கேள்விச் செகிடர்.

வானம் அதிரந்ததென -இடி
மண்ணில் விழுந்ததென
கானம் பிறந்ததடா -கனல்
கண்ணைப் பறித்ததடா
ஈனம் களைந்திடவே -எழும்
ஈடில் இசை அதனை
மோனப் பயலிவர்கள் -இரசியார்
முத்தியா கண்டிடுவார்?

அண்டம் நடுநடுங்கி -திசை
அத்தனையும் குலுங்கி
கண்டங்களும் கலங்கி -கடல்
காற்றும் அழும் மலங்கி
விண்ணும் செவிடுபட -முழங்கும்
வீரக் குரல் வணங்கி
மண்ணுள்ள பேடியர்கள் -கேட்க
வாய்ப்புள்ளதோ விளங்கி?

மண்ணின் புதுமை எழ -வெடிக்கும்
மான இசையதனை
புண்ணினைக் காயவைக்கத் -தடவும்
புனுகு மருந்திசையை
உண்ணத் தெரியாதோர் -சோற்றில்
உடல் வளர்த்திடுவோர்
எண்ணார்; உயிர்ப்புணர்தோர் -அருந்தி
என்றும் மகிழ்ந்திருப்பர்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.