வெல்வோம்

வாழ்வு வருமென்று வாசல் தனில் நாளும்
வாடி, வழிபார்த்து உள்ளோம் -மன
வாட்டம் தனில் மாரி ஊற்றும் அமுதென்று
வானம் தனைப்பார்த்துக் கொள்வோம் -நிதம்
சூழும் இடர் வீழும், சோதனைகள் தீரும்
சொர்க்கம் வரும் நம்புகின்றோம்-தொடர்
தோல்வி அழும்; காலம் தோளைத் தொடும்; மீண்டும்
சூரரென நாளை வெல்வோம்!

நேற்று நெடும் போரில் நீறி எழுந்தோமே
நெஞ்சின் வடு ஆறவில்லை – உயிர்
நீழல் தனைத்தேடி இன்றும் அலைந்தாடும்
நீதி…அருள் காண வில்லை -எமை
தேற்றத் துணையில்லை, தேவதைகள் ஏதும்
தீர்வு தரத் தோன்ற வில்லை – மனம்
தேம்பும்; இறை காலம் காட்டும் வழியென்று
தேடும்…துயர் வீழ்த்த ‘வில்லை’!

யாவும் தொலைந்தாலும் இலாபம் அழிந்தாலும்
சாவு மலிந்தாலும் வாழ -கணம்
வாடும் பயிர் நாங்கள் மாறித் துளிர்த்தோங்க
வல்லமைகள் கொள்வோம் மீள -வரும்
காலம் இழப்புக்கு ஈடு செயும்; நாளை
காக்கும்; தொடர் தீமை வீழ – எனக்
கால்கள் நடைபோடும், நம்பும் உளம், கண்கள்
காணும் வழி…நாமும் ஆள!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.