எனை எனக்கு உணர்த்து

கனவில் வந்து கவிதை தந்து
கலைந்து போகிறாய் – எந்தன்
கவலை தீர்க்கும் மருந்து தந்து
கடந்து ஓடுவாய்.
நனவில் நின்று நிழல் உவந்து
நனைப்பதெந்த நாள்?- மனம்
நரைத்திடாமல் நமனை வெல்ல
நகரும் எங்கள் கால்!

உனது பாசம் உனது நேசம்
உதிர்ந்திடாதது -என்றும்
உடலைத் தாண்டி உயிரை நோண்டி
உயிர்க்கும் வேரது.
தினவு தீரும் பொழுது உந்தன்
திருமுகம் அது- எந்தன்
செயலைத் தூண்டி இயங்க வைக்கும்
சிறப்பும் கொண்டது!

கொடிய காலம் அணுகும் போது
குரல் கொடுக்கிறாய் – அந்தக்
கொடுமை தாண்ட குதிரை யாக
குதித் துதவுவாய்.
விடைகள் தேடி அலையும் நேரம்
விடையுமாகிறாய்- மோதி
விதியை வென்று விளையும் நேரம்
விருதுமாகிறாய்.

உனை நினைந்து உனைப்பணிந்து
உயிர்வளர்க்கிறேன் -என்றும்
உனது நீழல் சரண மென்று
உருகி நிற்கிறேன்.
“எனை எனக்கு உணர்த்து தற்கு
இரங்கு” கேட்கிறேன்- என்றும்
இதயம் தன்னை இயக்கு ..இன்றும்
இறைஞ்சித் தேடினேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.