தமிழ்க்கவி

“கடவுளைக் காணலாம் கவிதையில்” என ஒரு
கவி…இவன் பறைவதை அறிக.
கனவையும் நனவையும் கண்டுரை செய்வதே
கவிதையின் தொழில் இதைப் புரிக.
விடயங் களுக்குள் வியப்புப் பலகண்டு
விளக்கிடும் ‘நொடி’..கவி தெரிக.
விபரிக்க முடியாத விதி தத்துவத்தையும்
விதையென தரும் அவை பரவ.

தமிழ்க்கவி பிறந்து வளர்ந்து விளைந்திட்ட
தருணம் எது எவர் அறிவார்?
தரணியில் முதற் கலை கவி…அதன் முகவரி
தடை தகர்த்தொளிருது கதிராய்.
எமதுயர் சரிதமும் உரைப்பது கவிதையே
இதன் தனித்துவம் ஓசை உணர்வாய்.
இதை மறுதலித்து எம் முகம் அழித்தெவ்வாறு
இலக்கியம் வளர்க்கிறாய்? தெளிவாய்!

“தமிழக்கவி இது” எனத் தரும் புதுக் கவி வரி
சனங்களின் மனங்களில் செழித்தே
தளைக்கலை; ஏட்டினில் பெருகிக் குவிந்தன
சருகுகளாய்ப் பல சிதைந்தே
அழிந்தன…காலத்தால் அடிக்கோ டிடும் வரி
அவை தரவில்லை காண் நிலைத்தே.
அதிசயத் தனித்துவ அசற் தமிழ்க் கவிதையை
அகச்செவி கடத்துமாம் இரசித்தே!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.