும் தின்று -எதை
யார் எங்கு என்று வெல்வார் தெரியாது.
ஆம்… இவை போல் கேள்வி நூறு. -விடை
அற்றுக் கிடக்குதூர் கற்றும் (;)நீ தேறு!

கற்றது கைமண் அளவே-இங்கு
கல்லாதது இந்த உலகிலும் மேலே
”முற்றும் தெளிந்தவர் இல்லை -வாழ்வின்
மூலத்தை… “என்ற முன்னோரின் சொல் தீர்ப்பே!
பற்றை வளர்த்திடும் போதும் -எங்கள்
பங்கு எல்லை பற்றி உணர்ந்து தெளிந்தே
பாருக்குழைத்திடு யாண்டும் -வையம்
பாலிக்க ஒவ்வொருவர் பங்கும் வேண்டும்.

எல்லாம் தெரிந்தவர் இல்லை -மண்ணில்
எல்லாம் அறிந்து ஜெயித்தவர் இல்லை.
எல்லோராலும் எல்லாம் ஆகும்- என்ப
தியற்கையில் இல்லை; சமநிலை கொண்டே
எல்லாம் இயங்கிடும் என்றும்! -இதில்
ஏது இடைவெளி வெற்றிடம் எங்கள்
எல்லைக்குள் தோன்றுதா? தேறும் -ஆளும்
இயற்கையை மாற்றல் எவராலே ஏலும்?

கோடி கோடி பேர்கள் வந்தார் -பல
கோடி கோடி பேர்கள் வாழ்ந்திருக்கின்றார்.
கோடி கோடி பேர் வருவார் -இன்னும்
கோடானு கோடிபேர் வருவர் பின் போவார்.
வாடியா போனது மெய்யும்? -யாரும்
மாண்டனர் என்று மடிந்ததா வையம்?
வான், மண்ணை காத்திடும் தெய்வம் -உண்டு
மாற்று உன் ஆணவம்; காண் நிஜம் பொய்யும்!

இன்று இருக்கும் விஞ்ஞானம் – நாளை
இன்ன இன்ன பிழை என்று திருத்தி
முன்னேறும்; ஆம் இதே தீர்வு -என்று
முடிந்த முடிவென்றடங்காது ஞானம்!
பென்னம் பெரும் பிரபஞ்சம் -அதில்
பித்துக்குளி உந்தன் தீர்ப்பெதைச் செய்யும்?
என்றும் நிலைத்திடும் சக்தி -திக்கை
இன்னும் இன்னும் முன்னேற்றி இயக்கும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.