கோடைத் தகிப்பு

தாரும் உருகிடுது.
தாவரங்கள் கருகிடுது.
வேரும் பதறிடுது.
விலங்கெல்லாம் வாடிடுது.
நீர்…ஆவியாக நெடுங்குளங்கள்
வற்றிடுது.
ஈரமற்று மண்கல்லும் இரும்பும்
கொதித்திடுது.
நாராய் வதங்கியிந்த
நாற்திசையும் காய்கிறது.
வீசி வந்த காற்று வெந்து
‘புழுக்கொடியல் வடகமாச்சு’.
காய், பிஞ்சும், மீனும்,
யாரும் உப்புப்போட்டுக்
காய வைத்திடாது ‘வற்றல்
கருவாடாய்’ மாறிடுது.
ஆழியும் சூடேறி
அந்தரப் படுகிறது.
ஊரும் அனலில் ஒளிர்ந்து தகித்திருக்கு.
கோபம் கொதி கூடி
மனம் கொழுந்து விடுகிறது.
சோர்ந்து துவண்டு உடல் களைத்து
தாகத்தில்
கானலைக் குடிக்கக் கலைத்து
நா உலர்கிறது.
“சூடின்னும் கூடும் தொடர்ந்து”
என்னும் செய்தியிடை
ஊறும் புழுக்கத்தில்
உணர்ச்சிகள் அவிந்திருக்க
ஊனும் உருகி, வியர்வை என ஒழுகி,
தோலும் கருகி,
உயிர் துடித்து வாடுமுன்னம்
ஏதும் சிறு மாரி எமக்கு அருளோணும்!
கோடைத் தணல் ஒடுக்கிக்
குளிர் காற்றுத் தொட வேணும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.