ஓரறிவும் ஆறறிவும்.

மரத்திற்குத் தெரியுமா அதனின் இலையுதிர்வு?
மரங்கள் உணருமா
இலைகளின் பிரிவுவலி?
இயல்பாய் முதிர்ந்த இலையின் உதிர்வு…மர
உயிரை உலுப்புமா?
இல்லை எதும் சலனம்
இல்லாது;
மரத்திற்கு இடையூறு இல்லாது;
மெல்ல உதிர்கிறதா?
மேனியெங்கும் இலைகொண்ட
மரம்…இலையுதிர் காலத்தில்
உடல் முழுதும்
பெரு வலியைக் கண்டிடுமா?
எதும் துயரம் கொள்ளாதா?
காலடியில் உதிர்ந்து சருகாகும்
இலைகளினைப்
பார்த்து மரம் பரிதாபம் கொண்டு இரங்காதா?
பூக்களுக்கு இலைகளை விட
முக்கியம் தருமா?
பழுத்த இலையுதிர்வில்
இளைய இலையழிவில்
உளவியற் தாக்கங்கள் உள்ளே
மரம் கொண்டு
அழுவதுண்டா?
ஆரும் அறுத்து இலை, பூவை
பறிக்க மரங்களுக்கு நோகாதா?
இப்படியாய்த்
தெறித்தன கேள்விகள்!
‘அவற்றின்’ ‘ஓரறிவு’ உணர்ந்து
ஆசுவாசப் பட்டேன்!

ஆனால் சட மனிதர்…
‘ஆறறிவு’ கொண்டோர் ….அவரின் உறவு உருத்து
வீழும் வலியுணர்ந்தும்;
வீழ அவர் குடும்பம்
தாழும் நிலையுணர்ந்தும்;
தமக்குள் கவலையற்று …
வாழவைக்க ஏதும்
வரம் உதவி வழங்காது…
வாழ்வதனைக் கண்டு
மனதால் அழுகின்றேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.