கடன்

இந்த மண்ணது எங்கள் மண்ணென
இன்று சொல்லிடக் கூடுமோ?
எம் சிறப்புகள் எம் தனித்துவம்
இங்கு இற்று நீர்த்தோயுமோ?
அன்னை மண் முகம் மாறுமோ? அயல்
அந்நியம் புகுந்தாளுமோ?
அன்றிருந்து நாம் கட்டிக் காத்த நம்
அதிசயங்களும் நாறுமோ?

எங்கள் தாய்நிலம் எண்ணிலாக் கலை
கேள்வியால் நிமிர்ந்திட்டது.
எங்களின் மொழி எங்களின் மதம்
ஈடிணைகளும் அற்றது.
எங்கள் வாழ்வியல் எம் இலக்கியம்
ஏற்றம் கோடிகள் கொண்டது.
இன்றிவைகளும் என்ன ஆனது
ஏன் இளைத்துச் சிதையுது?

எம் தனித்துவம் சாய வேணுமென்
றெமை வெறுப்பவர் எண்ணுவார்.
எங்கள் வாழ்வில் தம் அந்நியங்களை
ஏற்றி ஒட்ட முயல்கிறார்.
எம்மிடை பிளவோங்கவும் பிரிவு
ஏறவும், வழி செய்கிறார்.
எங்களின் அடையாளமற்று நாம்
இழிய வேணுமென் றேங்குவார்.

எங்களின் தரம், எங்கள் பண்புகள்,
எம் மொழி, சம்பிரதாயமும்,
எங்களின் குணம், எங்களின் குரல்,
எம் கவி, இசை, நாடகம்,
எம் மரபுரிமைகள், புகழ்
எங்கள் ஊரின் வழக்கையும்
இன்று பேணுவோம்; எங்கள் மண்ணிலே
எம் சுயம் நிலை நாட்டுவோம்.

எம் ஸ்திரம் அற்ற பாழ் அரசியல்,
எம் பலவீனம், தோல்விகள்,
இங்கு எங்களை மேலும் தாழ்த்திடும்
எண்ணிலாப் பகை பேதங்கள்,
எங்களுக்குளே ஏதிருப்பினும்
“எம் தனித்துவம் காப்பதே
எம் தலைக்கடன்” என்றெமெல்லையின்
இயல்பைக் காத்து உயர்த்துவோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.