தேர்ப்பவனி

வாழ்வென்னும் தேரோ… மனமென்னும் சாமியுடன்…
ஆசைகள் வடம்பிடித்து அனுதினமும்
இழுத்திருக்க
ஓடிக்கொண் டிருக்கிறது!
ஊரில் அதுபோகும்
பாதையிலே பாதித் தொலைவு
கடந்தபடி
ஆரவாரம் குன்றாமல் அது
நகர்ந்து சென்றிருக்கு!
அதுநகர… ‘சறுக்குக் கட்டை’ அதற்கிட்டு
அது சரியாய் நிற்க, அசையத்,
திரும்பிவிட,
பாதை விலகாது பயணிக்கச்,
செய்கின்றாய்-
நீ….அறிவேன்!
நேற்றும் நீ சரியாய் நகரவைத்தாய்.
இன்றும் நகர்த்துகிறாய்.
இனி நாளையும் சரியாய்
நின்று ‘சறுக்குக் கட்டையிட்டு’
‘நிறைவு’மட்டும்
கொண்டந்து ஒப்பேற்றிக் கூறிடுவாய்
வாழ்த்தென்பேன்!
ஒவ்வொரு ஆசைகளும்
ஒவ்வொரு விதம் இழுக்க
எவ்வாறு நின்திறமை
என் வாழ்க்கைத் தேர்தன்னை
நேர்வழியில் செலுத்தியது என்பதனை
யான் நினைத்துப்
பார்க்கின்றேன்!
நீயோ பலனை எதிர்பாராமல்
ஆசீர் வதிக்கின்றாய்!
ஆர்ப்பாட்டக் காவடிகள்,
பாற்குடப் பவனிகள்,
‘அடியவரின்’ பிரதட்டை,
மேளச் சமாக்கள் விதவிதமாய்
என்வாழ்க்கைத்
தேரினைச் சுற்றித் தெறிக்கிறது!
அதன்பவனி
ஊர்வலத்தை ஊருலகம்
பார்த்தும் வியக்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.