கஞ்சிக் காதை

தோட்டாவும் குண்டும் துளைக்கக் ‘கடைசியாக’
கேட்பார்கள் அற்றே இனம் கிழிந்த – நாட்களிலே
கெஞ்சித் துவண்ட பசிவயிற்றைக் காத்தது..இக்
‘கஞ்சி’ அதைமறவா தே!

ஊர்கள் ஒருகரையில் ஓய்ந்தொதுங்க,
நாலுலட்சம்
பேர்கள் உயிரைப் பிடித்தபடி –
போர்க்களத்தில்
நின்று நிலைகுலைய,
நீறாகாமற் கஞ்சி
ஒன்றே உயிர்காத்த தாம்.

கண்ணீரின் உப்பும், கடற்காற்றின் உப்பதுவும்,
சிந்திய இரத்தச் சிறு உப்பும், -கொண்டதனால்
‘முள்ளிவாய்க்கால்’ கஞ்சியோ
உப்புக் கரித்ததன்று,
அள்ளி வேட்டு உண்ட ததை.

பஞ்சமும் பட்டினியும் பாடாய்ப் படுத்திவிட,
வஞ்சகமோ வீழ்த்த வலைவீச, -தஞ்சமென
அஞ்சிக் கிடந்த கரை ஆப்படிக்க,
வெந்தவரை
கஞ்சிதான் மீட்டதுயிர் காத்து.

ருசி பார்க்க நாவிலுமிழ் நீருமில்லா,
முற்றாய்
பசிக்கொடுமை போக்கப் பதிலும்
-ரசிப்பதற்கு
நேரமும் இல்லா, நெருப்புமூண்ட ராப்பகலை
போஷித்த கஞ்சிபுகழ் போற்று.

அன்று சுமந்த அவலம், இடர், அழிவு,
இன்று சுவடெச்சம் ஏதுமற்று -சந்ததிமுன்
மெல்ல மறைந்துபோகும்;
மீட்டவற்றை இக்கஞ்சி
சொல்லும் புவிக்குத் தொடர்ந்து.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.