தடம்

என்னுடைய காற்தடங்கள்
எனது வழியெங்கும்
விரவிக் கிடக்கிறது.
அது மண் ஒழுங்கையிலும்,
ஊர்த் தார் வீதியிலும்,
சீமெந்துத் தரையினிலும்,
சேறு சகதிக் கரைகளிலும்,
இன்றுவரை
பரவிக் கிடக்கிறது.
காற்று புயல் மழைக்கு
கரைந்தழிந்து போயிடலாம் அது என்று
நீவிரெல்லாம்
கருதிடலாம்;
அழிந்து மண்ணோடு மண்ணாகிப்
போய்விடும் என்று
சிலர் புறுபுறுத்திடலாம்.
ஒருவேளை உங்களது கண்களுக்கு
அவையெல்லாம்
தெரியாதும் இருந்திடலாம்.
அதன் மேல் நடந்தவரின்
தடங்கள் மறைத்திடலாம்.
எனினும் என் கால்பதிந்த
தடங்கள் என்றென்றும் என்நனவுப்
பாதைகளில்
தொடரும்;
உம் நினைவுப்
பாதைகளிலும் பதியும்.
காலத் தெருவில் கட்டாயம்
அவையொவொன்றும்
ஊன்றிப் படிந்திருக்கும்.
‘உயிர்க்கதை உரைக்கின்ற
அவைகள்’ என் பயணத்தின் அருமையைச்
சரிபிழையை
அவசியத்தை
வரலாற்றில் அவை செலுத்தும்
தாக்கத்தை
எவரெவர்க் குரைக்கணுமோ
அவரவர்க் குணர்த்திவைக்கும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.