நன்றி

என் ‘நா’ வயலைச் சாறி
இழுத்துழுது
அன்று ‘நீ’ நட்ட அருள்விதைகள்
கடகடென்று
இன்று முளைத்தெழுந்து
‘இம்’ மென்னும் முன்னாலே…
எண்ணுக் கணக்கற்ற
வார்த்தை மலர், கனியை
மன்றில் சொரிகின்ற வரத்தை
வழங்கியது!
காலமோ இயற்கையோ கடவுளோ
தொடர்ந்தெனது
நா வயலில் நீர் வார்க்க;
மாதம் மும் மாரி பெய்யத்
தூண்ட;
என் விளைச்சல் தொடர்ந்து
பேச்சு, கவிதைகளாய்
ஊறிக் கொண்டிருக்கிறது…
‘உன்னை’ வணங்குகிறேன்!
ஏனெதற்கு என்று தெரியாது
எனைத் தேர்ந்து
ஏதோ எனக்கூடாய்
நன்மை பார் காணவைக்கும்
காலம், இயற்கை, கடவுளுக்கும்
நன்றி சொல்வேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.