வாழ்வைத் தொலைக்கும் வழி.

நிலத்தினடி நீர்தான் நிலைத்த வளமெமக்கும்!
நிலத்தடியில் எம் ஊரில்
தனித்துவமாய் நிற்கின்ற
சுண்ணக்கற் பாறைப் படுக்கைமேல்
வடிந்து தேங்கும்
தண்ணீர்தான் எம்வாழ்வின்
தாகம் தணிக்கவைக்கும்!
காசுக்குத் தண்ணீரை நாம்வாங்காக் காலத்தில்…
“காசுக்குத் தண்ணீரா”
என வியந்த காலத்தில்…
ஆழக் கிணறகழ்ந்து,
ஆடுகால், துலா மிதித்து,
தேவைக்கு கப்பி பட்டை தெரிந்து,
தேகம் களைத்து வேர்க்க
ஊற்றுவந்த நீரை உறுஞ்சி உயிர்வளர்த்தோம்!
மாற்று வழிகளற்று
மண்ணுள்ளே மாரியை நாம்
குளங்கள் துரவுகளால் குறையாமல் தேக்கி…
நம்
வளவில் கிடங்கு வெட்டி…
வரும் குளைகள் குப்பை கொட்டி…
வடிந்து தண்ணீர் ஊறி
மண்ணினடிப் பாறைகளில்
குடியிருக்க..
நீண்ட கோடைக் கொடுமையிலும்
குறைவின்றி நீர் கொண்டோம்!
குறையாக் கனிப்பொருட்கள்
கரைந்த கிணற்றுநீர்,
கழிவகன்ற ஊற்றுநீர்,
குடித்து உடல் வளர்த்தோம்!
குடியிருந்த சகலருந்தான்
குடித்தும் உயிர் களித்தோம்!
அன்று…. வேலி, ஒழுங்கைகளால்
வாரடித்து ஓடி வெள்ளம் வற்றி
நிலம் குளிர்ந்து
ஈரலிப்புக் குன்றாது இருந்தது;
எண்திசையும்
ஈரஞ் சுவறி இழைந்தது;
பயிர் பச்சை
ஊரெல்லாம் பொலிய
உணர்வும் பசுமையாச்சு!
இன்றெங்கள் காணிகளைப் பிரித்து…
எல்லை மதிலமைத்து…
மந்தை மழைவெள்ளம் நகராமல்
தடை வகுத்து…
வெள்ளம் பெருக,
வீதி வெள்ளக் காடாக,
உள்ளே நிலத்துள்ளே ஊறி-
இறங்க வைக்க
அனுமதியோம்!
அவ்வளவும் ஆழ்கடலுக் கனுப்புகிறோம்!
மனம் போன போக்கிற் தான்…
மழைமுழுதும் ஓட வைப்போம்!
“ஒரு துளியும் வீணாய்க் கடல் சேர
உடன்படேன் யான்
திரு அதுதான் எமக்கு” என்ற
தேர் வேந்தன் தனை மறந்தோம்!
எப்படியும் வெள்ளம் எமக்கு இடைஞ்சலற்று
இப்பவே போக வைப்போம் என்று
பாதை வெட்டி விட்டு
எல்லாம் கடல் சேர
எல்லலையில்லா மகிழ்வோடு
“இல்லை கிணற்றுநீர்” என்று
கோடை வறுக்கையிலே
உயிரற்ற,
கனிப்பொருட்கள் உதிர்ந்த,
போத்தல் நீரைத்
தருவித்துத் தண்ணீர்க்கும் செலவழித்து
தாகத்தை
அரைகுறையாய்த் தீர்த்தோம்…
அறிவுக் கொழுந்துகள் தாம்!
‘நிலத்தடி நீர் தான் நிலத்தின் வளம் எமக்கு’
வளத்தைத் தொலைத்தோம்….
வாழ்வையுமா தொலைக்கிறோம் நாம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.