பயன்

அறிவு வளர…
ஆணவமும் தன்முனைப்பும்
பெருகும்.
பிறரையெல்லாம்
பேயரென்று பரிகசிக்கும்.
மேவும் அறிவாலே,
விளையும் துணிவாலே,
“யானறிவேன் யாவையும்” என்ற
மமதையாலே,
“யாரிருப்பார் மேல்”என்ற தடிப்பாலே,
தான் நினைத்த
யாதையும் அடைய எண்ணும்.
யாவரையும் மறுதலிக்கும்.
“பேதையர்கள்” என்று
பிறரைப் புறக்கணிக்கும்.
போலிப் பெருமைகளைப் பூண்டுலவும்.
மெய்நட்பைக்
கூட மறக்கும்.
குறுக்கு வழிகண்டு
போய்…வெற்றி மாலைகளைப்
பூண ஏங்கும்.
அனைவரையும்
ஏமாளி முட்டாள்கள் என்று
எடைபோட்டு அவரை
ஏமாற்றி அவர்களைக் கொண்டே
பதவியேறி
ஆளவும் முயலும். தன்
அசிங்கம் தவறுகளைப்
பூசியும் மெழுகும்.
புனிதரெனத் தமைக்காட்டி
ஓர் நிலையில்
“இறையும் தானே” என உளறும்.
“ஆகும் அனைத்தும்” என ஆர்ப்பரித்து
சிறுகல்லில்
தடக்கி விழுந்து…
சரித்திரத் திருந்தகலும்!
கிடக்கும் வரலாறு கீதைசொல்லும்;
கேட்பவர் யார்?
அடையவல்ல நன்மைகளை அடைந்து உயராமல்
தொடரும் இது;
அறிவின் பயன்…
என்னாகிவிடும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.