பாதைகள்

பாதைகள் முடிந்ததில்லை.
யார் யாரோ பயணித்துத்
தேவையென அன்றொருநாள் செய்தும், திருத்திவைத்தும்,
போட்டுவைத்த பாதைகள்
புயல் மழைக்குள் புதைவதில்லை.
வாட்டிய வெயில் அனலுள்
வாடிச் சிதைந்ததில்லை.
என்றும் அவையிருக்கும்;
எங்குபோய்ச் சேர்வதென
அன்று அதுஉரைத்த அதேஇலக்கை
இன்றும் தான்
அது காட்டும்;
அங்கங்கே என்ன தடையுளதோ
அதையெல்லாம் எவ்வாறு அகற்றிக்
கடப்பதென்று
இன்றும் அதுசொல்லும்;
“என்ன தடை இவைகள்”
என்று மலைக்காது
ஏளனமாய்த் தான் பார்க்கும்;
முன்னேறி வந்தாலோ…
மூலைக்கு மூலைஉண்டு
வழியென்னும்;
பயணிக்கும் மனிதர் யார் எவரெனினும்
தெளிவிக்கும்;
தோன்றும் தடை எளிதாய் அகல வைக்கும்!
பாதைகள் முடிந்ததில்லை!
பாதைகளின் தேவைகள்
ஏதும் குறைந்ததில்லை!
எந்தப் பாதையைநீ
தேர்ந்தெடுப்பாய் எனபதிலுன்
திறம் தெரியும்
தெளிக இதை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.