பேதப் பாடல்

காற்றினது பாடல்கள் கலந்தன ககனமெங்கும்.
காற்றினது கீதங்கள்
கரைந்தன திசைகளெங்கும்.
கடலினது பாடல்கள் கடக்குந்
தொடுவானெங்கும்.
மேகத்தின் பாடல்கள்
விரிகிறது விண்ணெங்கும்.
தீயினது பாடல்கள்
கிளைக்கிறது திக்கெங்கும்.
மண்ணினது பாடல்கள் மட்டுமே…
தமக்குள் தாம்
குறிச்சி, மத, ஜாதி, மொழி, எல்லையிட்டு;
குதறி நூறு
சுரபேதத் தோடு
தொடர்ந்து பிளவுற்று;
இது உயர்வு தாழ்வென்றும்
இது சிறப்பு கீழென்றும்
தமக்குள் அடிபட்டு;
தரம் தாழ்ந்து விமர்சித்து;
முழுதாய் ஒருவரியும் முடிவுறாது;
துண்டுதுண்டாய்ச்
சிதைந்து சுருதியும் சேராது சிதறிடுது!
மண்ணினது மைந்தர் நாம்
“அனைத்தையும் வசப்படுத்தும்
விண்ணர் யாம்” என்கின்றோம்.
மண்ணின் அடையாள-
வண்ணம் ‘முழுதாய்’ வரும்பாட்டை
என்றுமே
கேட்க முடியாத கேவலத்தை
மறைத்தபடி
“மீட்போம் விரைந்துலகை”
என்று விளாசுகிறோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.